கொங்கு கைக்கோளர் செங்குந்த முதலியார் வரலாறு

0

வரலாற்று ரீதியாக கைக்கோளர் என்பது மட்டுமே நமது சாதிப்பெயர். போர் காலத்தில் கைக்கோளர்கள் பயன்படுத்திய ஆயுதத்தின் பெயர் செங்குந்தம். கைக்கோளர்களுக்கு சோழ மன்னர்கள் வழங்கிய பட்டம் முதலியார். தமிழகத்தின் மேற்கு பகுதி கொங்கு மண்டலத்தின் பூர்வ குடியாக வாழ்ந்து வரும் கைக்கோளர்களை பேச்சு வழக்கில்/இலக்கியங்களில் கொங்கு கைக்கோளர் என்பர்.


தமிழகத்தின் மேற்கு பகுதி கொங்கு மண்டலம் என்று அழைக்கபடுகிறது. கொங்கு மண்டலத்தில் முற்காலத்தில் வெறும் காடாக இருந்தது, வேடர்கள் மட்டும் வாழ்ந்து வந்தனர்.


பிற்காலத்தில் கரிகால சோழன் (கி. மு 3ஆம் நூற்றாண்டு) காஞ்சிபுரத்திலிருந்து கைக்கோளர் (செங்குந்தர் முதலியார்) வேளாளர், வாணிக செட்டி ஆகிய மூன்று சாதி மக்களை கொங்கு மண்டலத்துக்கு அனுப்பி காடுகளை அழித்து நகரங்களையும் கோவில்களையும் விவசாய நிலங்களையும் அமைக்க அனுப்பி வைத்தார். இதைப் பற்றிய தெளிவான வரலாற்றுத் தகவலை சோழன் பூர்வ பட்டயம் என்னும் ஆவணம் தெளிவாகக் கூறுகிறது.


கொங்கு மண்டலத்தின் குடியேறிய முதன்மை மக்கள் பட்டியல்: 

1. தற்போது வேட்டுவ கவுண்டர் என்று அறியப்படும் வேடர் இவர்களே இம்மண்டலத்தின் (முதல் பூர்வகுடி). 

2. கொங்கு கைக்கோளர் (செங்குந்த முதலியார்). 

3. கொங்கு வேளாளர் (தற்போதைய மண்டலத்தில் இவர்கள் மக்கள் தொகையிலும் அரசியல் செல்வாக்கிலும் பொருளாதார பலத்திலும் இருப்பதால் ஏதோ கொங்கு என்ற வார்த்தை இவர்கள் ஜாதி வார்த்தை என்பது போல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது உண்மை கிடையாது. கொங்கு என்ற வார்த்தை சாதி பெயர் இல்லை, கொங்கு என்பது தமிழகத்தின் மேற்கு பகுதியில் பெயர்)

4. கொங்கு செட்டியார் எனப்படும் வணிகர்கள்.


மேலே கூறப்பட்டுள்ள இந்த நான்கு சமூகங்களுக்கு மட்டுமே கொங்கு மண்டலத்தில் காணி ஆட்சி உரிமை உள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட இந்த நாலு ஜாதிகள் வந்து கொங்கு மண்டலத்தில் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கிய பின்பே பிற சாதி மக்கள் வந்து குடியேறினர்.


காஞ்சிபுரத்திலிருந்து வந்த காரணத்தினால் தான் இன்று வரை கொங்கு மண்டலத்தில் உள்ள கொங்கு கைக்கோளர் (செங்குந்த முதலியார்) அவர்கள் வாழும் அனைத்து ஊர்களிலுமே காமாட்சியம்மன் கோவிலை கட்டி வழிபட்டு வருகின்றனர்.


கொங்கு கைக்கோளகளின் குல குரு: கூனம்பட்டி ஆதீனம் மாணிக்கவாசகர் பரம்பரை.

குலதெய்வம்: முருகன், முத்துக்குமாரசாமி (சாவான், வீரபாகு முன்னோர்), காமாட்சியம்மன், அங்காளம்மன் மற்றும் பிற அம்மன் தெய்வங்கள்.

முதன்மை கோவில்கள்: பழனி முருகன் கோவிலில் கொடியேற்றம் மண்டகப்படி முதல் மரியாதை, சூரசம்ஹார மண்டகப்படி உரிமை. முத்தண்ணன் பாளையம் அங்காளம்மன் கோவிலில் பூஜை செய்யும் உரிமை (கொங்கு மண்டலத்தின் முதல் அங்காளம்மன் கோவில்)


கொங்கு கைக்கோளர்களின் கோத்திரம்/கூட்டம் பட்டியல்:

ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் ஒரே ஆண் வழி Y DNA உடைய பங்காளிகள் அதனால் ஒரே கோத்திரத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்யக் கூடாது. கோத்திரம் என்பது சமக்கிருதச் மொழி வார்த்தை/ கூட்டம் என்பது தமிழ் மொழி வார்த்தை/ இரண்டு வார்த்தைகளும் ஒரே பயன்பாடு அர்த்தம் உடையது

