பல்வேறு காலகட்ட செங்குந்தர் குலம் பற்றி கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி மற்றும் நினைவு சின்னங்கள் விளக்கங்கள்
1. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வள்ளாள மகாராஜ கட்டிய கோபுரத்தின் தென் பாகத்தில் உள்ள கல்வெட்டில் கைக்கோளர் பற்றிய விபரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டில் ஸ்ரீ வீரதேவராயர் குமாரர் வீர விஜைய பூபதிராய உடையார், கைக்கோளர்களுக்கு பண்டைய கால வழக்கப்படி திருவீதியில் வலங்கை வரிசைகள் முற்றும் கொடுத்த தாகவும், கைக்கோளரில் அறமுடையான் மகன் திருமலை அழகிய வீரபல்லவரானுக்கு தூங்காநந்தா விளக்கும் 32 பசுக்களும், 1 காளை மாடும் கொடுத்ததாக தெரிவிக்கிறது.
3. கச்சியுள் ஆண்ட தொண்டைமான் ஆட்சி காலத்தில் கச்சி வேளுக்கைத்தாண் கோயிலும், கச்சிக் காச்சாலையுடைய நாயனார் கோயிலும், கச்சி மேற்றளியும், கச்சிப்பஃறளியும் செங்குந்தர்களால் கட்டப்பட்ட அரும்பெருங்கோயில்கள் என்று அந்தந்த கல்வெட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கி.பி.1373ல் செங்குந்தர்களுக்கு தேவர் பட்டம் பரம்பரை பட்டமாக அளிக்கப்பட்டதுடன் வீரசிங்க தேவர் மகன் பெற்ற பெருமானுக்கு நெல்லும், சோறும், காசும், ஆண்டு ஒன்றுக்கு புடவை முதலுக்காக அறுநூறு காசுகள் வழங்கப்பட்டதாகவும் திருவண்ணாமலை கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது.
6. தேவனூர் கோயில் கற்பக்கிருகத்தில் குலோத்துங்க சோழ தேவர் காலத்திலும் ஸ்ரீ இராஜநாராயணன் சம்புவராயர் காலத்திலும் தேவனுருடையார், திருநாகேஸ்வரமுடையார் கோயிலில் தர்மங்கள் பல நடந்தேற கைக்கோளர் பேரால் அமைக்கப்பட்ட சருவமாணியம் காணப்படுகிறது. ஸ்ரீ அரியண உடையார் குமாரர் விருப்பண உடையார் காலத்தில், கைக்கோள முதலிகளும் திருநாகேஸ்வர முடையார் கோயிலுக்கு ஏரி, கிணறு, நஞ்சை, புஞ்சை நிலங்கள் தானம் செய்தது கூறப்பட்டுள்ளது.
7. கோலியபுர நல்லூர் கோயில் கல்வெட்டில் இவ்வூர் திருமட வளாகம் மற்றும் திருவாலீச்சுரம் சிவாலயமும் செங்குந்தர் குலத்தினரால் திருப்பணி செய்யப்பட்டதாக விளங்க வைக்கிறது.
8. கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வர் கோயிலில் உள்ள 400 (நானூறு) ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்புத்தகடு உள்ளது. அதில் செங்குந்த முதலியார் இனமக்கள் திருமணத்தின் போது மணமகனுக்கும், மணமகளுக்கும் பணம் வழங்க வேண்டும் என்றும், ஆடி, தை மாதங்களில் நடைபெறும் விழாக்களுக்கு பணம் தர வேண்டும் என்றும், அப்படி பணம் தராதவர்களுக்கு கங்கைக் கரையில் பசுவை கொலை செய்தால் கிடைக்கும் பாவம் அவர்களை வந்து சேரும் என்று எழுதப்பட்டுள்ளது.
9. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்கள் சமயத்தில் சாமிகளை தூக்கிச் செல்லும் சீர்பாதம் சேவை செய்யும் செங்குந்த முதலியார் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரி வசூலிக்க விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் உத்திர விட்டதாகவும், இதனை எதிர்த்து சொக்க முதலி என்பவர் கிழக்கு கோபுரத்தின் மீது ஏறி அங்கிருந்து குதித்து உயிர் விட்டார் என கிழக்கு புற சுவற்றில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.
