ஆந்திரா நகரி மக்களால் VVS என்று அழைக்கப்படும் பிரபல வக்கீல் V.V.சண்முகம் முதலியார்
பிறப்பு:
1935-ம் ஆண்டு ஜீன் மாதம் 10-ம் நாள் ஆந்திரா மாநிலம் நகரி புதுப்பேட்டையில் செங்குந்த கைக்கோளர் குலம் அதியமான் கோத்திரம் பங்காளிகளை சேர்ந்த விச்சுளி வெங்கடேச முதலியார் - சிவகாமி அம்மாள் தம்பதிகளுக்கு மூன்றாம் குழந்தையாக பிறந்தார்.
உடன் பிறந்தோர்:
இரண்டு சகோதரர்கள், ஆறு சகோதரிகள்,
மூத்த சகோதரர்:
திரு.V.K.சீனிவாசன், முன்னாள் சித்துார் மாவட்ட பிரஜா பரிஷத் தலைவர்.
இளைய சகோதரர்: திரு.V.V.சோமசுந்தரம B.A.B.L,
கல்வி:
Advocate (Formerly Dy Dr.of Prosecution/CBI Prosecutor)
ஐந்தாம் வகுப்பு வரை புதுப்பேட்டை அரசினர் தமிழ் மற்றும் தெலுங்குப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு அரக்கோணத்திலும், ஏழாம் முதல் பத்தாம் வகுப்பு வரை புத்தூரிலும் பயின்றார்.
பதினொன்றாம் வகுப்பு (SSLC) அரக்கோணத்திலும், பிறகு,
Intermediate சென்னை விவேகானந்தா கல்லுாரியிலும்
B.A (Hons) சென்னை பச்சையப்பன் கல்லுாரியிலும்
B.L. சென்னை சட்டக் கல்லுாரியிலும்
M.A.(Politics) சென்னை பல்கலைக்கழகத்திலும்
D.P.P.A சென்னை பல்கலைக்கழகத்திலும்
(Dip in Politics & Public Admn) नं
Diploma in Journalism படித்து இந்து (The Hindu) ஆங்கில செய்தித்தாளில் உதவி ஆசிரியராக (Sub Editor) ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றார்.
இல்லறம்:
1961-ம் வருடம் தம் தந்தையாரின் புதல்வியின் மகள் இலட்சுமியை திருமணம் புரிந்து இல்லறம் ஏற்றார்.
மக்கள் செல்வம்:
மூன்று மகன்கள், மூன்று மகள்கள், V.S.Ravi M.E, V.S.Mohan Β.Ε, V.S.Venkatesan B.Sc., R.T.Vijaya D.C.E, R.S.Devaki B.A, V.S Amutha M.Sc
வழக்கறிஞர் தொழில்
1962-ம் வருடம் வேலூர் திரு.V.C.சதாசிவம் அவர்களிடம் இளநிலை வழக்கறிஞராக (Junior Advocate) பணி புரிந்தார்.
1964-ம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் திருத்தணியில் தனியாக வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.
சிவில் மற்றும் கிரிமினல் துறைகளில் ஆயிரக்கணக்கான வழக்குகள் ஏற்று நடத்தி வெற்றி கொண்டுள்ளார். ஏழை, எளிய கட்சிக்காரர்களிடம் குறைந்த கட்டணம் வாங்கிக் கொண்டு அவர்களுடைய வழக்குகளை நடத்தினார்.
திருத்தணி அருள்மிக சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வழக்கறிஞராகவும், திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களில் இயங்கி வந்த அரசுடைமை की SBI, Syndicate, Indian Bank, IOB, Canara Bank ரயில்வேயின் வழக்கு ஆலோசராக பணியாற்றியுள்ளார்.
V.V.S அவர்களுக்கு அறுபது வயது நிறைவடைந்த உடன் வழக்கறிஞர் தொழிலில் நுழைந்துள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்பியதால், தம் வழக்கறிஞர் தொழிலில் இருந்து தானாகவே ஒய்வு பெற்றார்.