  •  24 நாட்டு சமய முதலி பட்டக்காரர் கோத்திரம் (பேச்சு வழக்கில் 24 நாட்டு பட்டக்காரர்)/கருமாண்டா வாத்தியார்/ சமய பட்டக்காரர் அன்னதான சோழர். இம்மூன்றும் ஒரே கூட்டம் பங்காளிகள், வேறு வேறு பெயர்கள். பல செப்பு பட்டயம் ஓலை சுவடிகளில் வரும் முக்கிய கூட்டம்.
  • வையாபுரி நாட்டு பட்டம் முத்துக்காளி தரகன் கோத்திரம் (பழனி மன்னர் இந்த பங்காளிகளை சேர்ந்தவர்)
  • ஆறை நாட்டு பட்டக்காரர் கோத்திரம் (பேச்சு வழக்கில் 6 நாட்டு பட்டக்காரர்)
  • பூசன் குலம் (PA சாமிநாத முதலியார் ex MP இந்த பங்காளிகளை சேர்ந்தவர்)
  • பட்டாளியர் கோத்திரம் (சென்னை சில்க்ஸ் குடும்பம் இந்த பங்காளிகளை சேர்ந்தவர்)
  • கீரனூரார் கோத்திரம் 
  • வாரக்க நாட்டு பட்டம் வெள்ளையம்மன் கோத்திரம்
  • கணேசர் பட்டம் சேவூரார் கோத்திரம்
  • நல்லதம்பிரான் கோத்திரம்
  • குன்னத்தூரார் கோத்திரம்(சிற்றரசர் வீரசந்திர முதலியார் இந்த பங்களிகளை சேர்ந்தவர்)
  • பட்டி கோத்திரம்
  •  ஒகாயனூரார் கோத்திரம்
  • அனந்த கோத்திரம் 
  • ராக்கி கோத்திரம் 
  • காசிவேலன் கோத்திரம் 
  • பாசியூரார் கோத்திரம் 
  • ஊமத்தூரார் கோத்திரம் 
  • சென்னி கோத்திரம்
  • செந்தேவன் கோத்திரம் 
  • சிறுவேங்கை கோத்திரம் 
  • சாமக்குளத்தார் கோத்திரம் 
  • மாகாளி கோத்திரம் 
  • அன்னூரான் கோத்திரம் 
  • பழனியூரார் கோத்திரம் 
  • உடையாங் கோத்திரம் 
  • பெரியகுளத்தார் கோத்திரம் 
  • முருக முதலி கோத்திரம் 
  • குருநாதப்பன் கோத்திரம் 
  • கட்ராயன் கோத்திரம்
  • கானூரான் கோத்திரம் 
  • பொன்தேவி கோத்திரம் 
  • நெய்க்காரங்கூட்டம் 
  • பரமகாளி கோத்திரம் 
  • வேட்டிகாரர் கோத்திரம் 
  • அந்தியூரார் கோத்திரம்
  • சிவியூரார் கோத்திரம் 
  • கருவலூரார் கோத்திரம் 
  • பீமன் கோத்திரம் 
  • பொஞ்சி கருவேலன் கோத்திரம் 
  • கணக்கன் கோத்திரம் 
  • செம்மோரை கோத்திரம் 
  • புலிக்குத்தி கோத்திரம் 
  • செம்பங்கருங்காளி கோத்திரம் 
  • குள்ளன் கோத்திரம் 
  • பெரிய கோத்திரம் 
  • அல்லாம் பழனி கோத்திரம் 
  • செல்லங் கோத்திரம் 
  • புகழூரார் கோத்திரம் 
  • அனந்தங் கோத்திரம்
  •  கருகாளியம்மன் கோத்திரம் 
  • வீரக்குமார் கோத்திரம் 
  • அம்பலவாணர் கோத்திரம் 
  • கனியூரார் கோத்திரம்
  • சூரிய முதலி கோத்திரம்(கோபி. வெங்கிடு exMLA இந்த பங்காளிகளை சேர்ந்தவர்)
  • வலியன் கோத்திரம்(மல்லூர்)
  • காடை கோத்திரம்(மல்லூர்)
  • கடையநல்லா முதலி கோத்திரம்(மல்லூர்)
  • மேற்கத்திய கோத்திரம்
  • ராயர்பாலையதார் மணியார் கோத்திரம்
  • கந்தம்பாளையதார் கோத்திரம்
  • காந்த முதலி கோத்திரம்
  • பாலகரையர் கோத்திரம்
  • குருசை கண்ணாடிகார கூட்டம்
  • மேட்டுப்பாளையத்தார் முண்டுக்காரர் கோத்திரம் 
  • மொகாசி கூட்டம்
  • குருசை ராசிபுரத்தார்
  • சொப்புருட்டி கூட்டம்
  • கருப்ப முதலி கோத்திரம்
  • ஓலைபட்டியார் கோத்திரம் 
  • வீதி வீட்டு பங்காளிகள்
  • குள்ளகந்த முதலி கூட்டம்
  • குருசை அத்தனூரார் கூட்டம்
  • வெள்ளி திருப்பூரார் கூட்டம்
  • பண்டிதகாரர் கோத்திரம்
  • குருசை மல்லூரார் கூட்டம்
  • கொம்பேரியார் கோத்திரம்
  • குருசை சித்தாலந்தூரார் கூட்டம்
  • பூவரசு கோத்திரம
  • பருவாச்சியார் கோத்திரம்



கொங்கு மண்டலத்தில் காணி ஆட்சி உடைய தமிழ் புலவர், சித்த வைத்தியர், நெசவாளராக இருந்த கூட்டங்கள்:
  • காஞ்சான் கோத்திரம்
  •  பச்சான் கோத்திரம்
  • குலப்பச்சை கோத்திரம்
  • போக்கன் கோத்திரம்
  • கஞ்சியாளன் கோத்திரம்
  • செஞ்சி கோத்திரம்
  • பூந்துறையான் கோத்திரம்
  • ஆரான் கோத்திரம்
  • மணிக்கட்டி சடையன் கோத்திரம்
  • மண்னையன் கோத்திரம்
  • பரமகாளி கோத்திரம்
  • ராசி கோத்திரம்



திருமண சடங்குகள்

திருமணம்

"திரு" என்பது தெய்வத்தன்மை எனவும், "மணம்" என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, திருமணம் என்பது மேன்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகிறது.