10. கூத்தனூரில் உள்ள கல்வெட்டில் ஒட்டக்கூத்தருக்கு குலோத்துங்க சோழனால் தானமாக கொடுக்கப்பட்ட கூத்தனூரில் அவரால் சரஸ்வதி ஆலயம் கட்டப்பட்டதாகவும் தெரிவிக்கிறது. இக்கோயிலில் ஒட்டக்கூத்தர் சிலையும் உள்ளது. இவ்வூரார் பத்திரங்கள் முதலியனவற்றுள் மட்டும் கூத்தனூரை ஒட்டக்கூத்தனூர் என்றே எழுதுவதாக தெரியவருகிறது.
11. இந்தியாவின் புனித மகள் தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவாக தமிழக அரசு, காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தில்லையாடி கிராமத்தில் “வள்ளியம்மை மன்றம்" என்ற நினைவு மண்டபத்தை எழுப்பியுள்ளது. மத்திய அரசு தில்லையாடி வள்ளியம்மை அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள கோ-ஆப் டெக்ஸ்ல் 600வது விற்பனை நிலையத்திற்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பெண் புலிக்குட்டிக்கு இவர் நினைவாக வள்ளி என பெயரிடப்பட்டுள்ளது.
12. திருப்பூரில் கொடிகாத்த குமரனின் நினைவாக சிலை நிறுவப்பட்டுள்ளது. 04-10-2005ல் தமிழக அரசு, திருப்பூர் குமரனின் நூற்றாண்டு விழாவை திருப்பூரிலேயே கொண்டாடியது. மத்திய அரசு திருப்பூர் குமரனின் அஞ்சல் தலையை வெளியிட்டது.
13. சேலம் நகரில் மையப்பகுதியான ஐந்து ரோடு, சங்கமிக்குமிடத்தில் ரவுண்டானா அமைத்து, அதன் நடுவே திருப்பூர் குமரன் கையில் சுதந்திரக் கொடியை பிடித்திருக்க, அவருடைய தலை மற்றும் உடம்பிலிருந்து இரத்தம் கொட்டுவதைப் போல் சாய்ந்த நிலையில் இருக்க, வேறொருவர் குமரனின் உடலை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டிருப்பது போல் மிக தத்ரூபமாக சிலை வடித்து நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. திருப்பூர் குமரன் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் செங்குந்தர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்து வருகிறார்கள்.
14. 64-வது நாயன்மாராகவும், குல குருவாகவும் நம்மால் போற்றப்படும் அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவதரித்த வேலூர் மாவட்டம் காங்கேய நல்லூரில் முழு உருவச் சிலை நிறுவி ஞான திருவளாகம் கட்டப்பட்டுள்ளது. அவரது குரு பூஜை விழாவை சீரோடும், சிறப்போடும் வருடந்தோறும் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைமையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நூற்றாண்டு விழாவினை 16-12-2005ல் சென்னை செங்குந்தர் மாளிகையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மத்திய அரசு வாரியார் சுவாமிகளின் தபால் தலை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியது.
15. சேலம் விநாயகா மிஷின் நிர்வாகத்தினர் கிருபானந்த வாரியார் பெயரில் பொறியியல் கல்லூரியை நிறுவி, அவ்வளாகத்தில் வாரியார் சுவாமிகளின் முழு உருவச் சிலை அமைத்து நினைவு மண்டபம் கட்டியுள்ளார்கள்.
செங்குந்தர்களின் பெருமைகளும் சிறப்புகளும்
1. ஈட்டி எழுபது எழுத சிரசிம்மாசனம் அமைத்துக் கொடுத்த செங்குந்தர்களை பெருமைபட பேசியதோடு, இவர்களால் தான் எனக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயர் வந்தது என அவரால் தெரிவிக்கப்பட்ட பாடல்;
"நிலைதந்தார் உலகினுக்கும் யாவருக்கும் மானமதே நிலைக்கத் தந்தார் கலை தந்தார் வணிகருக்கும் யாவருக்கும் சீவனம் செய்திட வென்றே கையில் தந்தார் விலை தந்தார் தமிழனுக்குச் செங்குந்தர் என் கவிக்கே விலையாகத்தான் தலை தந்தார் எனக்கும் ஒட்டக் கூத்தன் எனப் பெயரினையும் தான் தந்தாரே."