VVS-ன் பல்வகைப் பணிகள் கல்விப் பணி:
ஏழைக் குழந்தைகள் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என விரும்பி திருத்தணியில் 1969-ம் ஆண்டு முதல் ஆண்கள் மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள், கல்லுாரி முதலியவற்றில் இன்றியமையாத பொறுப்புக்களை ஏற்றுச் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
திருத்தணி ஆண்கள் உயர்நிலைப் பள்ளி-யை மேனிலைப் பள்ளியாக உயர்த்துவதற்கு கட்டிடக் குழுவின் செயலாளராகப் பணியாற்றி, நன்கொடை அளித்து, வசூல் செய்தும் அரசுக்கு உரிய நிதி செலுத்தி மேனிலைப் பள்ளியாக்கப் பெரிதும் உதவியுள்ளார்.
1976-ம் வருடம் திருத்தணி அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று, சத்திரத்தில் இயங்கி வந்த பள்ளிக்கு நன்கொடை அளித்தும், வசூல் செய்தும், 1981-ம் வருடம் அப்போதைய கல்வி அமைச்சர் திரு.அரங்கநாயகம் அவர்களால் புதிய கட்டிடம் திறந்து வைக்குப் பெற்றது.
பின்னர் அதே பள்ளிக்கு கட்டிடக் குழுவின் தலைவராக இருந்து மேனிலைப் பள்ளியாகவும் மற்றும் ஆசிரியர் பயிற்சி வகுப்பு தொடங்கவும் பெரு முயற்சி எடுத்து அதை நிறைவேற்றினார்.
1968-ம் ஆண்டு திருத்தணியில் கலைக் கல்லுாரி தொடங்க வேண்டும் என விரும்பி அந்நாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் K.விநாயகம் அமைத்த குழுவில் உறுப்பினராக பணியாற்றி திருத்தணி அருள்மிகு.சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பெரும் நிதி அளித்து அக்கல்லுாரி ஏற்பட பெரிதும் உதவியது. இக் கல்லுாரியின் கல்வி அறக்கட்டளை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சமூக நலப்பணி
1969-ம் வருடம் திருத்தணியில் அரிமா சங்கம் (Lions club) உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவராவார். இச்சங்கத்தின் முதல் செயலாளர் (Charter Secretary) பொறுபபேற்று சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.
1977-ம் ஆண்டு திருத்தணியில் வசிக்கும் செங்குந்தர் மரபினர்கள் "செங்குந்தர் நல மன்றம்” என்னும் ஒரு சங்கத்தை நிறுவ உதவி செய்து அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1981-ம் ஆண்டு தமது சீரிய முயற்சியாலும் மற்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பாலும், சித்துார் பைபாஸ் சாலையில் நிலம் வாங்கி அதனை மனைகளாகப் பகுத்து "செங்குந்தர் நகர்” எனப் பெயரிட்டு, அரசு அங்கீகாரம் பெற்று, மனைகளை சங்க உறுப்பினர்களுக்கும், தம் மரபினர்களுக்கும் அடக்க விலையில் வழங்கினார்.
1979-ம் வருடம் மார்ச் மாதம் திருத்தணி செங்குந்தர் நலமன்றம் சார்பில் திருத்தணி மற்றும் ஆந்திரப் பகுதியில் வாழும் செங்குந்தர் பெரியோர்களை அழைத்து, திருத்தணி நகரில் செங்குந்தர் திருமண மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாக 1980-ம் ஆண்டில், "செங்குந்தர் முன்னேற்றச் சங்கம்" நிறுவி, அதன் முதல் செயலாளராக பொறுப்பும் ஏற்றார்.