1.சாதகப் பொருத்தம் பார்த்தல்

இருவீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். 10 பொருத்தத்தில் 5க்கு மேலாக பொருத்தங்கள் இருப்பின் பெண் பார்த்தல் வைபவம் நடைபெறும். பொருத்தத்தில் திருப்தி அடையாதவர்கள் கோவில்களில் இறைவனிடம் வாக்கு கேட்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. பெண்ணை கோவில் போன்ற பொதுஇடங்களில் பார்த்து, பெண் வீட்டார் திருமணத்தை உறுதி செய்ய தாம்பூலம், பலகாரம், பழங்களோடும் உறவினர்களோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்து செல்வர். இதன் பின்னர் சோதிடரிடம் கலந்து மணநாள் நிச்சயிக்கப்படுகிறது.

2. திருமணம் உறுதிசெய்து தாம்பூலம் மாற்றிக்கொள்ளும் முறை (திருமண உறுதி தனியொரு நாளில் நடைபெற்றால்)

தாம்பூலம் மாற்றிக் கொள்வதற்கு வேண்டிய பொருட்கள். சுவாமி படம், குத்துவிளக்கு (ஆரத்துடன்), மஞ்சள் பிள்ளையார், நெல் நிறைந்த படி,வாழைஇலை, உடைத்த தேங்காய், பழம் -4, வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, திருநீறு, சாம்பிராணி,தூபக்கால், கற்பூரத்தட்டு, சந்தனம், குங்குமம், உதிரிப்பூக்கள், பன்னிர்செம்பு, சந்தனக்கும்பா, பெண் / மாப்பிள்ளை வீட்டார் தாம்பூலம் மாற்றிக்கொள்ள தனித்தனி தாம்பாளத்தில் வைக்க வேண்டியவை.

மஞ்சள் பூசிய தேங்காய் - 3, பழம் -3 சீப்பு, ஆரஞ்சு-3, ஆப்பிள் -3. மாம்பழம்-3, திராட்சை அரைகிலோ, சீமைக் கற்கண்டு, விரலிமஞ்சள் 100 கிராம், வெற்றிலை 1 கவுளி, பாக்கு 100 கிராம், குங்குமச்சிமிழ்-1 (மரத்தினால் ஆனது ) சந்தனம், பூமாலை-2, தலைக்குத்துண்டு-1, பூச்சரப்பந்து.

முகூர்த்தப்பட்டோலை எழுத வெள்ளைத்தாள் சிவப்புமை பேனா, தாம்பூலம் கைமாறும் முன்னர் மணமகன் தந்தையாரும், மணமகள் தந்தையாரும்

ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமை என்றால் தெற்கு வடக்காகவும், புதன், வியாழக்கிழமை என்றால் கிழக்கு மேற்காகவும் அமர்ந்துகொள்ள வேண்டும்.

மணமகன் தந்தையாருக்கு மணமகள் தந்தையார் மாலையணிவித்து, துண்டின் மூலம் உருமாலை கட்டி, பன்னீர் தெளித்து சந்தனம், குங்குமம் கொடுத்து தாம்பூலத்தட்டை எடுத்துக்கொடுக்க வேண்டும். அவ்வாறே மணமகன் தந்தையார் மணமகள் தந்தையாருக்கு சிறப்பு செய்தல் வேண்டும்.

தாலி செய்யக் கொடுத்தல்

மணநாளுக்கு முன்பு ஒரு சுபநாளில், மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னை தாலிக்காக உருக்குதல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவிர மணப்பெண்ணின் உறவினர்கள் கலந்துகொள்வர். பெண்வீட்டார் ஒரு இனிப்புப்பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு வருதல் சம்பிரதாயம்.

திருமாங்கல்யத்திற்கு உரிய தங்க நாணயத்தை ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் பூஜையறையில் வைத்து அதனை மணமகனின் பெற்றோர், மணமகனிடம் கொடுத்து ஆசாரியிடம் கொடுக்க அவர் அதை உருக்கவேண்டும். ஆசாரியார் பூஜை செய்து உருக்கிய தங்கத்தை சபையோரிடம் காட்ட வேண்டும். பின்னர் ஆசாரியாருக்கு அரிசி, காய்கறியுடன் தட்சணை அளித்து தங்கத்தை அவரிடம் கொடுக்கவேண்டும். பின்னர் விருந்து உபசாரம் செய்தல் வேண்டும்.

நமது இனத்தில் திருமாங்கல்யம் அரை பவுனில் (4 கிராம்) முகமும், குண்டுமணியும் சேர்த்து அரைத்தாலி செய்யப்படும். இதனோடு சத்து, தாயத்து இரண்டுமாக சேர்த்து ஒரு பவுனில் முழுத்தாலி செய்யப்படும்.

முகூர்த்தக்கால் நடுதல்

நம்மவர் பெரும்பாலும், முகூர்த்தக்கால் ஊன்றும் பழக்கமில்லை. இருப்பினும் சிலர் முகூர்த்தக்கால் நடுகின்றனர். இதற்கு கல்யாண / முள் முருங்கையின் கிளையை வெட்டி, அதன்நுனியில் ஐந்து மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி, இடையில் மஞ்சள் பூசிய வெள்ளைத்துணியில் செப்புக்காசு முடிந்து கட்டிவிடவேண்டும். பெரியவர் ஒருவர் மூலமாக, வடகிழக்கு (ஈசானிமூலையில்) ஊன்ற வேண்டும். அதற்கு தேங்காய் உடைத்து,சாம்பிராணி, கற்பூரம் காட்ட வேண்டும். அதனடியில், நவதானியத்தோடு பவளம் அல்லது நவமணிகளைக் கட்டி, அதற்கு 13 சுமங்கலிப் பெண்கள் பால் ஊற்றி திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தவேண்டும். மணமகன் வீட்டில் முதலிலும், பின் மணமகள் வீட்டிலும் இவ்வாறு நடுதல் வேண்டும். வீட்டில் தான் நடவேண்டும். திருமணமண்டபத்தில் அல்ல.