2. முருக பெருமானோடு வீரவாகு தேவர் உள்ளிட்டகுந்தர்கள் ஆறு நாள் போரிட்டு சூரபதுமனை இரு பிளவாக்க, அது மயிலும், சேவலுமாக மாற, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் கொள்ள, சூரபதுமன் கேட்டுக் கொண்டதோடு, தன் கையில் வைத்திருந்த புலிக் கொடியை வீரபாகு தேவரிடம் கொடுக்க, பெற்றுக் கொண்ட சிறப்புடையது இச்செங்குந்தம்.
3. நாரத முனிவர் தாம் விரும்பிய பயனை பெற்று இன்புற வேண்டி யாகம் செய்ய, யாகத்தில் ஆட்டுக்கிடா தோன்றி, அனைவரையும் துன்புறுத்திய போது, நாரதர் முருகனை வேண்ட, முருகன் வீரவாகு தேவரை அனுப்பினார். வீரவாகு தேவர் அந்த ஆட்டுக் கிடாவை அடக்கி, முருகப் பெருமானுக்கு வாகனமாக வழங்கியது செங்குந்தரே.
4. திருமால் வழிபட்டு வந்த சோமஸ்கந்தர் விக்ரகத்தை இந்திரன் கேட்டு பெற்றுக் கொண்டார். இந்திரன் வலன் என்னும் அசுரனால் துன்பப்பட்டபோது அவனை மனிதரால் மட்டுமே வெல்ல முடியும் என சிவபெருமான் கூற, இந்திரன் முசுகுந்தனை அழைத்து வலன் என்ற அசுரனை அழிக்க கேட்டுக் கொண்டார், அதன் பேரில் முசுகுந்தன் நவவீரர்களை அனுப்பி அசுரனை அழித்தான். இதற்கு பிரதி உபகாரமாக எதனைக் கேட்டாலும் தருவதாக இந்திரன் கூறினார், முசுகுந்தன் தாங்கள் வழிபட்டுவரும் சோமஸ்கந்தர் விக்ரகத்தை தனக்கு தருமாறு கேட்டார். இந்த விக்ரகத்தை தர மனமில்லாத இந்திரன் அந்த விக்ரகத்தை போலவே புதியதாக ஆறு விக்ரகங்களை செய்து ஏழையும் ஒரு இடத்தில் வைத்து உமக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள் என இந்திரன் சொன்னார். முசுகுந்தன் திருமாலிடமிருந்து பெற்ற விக்கரமே தனக்கு கிடைக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினான். இறைவன் முசுகுந்தனின் வேண்டுதலை ஏற்று, அந்த ஏழு விக்கரங்களுக்குள் ஒரு விக்கரத்தின் மீது வண்டாக மாறி உட்காருவேன் அதை நீ பெற்றுக் கொள் என்று அசரீரியாக சொல்ல, முசுகுந்தன் வண்டு உட்கார்ந்த விக்கரத்தை தனக்கு தருமாறு இந்திரனிடம் கேட்டான். அதிர்ச்சியடைந்த இந்திரன் மொத்தமாக ஏழு விக்கிரங்களையும் எடுத்துக் கொள் என சொல்ல, இந்த ஏழு விக்கிரங்களையும் தம் நாட்டுக்கு கொண்டு வந்து முதலாவதை திருவாரூரிலும், மற்றவைகளை திருநள்ளாறு, திருநாகைக்காரோணம், திருக்காறாயில், திருக்குவளை, திருவாய்மூர், திருமறைக்காடு ஆகிய இடங்களில் நிறுவி பரிபாலனம் செய்து வந்தவர்கள் செங்குந்தர்களே. இத்தலங்களே சப்தவிடங்கள் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
5. தாரகா சூரனை போர்களத்தில் அழித்தவர்கள் செங்குந்தர்களே.