V.V.S அவர்கள் இச்சங்க செயல் அலுவலகத்தை தன் வீட்டில் வைத்துக் கொண்டு, இடம் வாங்கி மற்றும் கட்டிட வேலை முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு, தம் வழக்கறிஞர் தொழில் பாதிக்கப்பட்ட நிலையிலும், 1988-ம் வருடம் "செங்குந்தர் திருமண மாளிகை" கட்டி முடித்து, இன்றைய உயர்நீதிமன்ற நீதிபதி திரு.S.T.இராமலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது.
V.V.S அவர்கள் இச்சங்கத்தின் செயலாளராக தொடர்ந்து 15 ஆண்டு காலம் பணியாற்றினார். பிற உறுப்பினர்களுக்கு வழி விடுவது தான் ஜனநாயகப் பண்பாடு எனக்கருதிப் அப்பணியிலிருந்து தானாகவே விலகினார்.
தென்னிந்திய செங்குந்தர் மகாசன சங்கத்தின் ஆயுள் உறுப்பினராகவும் இருந்து அதன் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையும் அளித்தள்ளார்.
சென்னை "சமுதாய பொருளாதார தொண்டு மன்றத்தில்" உறுப்பினராக இருந்து கட்டிட நிதிக்காக கணிசமான தொகையை நன்கொடையாக அளித்தும், 1995-ம் வருடம் தன் மணி விழா அன்று ரூ.15,000 வைப்புத் தொகையை வரைவோலையாக கொடுத்து அறக்கட்டளை துவக்கப் பெற்று, ஏழை மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமாக அளிக்க உதவியுள்ளர்.
1975-ம் வருடம் "தணிகை நற்பணி மன்றம்" என்னும் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி நாடகங்களை அரங்கேற்றம் செய்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டினார்.
1992-ம் வருடம், திருத்தணியில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபம் உரிமையாளர்கள் ஒன்று கூடி, "திருமண மண்டபம் உரிமையாளர்கள் சங்கம்" என ஒரு சங்கம் ஏற்படுத்தி அச்சங்கத்திற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப் பெற்று பணியாற்றியுள்ளார்.
வழக்கறிஞர் பணி
1972-ம் ஆண்டு திருத்தணி வழக்கறிஞர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பெற்று, ஓராண்டு காலம் பணியாற்றினார். பிறகு அவரையே தொடர்ந்து அப்பதவியை வகிக்குமாறு கேட்டுக் கொண்டாலும், அதை ஏற்க மறுத்து, பிறகு தலைவர் பதவி சுழல் முறையில் மற்றும் பணி மூப்பின் அடிப்படையிலும் வரவேண்டும் என விரும்பி ஒரு விதி முறையை ஏற்படுத்தினார்.
திருத்தணி வழக்கறிஞர்கள் சங்கம், திருத்தணி உரிமையியல் நடுவர் மன்றம் (Dist Munsiff court) ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் வெள்ளி விழா கொண்டாட விரும்பி, வெள்ளி விழாக் குழுத்தலைவராக V.V.S. யை நியமித்தினர். அவ்வாறே 25.09.1985 அன்று அப்போதைய தலைமை நீதிபதி M.N.சத்தூர்க்கர் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்று அதே விழாவில் விழாக்குழு சார்பாக தலைமை நீதிபதி வேண்டுக்கோள் பேரில், திருத்தணி அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அனுபவத்திலுள்ள சுமார் 1.50 ஏக்கர் நிலத்தை நீதிமன்றத்திற்கு ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது.
தெய்வ திருப்பணி
V.V.S அவர்கள் செங்குந்தர் குல அதியமான், கரிகாலன் கூட்ட மரபினர் வீட்டு அம்மன் வளர்புரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு நந்தாளி அம்மன் திருக்கோயில் திருப்பணிப் பொறுப்பை 1972-ம் ஆண்டில் அவர் ஒருவரே ஏற்று, 1973-ம் வருடம் அம்மனுக்கு வெகுச் சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். அதே அம்மனுக்கு மண்டபம் கட்ட மற்றும் இதரப் பணிகளை மேற்கொள்ள திருப்பணிக் குழுவை ஏற்படுத்தி 1996-ம் வருடம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுப்பேட்டையில் உள்ள அருள் மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் திருப்பணி செய்ய விரும்பி, பொது மக்கள் மற்றும் உறவினர் உதவியுடன் 1991-ம் வருடம் திருவேற்காடு ஐயப்ப சுவாமிகள் தலைமையில், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் முன்னிலையிலும் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெறக் காரணமாயிருந்தார்.