முளைப்பாலிகைப் போடல்

பெண்வீட்டில் 3 அல்லது 5 மண்சட்டிகளில் பாலில் ஊறவைத்த நவதானியங்களை தூவி முளைக்க வைத்து சாமியறையில் வைத்து மணவறைக்கு கொண்டு போகவேண்டும். திருமணத்திற்கு பிறகு இதனை ஆற்றில் / நீர்நிலையில் விடவேண்டும். (நவதானியம், நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து,கடலை)

திருமணப்பந்தல்

பந்தல் போட்டு கமுகு, வாழை, தென்னை ஓலைகளின் அலங்காரம் செய்தல்வேண்டும். மாவிலை மங்கல முறையாகக் கட்ட வேண்டும். வாழை ஒருமுறை தான் குலைபோடும். அதுபோல திருமணம் என்பது ஒருமுறைதான் என்பதையும், வாழையடி வாழையாக சந்ததி பெருக வேண்டும். தம்பதியர் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதையும் விளக்குகிறது. வாழையடி வாழையாக வளர்வது தேங்காயும், வாழைப்பழமும் ஆகும். இவையிரண்டும் இறைவழிபாட்டிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பாக்கு கொத்து கொத்தாகக் காய்ப்பது போல உறவுகள் இருக்கவேண்டும் என்பதற்காக கமுகு மரம் கட்டப்படுகின்றது.

ஒரு சந்தி விருந்து

மணமக்கள் பட்டினிசாதம் அருந்தும் பொழுது உடல்முழுதும் எண்ணெய் தேய்த்து மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டப்படுகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து திருமண நாள் நெருங்க, நெருங்க மாப்பிள்ளையும், பெண்ணும் அவரவர் வீடுகளில் வேலைகளில் ஈடுபட்டிருப்பதாலும், அதிக ஆர்வத்தாலும் அவர்கள் உடல் அதிகளவில் வெப்பமடைந்திருக்கும். அவ்வுடல் சூட்டைத் தணிக்கவே எண்ணெய் தேய்த்து மஞ்சள்நீரால் குளிப்பாட்டப்படுகிறார்கள். மூன்று நாட்கள் நடைபெறும் மணவிழாவில் முதல்நாள் இரவு ஏழு மணிக்கு நடைபெறுவது பட்டினிசாத விருந்து. இவ்விருந்து மணமகன் / மணமகள் வீட்டில் தனித்தனியாக செய்ய வேண்டியது. இவ்விழாவில் மணமகன் / மணமகளுக்கு தாய்மாமன் வீட்டார் சிறப்பு செய்வது முறை. இந்நிகழ்ச்சியில் மணமக்களை மஞ்சள்நீரில் குளிப்பாட்டி வெண்சோறு மற்றும் சுண்ணாம்பு கலந்து மணமக்களின் தலையை வலம் சுழியாக வயதில் மூத்த சுமங்கலிப்பெண் மூன்றுமுறை சுற்றி திருஷ்டி கழிப்பார். தாய்மாமன் உடையெடுத்து கொடுத்ததை அணிவார்கள். மணமக்கள் உணவருந்துவார்கள். பட்டினி சாத விருந்து எனப் பெயர் வரக்காரணம் மணமக்கள் இந்த உணவு உட்கொண்டவுடன் அடுத்து முகூர்த்தம் முடிந்தபின்னர் தான் உணவு உண்பார்கள். அதுவரை பட்டினியிருப்பர். இதற்கு காரணம் அன்றைய நாட்களில் திருமண சீர்கள் இருநாட்கள் தொடர்ந்து நடைபெறும். அந்தசமயத்தில் இவர்களுக்கு இயற்கை உபாதை ஏற்பாடதிருக்க இந்த ஏற்பாடு. ஆனால் தற்போது பெயரளவில் மட்டுமே நடைபெறுகிறது இச்சடங்கு.

வெற்றிலைப் பாக்கு பிடித்தல்

(திருமணம் உறுதி செய்தல் திருமணத்தன்று இரவு நடைபெறுவதாக இருந்தாலும்)

மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து பூ வைத்து வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம் மணப்பெண்ணுக்கான சேலையை தட்டில் வைத்து அதனை மாத்துப்போட்டு மூடிய முக்காலி மேல் வைக்க வேண்டும். இரண்டு குத்துவிளக்குகளை வடக்கு மற்றும் தெற்கு பக்கமாக விளக்கேற்றி வைக்கவேண்டும். மாப்பிள்ளை வீட்டார் வடக்கு பார்த்தும், பெண்வீட்டார் தெற்கு பார்த்தும் அமர வேண்டும். வயதில் மூத்த சுமங்கலிப்பெண் தூபதீபம் காட்டி, கற்பூர தீபாரதனை காட்டி பூஜை செய்ய வேண்டும். சபையில் மாப்பிள்ளை வீட்டார். பெண்வீட்டாரிடம் பெண் கேட்க வேண்டும். பெண்வீட்டார் சம்மதித்த பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு இரவு ஐந்தேகால் ரூபாயும். காலை பத்தேகால் ரூபாயும் பரிசம் செலுத்த வேண்டும். பின்னர் மணமகளின் தோழிப்பெண்ணை அழைத்து மணமகளுக்குரியப் புடவையைக் கொடுத்து, அணிந்து அழைத்து வரச்சொல்ல வேண்டும்.