6. முசுகுந்த சக்ரவர்த்தியின் மனைவியும் வீரவாகு தேவரின் மகளுமாகிய சித்தரவல்லி வளர்த்து வந்த தவப் பேருடைய கிளியை எமனின் மனைவி திருடிப் போனதை கேள்விப்பட்டு, எமனிடம் போரிட்டு கிளியை மீட்டு வந்தது இச் செங்குந்தரே.
7. திருச்செந்தூரில் வாழ்ந்து வந்த சுபன் என்ற செங்குந்தர் சோழ மன்னனுக்கு பகைவனான யாழ்பான தேச மன்னரை ஒரே நாளில் வெற்றி கொண்டு, அவரிடமிருந்த செல்வங்களை கப்பமாக கொண்டு வந்தவர்கள் இச் செங்குந்தர்களே.
8. திருவொற்றியூரில் ஆதிபிரியில் விநாயகருக்கு ஆலயம் எழுப்பி செங்குந்த விநாயகர் என அழைத்து வந்தது செங்குந்தர்களே.
9. திருவாலங்காடு தலத்தில் பரமசிவனோடு நடனமாடி தோற்றபின் அக்காளியின் கையில் இருந்த ஒளி வீசும் இரத்தினங்கள் இழைத்த தாளத்தை பறித்து தமது மகிமையை உலகம் அறியச் செய்தவர்கள் இச் செங்குந்தர்களே.
10. புதுவை க.சுப்பராய முதலியார் தருமபுர ஆதீனம் சோமசுந்தர கவிராயர் திருத்தணிகை விசாக பெருமாளையர், திரிசுரபுரம் வி. கோவிந்தப்பிள்ளை, கோமளபுரம் இராஜ கோபாலப் பிள்ளை, காமுசெட்டியார், பாக்கம் திருஞான சம்மந்த முதலியார்,காஞ்சி இராமசாமி நாயுடு, பேறை ஜெகநாத பிள்ளை, காஞ்சி இராமலிங்க தேசிகர், திருவூரல் விநாயக தேசிகர், சென்னை கேசவுபாத்தியாயர், களந்தை வேதகிரி முதலியார், போன்ற எண்ணற்ற சான்றோர்கள் செங்குந்தர் குலப் பெருமைகளையும் சிறப்புகளையும் கவிதைகளாக பாடியுள்ளார்கள்.
11. அறிவு நிறைந்த வானுலகமும், மண்ணுலகமும் முன்பு செய்த தவத்தின் பயனே செங்குந்தர்கள் வந்து தோன்றியதாக "திருக்கை வழக்க நூல்" தெரிவிக்கிறது.
12. தர்மத்தை வளர்க்கின்ற தூய தொழிலாகிய நெசவுத் தொழில் செய்தவர்கள் இச் செங்குந்தர்களே.
13. ஆசு கவி, மதுர கவி, சித்திர கவி, வித்தார கவி போன்ற எண்ணற்ற கவிதைகளை வழங்கியவர்கள் செங்குந்தர்களே.
14. சைவ, சமய நெறிகளில் தவறாது நிற்பவர்கள் முதலியர்கள் எனப்படும் செங்குந்தர்களே.
15. எல்லா இடங்களிலும் தம் புகழ் விளங்குமாறு உரிமை பெற்ற ஆட்சி நடத்திய ஒப்பற்ற செங்குந்தர் மீது பாடப்பெற்ற 101 பாடல்கள் அடங்கியது "செங்குந்தர் கலித்துறை மாலை" என்ற நூலாகும்.
16. காஞ்சிபுரம் திருவேகம்பப் பெருமானுக்குரிய செம்பட்டாடை பரிவட்டமாக அணிவதற்கு உரிமை உடையவர்கள் செங்குந்தர்களே.
17. கடைச்சங்கப் புலவர் சீத்தலை சாத்தனாருக்கு உபகாரம் செய்து உதவியவர்கள் செங்குந்தர்களே.