1968-ம் வருடம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் "செங்குந்தர் காலை பூஜை”-க்கு ஒர் அறக்கட்டளை ஏற்படுத்தி அதன் நிர்வாகக்குழுவில் ஒருவராக பணியாற்றினார்.
அறப்பணி
V.V.S அவர்கள் தம் தந்தையார் பெயரில் "அமரர் வெங்கடேசர் அறக்கட்டளை” மற்றும் தன் பெரிய தந்தையார் பெயரில் "அமரர் காளத்தி அறக்கட்டளை”-யை 1991-ம் வருடம் ஏற்படுத்தி, ஆண்டுதோறும் பல்வேறு கோயில்களுக்கு அபிஷேகப் பூஜை, இலவசப் பிரசாதம், அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை எளியோருக்கு வேஷ்டி, சட்டை, சேலை மற்றும் மாணவர்களுக்கு சீருடை இலவசமாக வருடந்தோறும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
பொதுநலப்பணி
1952-ம் வருடம் வடக்கெல்லைப் போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் ஏகாம்பரகுப்பம் அருகே நடந்த இரயில் மறியல் போராட்டத்தில் ஒன்பதாவது மாணவராக இருந்த V.V.S அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
தணிகையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுக்கு முழு உருவச் சிலை அமைக்க ஏற்பட்ட குழுவில் பொருளாளராக பணியாற்றி அவரின் முழு வெண்கலச் சிலையை 1982-ம் வருடம் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நினைவாக அரக்கோணம் சாலையில் "வாரியார் நகர்” என்று ஒரு நகரை (குடியிருப்பை) நிருமானித்து அம்மனைகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று, நியாயமான விலையில் பொது மக்களுக்கு வழங்கி அதன் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அயராது உழைத்து வந்தார்.
திருத்தணி பேருந்து நிலையத் தெருவில் "SUPER MARKET” ஒன்றை 1985- ம் ஆண்டில் உருவாக்கினார். இந்த Super Market பேருந்து நிலையத்தை தெருவையும் அரக்கோணம் சாலையும் இணைக்கின்றது.
தனது பெரிய தந்தையார் பெயரில் உள்ள "V.K.முருகப்ப முதலியார் டிரஸ்ட்” மூலம் புதுப்பேட்டை மெயின் ரோட்டில் V.K.M Complex-யை நிறுவவும், நகரி இரயில்வே நிலையம் அருகில் "VKM திருமண மாளிகை” அமையவும் காரணமாகியிருந்தார்.
இறுதிக்காலம்
தனது வழக்கறிஞர் பணியில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு, திருத்தணி வாரியார் நகரில் பண்ணை வீடு அமைத்து 2001-ம் ஆண்டு அங்கு குடியேறி பல வகைத் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்தியாவில் உள்ள ஆன்மிகத் தலங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கும், உலக நாடுகளுக்கும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார்.
அவரது துணைவியார் இலட்சுமி அம்மாள் 2019-ம் வருடம் மறைந்த பிறகு, தனது கடைசி காலத்தை சொந்த ஊரான நகரி புதுப்பேட்டையில் கழிக்க விரும்பி 2019ம் ஆண்டு டிசம்பரில் அங்கு குடி பெயர்ந்தார். குடி பெயர்ந்த மூன்றே மாதத்தில் அவர் உடல் நலம் குன்றி 16.03.2020 அன்று இரவு 8.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது..