மணப்பெண் புதுப்புடவை அணிந்து வந்து சபையோரையும், பெரியவர்களையும் வணங்குதல் வேண்டும். பெரியவர்கள் மஞ்சள்அரிசி கொண்டு ஆசீர்வாதம் செய்தல் வேண்டும். பின்னர் மணமகளின் தந்தையார் மணமகனின் தந்தையாருக்கு துண்டுமூலம் உருமாலை கட்டி திருநீறு அணிந்து, சந்தனம் தடவி, குங்குமம் வைத்து மரியாதை செய்ய வேண்டும். அதே போல் மணமகனின் தந்தையார், மணமகளின் தந்தையாருக்கு செய்தல் வேண்டும். பின்னர் ஒன்பது வெற்றிலை. ஒன்பது பாக்கு எடுத்து கையில் வைத்துக்கொண்டு குலம் ஓத வேண்டும். சிவசமயம் செங்குந்த கோத்திரம் கந்தன் சகோதரன் வீரபாகு தேவர் வழியில் வந்த பன்னிரண்டு முதன்மைகளில் வந்த கொங்கு இருபத்துநான்கு நாட்டின் முதியோர்கள் பூட்டன், பாட்டன், தகப்பனார் பெயரைச் மாப்பிள்ளைப் சொல்லி, பெண்வீட்டாரின் குலம் சொல்லி இந்தக்குலத்தில் பெண் எடுக்க சம்மதிக்கிறோம் எனக்கூறி பங்காளிகள் முன்னிலையில் வெற்றிலை பாக்கை பெண்வீட்டாருக்குக் கொடுக்க வேண்டும். இதேபோல பெண் வீட்டாரும் செய்தல் வேண்டும்.

மாப்பிள்ளை வீட்டார்: சிவமயம் செங்குந்த கைக்கோளர் மரபு கந்தன் சகோதரன் வீரபாகு நவவீரர் வழியில் வந்த பன்னிரண்டு முதன்மைகளில் வந்த கொங்கு இருபத்து நான்கு நாட்டின் கோபிசெட்டிபாளையம் கோசலை நகர் எண் 1-ல் இருக்கும் பச்சாங் கூட்டம் பங்காளிகள்

அருணாசலமுதலியார், அருணாசலமுதலியார் மகன் பழனிமுதலியார்,


பழனிமுதலியார் மகன் முருகேசமுதலியார்,

முருகேசமுதலியார் மகன் காளீஸ்வரமுதலியார்,

காளீஸ்வரமுதலியார் மகன்

அருள்மணிமாறனுக்கு

செஞ்சி கூட்ட செல்வி கோவர்த்தினியை மணம் செய்ய சம்மதிக்கிறோம்.

கோவை கணபதியில் வசிக்கும் செஞ்சி கூட்டம் முத்துச்சாமிமுதலியார்,

முத்துச்சாமிமுதலியார் மகன் நாச்சிமுத்துமுதலியார், நாச்சிமுத்துமுதலியார் மகள்

கோவர்த்தினியை

பச்சாங்கூட்ட செல்வன் அருள்மணிமாறனுக்கு பெண் கொடுக்க சம்மதிக்கிறோம்.

அதன்பின் 108 சாமிகளுக்கு வெற்றிலை பாக்கு படைத்து, கீழ்கண்ட

செங்குந்த முதலியார் சமூக திருமண நிச்சயதார்த்த விழாவில் 108 வெற்றிலை பாக்கு வைப்பர் அந்த வெற்றிலை பாக்கு யார் யாருக்கு என்றது பற்றிய பட்டியல்





படைத்த வெற்றிலைப் பாக்குகளை முதல் வெற்றிலை பாக்கினை பெரியதனக்காரருக்கும். இரண்டாம் வெற்றிலை பாக்கினை பட்டக்காரர் கூட்டத்திற்கும் பிறகு அனைவருக்கும் வழங்கவேண்டும்.

சுவாமிகளுக்கு வெற்றிலை பாக்கு படைத்த பின்பு கீழ்க்கண்ட குலத்தவர்களுக்கு வரிசையாக வெற்றிலை பாக்கு வாழ்த்தி கொடுக்கவேண்டும்.

1. பெரியதனம்

2. பட்டக்காரர்

3. உள்ளூர் நாட்டாமை

4. உள்ளூர் பெரியதனம்

5. வெளியூர் நாட்டாமை

6.வெளியூர் பெரியதனம்

7. பெண் எடுக்கும் மாமன் மச்சான்

8. வாத்தியக்காரன்

9. வண்ணான்

10. நாவிதன்

11. உற்றார் செங்குந்தர் உறவினர்கள்

சீர்கொண்டுவருதல்

திருமணநாளின் இரவு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலிருந்து மணமகனின் சகோதரிகள் அரிசிக்கூடை கொண்டுவருவார்கள். இவ்வரிசியை வைத்துதான் திருமண விருந்து படைக்கவேண்டும் என்பது இதன்விளக்கம்.

