பிறப்பு மற்றும் படிப்பு
வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது என்ற கருத்திற்கு ஏற்ப அள்ளிக்கொடுத்த பரம்பரை ஐயா அவர்களின் பரம்பரை. அந்தப் பரம்பரைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் வாழ்ந்து வரும். கண்கண்ட வள்ளல் ஆர்.எம்.சண்முகவடிவேல் ஐயா. திருச்செங்கோடு செங்குந்தர் குலம் புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகள் சேர்ந்த சைவப்பெருவள்ளல் உயர்திரு. வி.வி.சி.ஆர் முருகேச முதலியார் திருமதி. தனலட்சுமி அம்மையார் ஆகியோரின் தவப்புதல்வன் ஆர்.எம்.சண்முகவடிவேல் அவர்கள்.
பழனி அரசு பள்ளியில் தமது பள்ளிப் படிப்பையும். மதுரை மதுரா கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
சமுதாயப் பணி
செல்வத்துப் பயனே ஈதல் என்ற பொன் வரிகளுக்குகேற்ப திரு. ஆர்.எம்.சண்முகவடிவேல் அவர்களின் குடும்பத்தார் பரம்பரை பரம்பரையாகச் சேர்த்த சேர்க்கும் செல்வம் எல்லாவற்றையும் சமுதாயப்பணிக்காகவும். இறைபணிக்காகவும் செலவிடுவதையே தங்கள் வழக்கமாகக் கொண்டவர்கள்.
முருக பக்தர்களின் நாவிலும் மனதிலும் பரிமளிக்கும் பக்திரசம் ததும்பும் 'செங்கோட்டு வேலவர் பிள்ளைத் தமிழ்' என்ற நூலினை ஓலைச் சுவடியிலிருந்து நூல் வடிவில் தொடர்ந்து இன்றும் தமது செலவில் அச்சிட்டு பக்தர்கள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்த பெருமை இவருடையது.
இவரது காலத்தில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலையின் சுற்றுபாதைக்குத் தார்சாலை அமைத்துக் கொடுத்தது இவரின் வள்ளல் தன்மையைக் காட்டுகிறது. மேலும் பழனி மலையில் பங்குனி உத்திரம் அன்று, மலையில் இருக்கும் முருகர் உற்சவ சிலைகளை, பழனியில் உள்ள ஐயா அவர்கள் இல்லத்திற்கு எழுந்தருளச் செய்து, ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு விருந்தளித்து இன்முகத்துடன் இறை பணியில் இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இவரது ஆன்மிகப் பணியின் ஒரு முத்திரை.
கல்விப்பணி
'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
என்பதை மூச்சாகக் கொண்டு செயல்படும் ஐயா அவர்களின் குடும்பத்தார் இறைபணியில் மனமுவந்து பெரும் செல்வத்தை செலவிட்டது போலவே கல்விப் பணிக்கும் செய்துள்ளனர். செங்குந்தர் பள்ளி அமைய அந்தக் காலத்திலேயே ரூபாய் 50,000/- கொடுத்ததுடன் இன்றும், பள்ளியின் வளர்ச்சிக்கு பெரும்பொருள் கொடுத்து உதவி வருகின்றனர்.
ஐயா ஆர்.எம்.சண்முக வடிவேல் அவர்கள் செங்குந்தர் கல்விக் கழகத்தின் தலைவராக இருந்து செங்குந்தர் கல்விக் கழகத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார். 'இந்த உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த கருவி கல்வி தான் என்பதை நன்கு உணர்ந்த ஐயா அவர்கள் கல்வி கற்க ஏழை மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் இன்றும் ஏராளமான மாணவ, மாணவியர்களுக்குக் கல்விக் கட்டணம் வழங்கி வருகிறார்.
பொதுத் தொண்டு
ரோட்டரி சங்கம் ஒருங்கிணைந்து செயல்பட்ட அக்காலத்திலேயே தன்னை இணைத்துக்கொண்டு, அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக சமூகப்பணியாற்றிவரும் இரண்டு உறுப்பினர்களில் தலைவர் ஐயா அவர்களும் ஒருவர். புகழ்பெற்ற Masonic Lodge அமைப்பில் இணைந்து சேவை செய்து வருவதுடன், சேல Jaycees அமைப்பிலும் ஒரு அங்கத்தினராகத் தம்மை இணைத்துக் கொண்டு தொய்வின்றி சேவை செய்து வருகின்றார். திருச்செங்கோடு மலைக்கோயிலில் 15 வருடங்களாம் அறங்காவலராக நிர்வாகியாகச் செயல்பட்டதுடன், சேலம் நூல் வியாபாரிகள் கழகத்திலும் பல்வேறு விதமான சேவைகளைச் செய்து வருவது நமக்குக் கிடைத்த பாக்கியமாகும்.
கல்விக் கழகப்பணி
எல்லாவற்றிற்கும் மேலாக செங்குந்தர் கல்விக் கழகத்தின் தலைவராக இருந்து அப்பதவிக்குப் பெருமை சேர்த்து வருபவர் ஐயா அவர்கள். செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி என ஒருபள்ளியாக இருந்ததை. படிப்படியாக முன்னேற்றி, இன்று ஏழு பள்ளிகளுடன் சுமார் 6000 மாணவ, மாணவிகளுடன் வெற்றிநடை போட்டு ஈரோட்டிற்கு மற்றொரு பெருமையை இக்கல்வி நிறுவனங்கள் பெற்று தருகின்றது என்றால் அதன் பெரும் பங்கு ஐயா அவர்களையே சாரும்.
முடிவுரை
வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் வேண்டும் - பொருளீட்டுதல் என்பது பிறர்க்கு கொடுப்பதற்கே -நடுவூருள் பழுத்த நன்மரம் போன்று எல்லோருக்கும் பயன்படும் வண்ணம் வாழ்தலே வாழ்வு எனப் பரம்பரை பரம்பரையாக நன்மை செய்து, வாழ்ந்து வரும் ஐயா திரு.ஆர்.எம்.சண்முகவடிவேல் அவர்களின் ஈதல் குணம் இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.