18. காஞ்சிபுரத்தில் திருவாதிரை நாளில் சிவனடியார் யார் வந்தாலும் அவர்களை நன்கு மதித்து, பொன் அளித்து, சிறப்பு பெற்றவர்கள் செங்குந்தர்களே.
19. தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் திருப்பூர் செங்குந்த மாநாட்டில் சந்திக்க வைத்து, அண்ணாவை சுயமரியாதை இயக்கத்தில் இணைய வழிவகுத்தது செங்குந்த மாநாடே.
20. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய சிவாவுக்கு அடைக்கலம் தந்ததோடு நினைவு மண்டபம் அமைக்க நிலம் தானமாக கொடுத்தது சின்னமுத்து முதலியாரே.
21. திருக்குழுகுன்றத்தை வலம் வந்து நெருங்கிய சம்பு, ஆதி என்னும் கழுகுகளுக்கு தினம் சைவ உணவிட்டு வந்தது வீர செங்குந்தர்களே.
22. செங்குந்தர்களுக்கும், சோழர்களுக்கும் உள்ள புலிக் கொடியின் சிறப்பை ஈட்டி எழுபது பாடல் 42 தெரிவிக்கப்பட்டுள்ளது. "கலிக்களும் படுவளவனுக்கும், காது சூர்வலிக்குறும் படுதனிவானக் குந்தர்க்கும் பலிக்கு நற்புககுழலாம் பாதி ஆதால் புலிக்கொடி மரபிரண்டுக்கும் போந்ததால்."
23. ஒட்டக்கூத்தர் ஈட்டி எழுபது எழுதியது பற்றி குந்தர் பூஜை பகுதியில் சிறப்பாக பாடல் தெரிவிப்பது; தவந்தனிச் செய்தவள் தலைச் சிங்காதனம் உவந்து பாவாடையிட்டு ஓடும் சோரிமேல் நவந்தனில் பாடிய நம் கவித்திரம் சிவந்திடச் செய்தது திருச்செங்குந்தமே.
24. ஒட்டக் கூத்தர் ஈட்டி எழுபது என்ற செங்குந்தர்களின் பெருமையை பாடிய பின், தான் சிம்மாசனமாக இருந்த 1008 தலைகளும், அந்தந்த உடலுடன் ஒன்று சேர்ந்து உயிர் பெற்றெழக் கலைமகளை வேண்டிய பாடலில் ஒன்று.
"வேண்டிய போகம் எல்லாம் விருப்புடன் உலகுக்கு ஆக்கும் ஆண்டியாம் பழனிமேய ஆண்டி தன் வழியில் வந்த காண்டகு குந்தர் இன்னே காட்டிய தலைகள் எல்லாம் மீண்டவர் பெற்று வாழ விழைந்தருள் வாணித்தாயே"
போன்ற எழுப்பெழவது பாடலை பாடி வெட்டிய தலைகள் ஒட்டிக் கொண்டன என்பதும் சிறப்பே.
25. தில்லை நடராஜர் சன்னதியில் சிதம்பர ரகசியம் என்னுமிடத்தில் தொங்கவிடப்பட்டிருக்கம் திரைச்சேலையை நெய்து கொடுத்து வந்தவர்கள் செங்குந்தர்களே.
26. திருவாளர் பிரதாப முதலியார் என்பவர் மிகச் சிறந்த சமுதாய சிந்தனையாளர் அவர் பற்பல தியாகங்கள் செய்தவர். ஒழுக்க நெறியில் வாழ்ந்து தமிழின மக்கள் முன்னேற்றத்திற்கும், அறவழியில் நடக்கவும் பாடுபட்ட பண்பாளர் ஆவார். இவரது வாழ்க்கை வரலாற்றை 1879ஆம் ஆண்டு "மாயூரம் வேத நாயகம் பிள்ளை அவர்கள்" "பிரதாப முதலியார் சரித்திரம்" என்ற உரைநடை நாவலை எழுதி வெளியிட்டார். இதுவே தமிழில் முதல் நாவலாக கருதப்படுகிறது.