மணமகன் அழைப்பு

மணமகன் அழைப்பு இரண்டுமுறை நடைபெறும். முகூர்த்த நாளுக்கு முந்தைய தினம் மாலை / இரவு மணமகன் வீட்டிலிருந்து புறப்பட்டு மணமகள் ஊருக்கு வந்தவுடன் ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலில் தங்கியிருப்பர். இவ்வாறு வந்த மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு, மணமகள் வீட்டார் அருந்த நீர் மற்றும் காபி கொடுத்து மணமகளின் தந்தை மணமகனுக்கு மாலையணிவித்து கோவிலில் இருந்து முகூர்த்தம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்வது முதல் முறை.

மணமகன் திருமண மண்டபத்திற்கு செல்லும்பொழுது மூன்று அல்லது போகவேண்டும். ஐந்து தட்டங்களை கொண்டு

1. பலகாரத்தட்டம் : இதில் அரியதரம். அச்சுப்பலகாரம். பயற்றம் உருண்டை, வெண்ரொட்டி, சிற்றுண்டி போன்றவை.

2. தேங்காய்தட்டம் : இதில் மூன்று தேங்காய்களுக்கு மஞ்சள்பூசி வைக்கவேண்டும்.

3.கூறைத்தட்டம்: ஒரு பெரியதட்டில் நெல் அல்லது பச்சரிசி பரப்பி அதன்மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை ஐந்து, முழுப்பாக்கு மூன்று, கஸ்தூரி மஞ்கள் ஒன்று, குங்குமடப்பி (மரத்தால் ஆனது), தேசிக்காய் ஒன்று. வாழைப்பழச்சீப்பு ஒன்று. கொண்டை மாலை ஒன்று. அலங்காரப்பொருட்கள் சீப்பு, கண்ணாடி, பவுடர், சென்ட், சோப்பு இவைகளுடன் தாலிக்கொடி, மெட்டி ஒரு ஜோடி ஆகியன வைக்கவேண்டும்.

கோவிலில் சாமி கும்பிட்டு முகூர்த்தநாளன்று அதிகாலை இரண்டாம் முறையாக மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும். அப்பொழுது கற்பூரம் காட்டி, மணமகனை கோவிலுக்கு அழைத்துச் சென்று, தாய் தந்தையரை விழுந்து வணங்கி மணவறைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். மணவறைக்கு வருமுன்னர் மாப்பிள்ளையை திருமணம் ஆகாத மைத்துனர்கள் துண்டு போட்டு விளையாட்டாக தடை செய்வார்கள். அத்துண்டில் மணமகன் ரூபாய் நோட்டுக்களை போடவேண்டும். இவ்வாறு இருமுறை அல்லது மூன்று முறை நடைபெறும். அதன்பின்னர் மண்டப வாசலில் மணமகளின் தங்கை முறை கொண்டவள் தலையில் பால்குடம் சுமந்து வந்து மணமகனின் கால்களை கழுவுதல் வேண்டும். பெண்வீட்டார் எதிரில்வந்து மணமகனை கூட்டிச்செல்ல வேண்டும். பெண்ணின் தகப்பன் மாப்பிள்ளைக்கு மாலை சூடுவார். பின் மாப்பிள்ளைத் தோழன் அவரை வலமாக மணவறைக்கு அழைத்துச் செல்வர்.

கிழக்கு நோக்கியிருக்கும் மணவறையில் தோழன் மணமகனுக்கு இடதுப்பக்கத்தில் அமருவார். மணவறையில் நெல் பரப்பி அதன்மேல் கம்பளம் / பலகை வைத்து மணமகளை இருத்துவது தான் மரபு. அய்யர் மணவறையில் வலதுபக்கத்தில் வடக்குநோக்கி அமருவார். பின்னர், அய்யர் கும்பம் வைத்து பவித்திரத்தை வலது கை மோதிரவிரலில் பஞ்ச கவ்வியத்தை சுற்றித்தெளித்து மணமகனும் அருந்த கொடுக்க வேண்டும். இதனால் அகமும் புறமும் சுத்தமடையும்.

கும்பம் வைத்தல் குறிப்பது

1. கும்பவஸ்திரம்

உடம்பின்நோய்

2.நூல்

நாடிநரம்புகள்

3.குடம் - தசை

4. தண்ணீர் - ரத்தம் 

5.நவரத்தினங்கள் எலும்பு

6. தேங்காய் தலை

7.மாவிலை தலைமுடி

8. தருப்பை குடுமி

9.மந்திரம்

உயிர்

நூல்காப்பு கட்டுதல்

தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், காப்புநூல் முதலியவற்றை பூசித்து, மாப்பிள்ளையின் வலது மணிக்கட்டில் காப்பு கட்டுவர்கள். பின்னர், அய்யர், சிவன், பார்வதி பூசை செய்வார். அக்னி மூட்டப்பட்டு, பூசையும் வழிபாடும் நடத்தப்படும். முகூர்த்த தோஷம் லக்கின தோஷங்கள் நீங்கவும், நல்லருள் புரிய வேண்டுமென நவக்கிரகத் தேவர்களுக்கும் மற்றும் நாலுத்திக்கிலும் தீபம் காட்டி பூஜை செய்வர்.

மணமகள் அழைப்பு

மணமகளை பட்டாடை அணிந்து அணிகலன்களைப் பூட்டி, முகத்தை மெல்லிய திரையால் மறைத்த வண்ணம் மணமகளின் தாய்மாமன் பட்டம் கட்டி, கைபிடித்து அழைத்துவந்து மணமகனுக்கு வலப்புறத்தில் அமரச்செய்வர். மணமகளுக்கும் அனைத்து பூஜைகளும் செய்யப்படும்.

தாலி கட்டுதல்

கூறை உடுத்திவந்து மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள மணமகளுக்கு. குறித்த சுபநேரத்தில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனை தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை இருகரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க வேதியர் வேதம் ஓத அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்,

''மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவன ஹேதுநா கண்டே பத்தாமி ஸீபகே ஸஞ் ஜிவச ரதசசம்.''

இதன் விளக்கமானது, எனது வாழ்வுக்கு காரணமான மங்கல நூலை உனது கழுத்தில் அணிவிக்கிறேன். நீயும் என்னுடன் நூறாண்டு வாழ வேண்டும் என்பதே. இதனை புரோகிதர் சொல்ல மணமகன் திரும்ப சொல்லவேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிடவேண்டும்.

தாலி

கொங்கு கைக்கோளர் செங்குந்த முதலியார் பயன்படுத்தும் தாலி. இந்த தாலியை பேச்சுவழக்கில் பெரிய தாலி என்பர்

தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும் தாலியும் சேர்த்து 7,9,11 என ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுனில் செய்யவேண்டும். தாலி கோர்க்கும் மஞ்சள்கயிறு ஒன்பது நூல்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.

மாங்கல்ய சரடு ஒன்பது இழைகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு இழையும் ஒவ்வொரு குணத்தை குறிப்பதாக உள்ளது. அவைகள்

1.தெய்வீககுணம்

2. தூய்மையான குணம்

3. மேன்மை குணம்

4.தொண்டுள்ளம்

5. தன்னடக்கம்

6.விவேகம்

7. உண்மை

8. உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளுதல்

9. ஒத்துப்போதல்

தாலிகட்டும் பொழுது மூன்று முடிச்சு போடுவதன் விளக்கம்

முதல்முடிச்சு :

கணவன் மற்றும் புகுந்தவீட்டிற்கு கட்டுப்பட்டவள்

இரண்டாவது முடிச்சு

தாய், தந்தை மற்றும் பிறந்த வீட்டிற்கு கட்டுப்பட்டவள்

மூன்றாவது முடிச்சு:

தெய்வத்திற்கு கட்டுப்பட்டவள்

தாலி கட்டுவதற்கு முன்னதாக சபையோருக்கு கற்கண்டு வழங்க வேண்டும். கையால் எடுத்து வாயில் போடுமாறு சிறு சிறு துண்டுகளாக்கப்பட்ட கற்கண்டு வழங்கப்படும். கற்கண்டை வாயில் போட்ட உடன் கரைவதில்லை. எனவே வாயில் இனிப்பு சிறிதுநேரம் நீடிக்கும். அந்த மலர்ந்த முகத்துடன் அனைவரும் இருக்கும் நேரம் தாலிகட்டப் படுவதால் அனைவரின் நல்லாசியும் மணமக்களுக்கு சென்றடையும்.

கைகோர்வை

கைகோர்வை என்பது மணமகனும், மணமகளின் சகோதரனும் கைகோர்த்து தட்டில் அரிசியைக் குவித்து அதற்குள் கைகளை நுழைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது அருமைக்காரர் மஞ்சள் அரிசியால் மங்கள வாழ்த்துப்பாடுவார்.

மாலை மாற்றுதல்

மணமகன் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகள் கழுத்தில் மாலை சூட்டுவான். மணமகள் மணமகனைத் தன் இடப்பக்கத்தில் அமரச்செய்து மாலை சூட்டுவாள். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்வை ஆரம்பித்தல் என்பதாகும். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும். பால் பழம் கொடுத்தல்

பால். வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். இருவரும் முதன்முதலில் உணவுகொள்வதால் திரை ஒன்று பிடிக்கப்படும்.

கைப்பிடித்தல்

மணமகனின் வலதுகை சுண்டுவிரலையும், மணமகளின் வலதுகை சுண்டுவிரலையும் கோர்த்து சிவப்புத்துணியில் கைகளைச் சுற்றி, மணமகன் முன்னால் நடக்க மணமகள் பின் தொடர அக்கினியை மூன்றுமுறை வலம் வரவேண்டும். நீயும்,நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என கையை பிடிக்கிறேன் என்பதாக இச்சடங்கு நடைபெறுகிறது.

முதல்முறை வலம் வரும்போது ஓமகுண்டத்தில் நெற்பொரியை இடுவார்கள். இரண்டாம்முறை வலம் வரும்போது இடக்காலில் அம்மியில் வைத்து மெட்டி அணிவிக்கப்படும். மூன்றாம்முறை அக்கினியை வலம் வரும் பொழுது கிழக்குப்பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள்நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் மோதிரத்தை (தங்கம் வெள்ளி) தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறை நடைபெறும். இச்சடங்கு மணமக்கள் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதை குறிப்பதாக அமைகிறது.

பின்னர் அய்யர் மணமக்களை மண்டபத்தின் வடக்கு வாசலுக்கு வந்து வானத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு பூஜை செய்து அருந்ததியை காண்பிப்பர். (பதிவிரதத் தன்மையை குறிப்பதாகும்). பின்னர் அய்யர் மணமக்களை மீண்டும் மணவறைக்கு அழைத்துவந்து, தீபாரதனை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரட்சையை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு, விபூதி, சந்தனம் கொடுத்து ஆசி வழங்குவார்.

பாத பூஜை

திருமணம் முடிந்தபின்னர் மணமக்கள் தங்கள் பெற்றோர்களுக்கு நன்றி செலுத்துவதாக அமையும் சடங்கு, மணமகன் தம் தாய் தந்தையரை தலைவாழையிழையில் நிற்க வைத்து, அவர்களது கால்களை பால் ஊற்றிக் கழுவி, திருநீறு, சந்தனம் பூசி, குங்குமப் பொட்டிட்டு வணங்க வேண்டும். அப்பொழுது அவர்கள் அட்சதை போட்டு வாழ்த்துவார்கள். மணமகளும் இச்சடங்கினை தனது தாய் தந்தையருக்கு செய்தல் வேண்டும்.

ஆசிர்வாதம் பெறுதல்

மணமக்கள் மணவறையை பெரியவர்களிடம் விட்டு கீழறிங்கி அவர்களின் சென்று கால் பெருவிரல்களைத் தொட்டு வணங்கி, அவர்களிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும். அப்பொழுது பெரியவர்கள் அட்சதையிட்டு ஆசிர்வதிப்பர்.

அட்சதை

முனைமுறியாத பச்சரிசியை பன்னீரில் நனைத்து அதனுடன் அருகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி. பெரியோர் இருகைகளாலும் அறுகரிசி எடுத்து ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றமும் முழுமையாய் சூழ பதினாறு பேறு பெற்று பெரு வாழ்வு வாழ்க என வாழ்த்தி உச்சியில் மூன்றுமுறை இட வேண்டும்.

மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்தரங்களை வெற்றிலையில் வைத்து குருதட்சனையோடு அய்யரிடம் கொடுத்தல்வேண்டும்.

சம்பந்தம் கலத்தல்

மணமக்களின் உறவினர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து வரவு செலவுகளை சரிபார்த்த பின்னர் இனிப்பு பண்டங்களை படைத்து விருந்துண்ண செய்வர்.

ஆரத்தி

ஒரு தட்டில் மூன்று வாழைப்பழத்துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகி ஆரத்தி எடுக்க வேண்டும். வாழைப்பழம் மற்றும் திரிகளுக்குப் பதிலாக தற்போது நீரில் மஞ்சள், சுண்ணாம்பை கரைத்து அதில வெற்றிலைத்துண்டுகளைப் போட்டு ஆரத்தி எடுக்கின்றனர். ஆரத்தி எடுக்கும்பொழுது யாருக்கு திருஷ்டி கழிக்கிறோமோ அவரை கிழக்கு / வடக்கு முகமாக நிற்கவைத்து வலம் சுழியாக ஆரத்தித்தட்டைச் சுற்றவேண்டும். மணமக்களுக்கு ஆரத்தி எடுக்கும்பொழுது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி, மணமகளின் பக்கத்தில் கீழிறக்கவேண்டும். இவ்வாறு மூன்றுமுறை சுற்றவேண்டும். இருதரப்பிலும் இருந்து ஒருபெண்ணாக இருசுமங்கலிப் பெண்கள் ஒன்றாக இணைந்து ஆரத்தி எடுப்பார்கள்.


மணமகன் வீட்டிற்கு செல்லுதல்

மணமக்கள் கோவில் சென்று தெய்வத்தை வணங்கிவிட்டு மணமகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வலது காலை முதலில் எடுத்து வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூஜை அறைக்குள் சென்று விளக்கேற்றி வணங்கிய பின் அருந்துவதற்கு பால் கொடுப்பார்கள். மணமகள் அருகில் இருக்கும் குழாயில் குடிநீரை நிறைகுடமாக நீர்பிடித்து இடுப்பில் வைத்து வீட்டிற்கு கொண்டுவரவேண்டும்.

கயிறு மாற்றல்

மணநாளன்று மாலை குலதெய்வம் கோவிலுக்குச் சென்று பொங்கலிட்டு பூஜை செய்து மணமகளுக்கு சரடு மாற்றப்படும். அப்பொழுது பொன்னினால் ஆன தாலிக்கொடியை அணிவிக்கலாம். அதற்குபிறகு தான் மணமக்களுக்கு சாந்திமுகூர்த்தம் மணமகனின் வீட்டில் நடைபெறும். அடுத்த நாள் மறுஅழைப்பு என்று பெண்வீட்டார் மணமக்களை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்செல்வர்.

தாய்மாமன் முறைகள் (சீர்கள்)

1. பட்டினி சாத விருந்தின்போது மணமகன் / மணமகளுக்கு உடைகள் எடுப்பது.

2.மணமகன் / மணமகளுக்கு சீர் செய்வது பொன்/பணம் பட்டம் கட்டுவது.

அத்தைகள் செய்ய வேண்டிய சீர்முறைகள்

1. மணமகளுக்குத் தோழியாக இருப்பது. முறையாக சீர் செய்வது.

2. அரிசிக்கூடை கொண்டுவருவது, சீர் தண்ணீர் ஊற்றுவது.

மைத்துனர்களின் கடமை

1. மணமகனுக்குத் தோழனாக இருப்பது, மணமகனுக்கு குடைபிடிப்பது.

2. மணமகன் முகூர்த்த அரங்கிற்கு வரும்போது துண்டுபிடித்துத்தடைசெய்வது. தாலிகட்டிய பின்னர் மணமகனுடன் கைகோர்வை செய்து மங்கல வாழ்த்தினைப் பெறுவது.

மைத்துனிகளின் கடமை

1. மணமகன் முகூர்த்த அரங்கிற்கு வரும்போது பால்கொண்டு அவரது கால்களை கழுவுவது.

பந்தல் பிரித்தல்

மணமகன் வீடு, மணமகள் வீடு என மூன்று முறை மணமக்கள் உறவினரோடு சென்று வந்த பின்னர் பந்தல் பிரிப்பதற்காக கெடாய் வெட்டி விருந்து கொடுப்பர்.




விடுபட்டுள்ளத் தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's app எண்ணிற்கு அனுப்பவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)