வாத்தியார் சுவாமிகள் செங்குந்தர்

0

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், பொங்குபாளையத்தில் 1862ஆம் ஆண்டு தோன்றியவர் அம்மாசையப்ப முதலியார் எனும் வாத்தியார் சுவாமிகள். அன்னார் செங்குந்த கைக்கோள முதலியார் குலம் பச்சையான் கூட்டம் பங்காளிகளை சேர்ந்த  நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் அவிநாசி புக்கொளியூர் மடத்தில், இருந்த மன்னார்குடி அறிவானந்த சுவாமிகளிடம் குரு உபதேசமும், சிவதீக்கையும் பெற்றார்.



அவிநாசித் திருக்கோவிலுக்கு வாத்தியார் சுவாமிகள் சுமார் 30 ஆண்டுகளும், அவருக்குப் பின் அவருடைய மூத்த மகன் கொண்டப்பன் என்கிற அருள்பிரகாச சுவாமிகளும் 40 ஆண்டுகள் தீபமேற்றி கோவிலில் வழிபாடு செய்து வந்தனர்.


இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்று இருந்த வாத்தியார் சுவாமிகள். தன்னுடைய ஊரான பொங்கு பாளையத்தில் வசித்து வந்த மக்களுக்கு திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தியும்,சோதிடம், மருத்துவம் போன்ற கலைகளைக் கற்று மக்களுக்குத் தொண்டாற்றியும் வந்தார். அதனால் மக்கள் அவரை 'வாத்தியார் சுவாமிகள்' என அழைத்தனர்.


வாத்தியார் சுவாமிகளுக்கு,


1.கொண்டப்பன் என்கிற அருள்பிரகாச சுவாமிகள்


2. குழந்தைவேல் முதலியார்


3. உண்ணாத்தாள்


என்று மூன்று குழந்தைகள். மூத்த மகனான அருள்பிரகாச சுவாமிகள் துறவியாகவே வாழ்ந்து இறைவனின் திருவடி அடைந்தார். அவரின் இரண்டாவது மகனான குழந்தைவேல் முதலியாரின் மகன் கணேசன் அவருடைய மகன் காளீஸ்வரன் அவர்களும் மற்றும் வாத்தியார் சுவாமியின் தம்பி பேரன் திரு.சண்முகம் அய்யா அவர்களும் வாத்தியார் சுவாமிகள் எழுதிய அருட்பாடல்களின் ஓலைச்சுவடிகள் அனைத்தையும் பாதுகாத்து வந்தனர்.


ஓராண்டுக்கு முன்னர் திருப்பூர், பெரியாயிபாளையத்தில் இருக்கும் சிவத்திரு. க.நஞ்சப்பன் அவர்களிடம் பழம்பெரும் ஓலைச்சுவடிகள் ஏதேனும் உள்ளதா? என வினவினேன். அவர் தன்னிடம் இல்லையென்றும், ஆனால் தன்னின் உறவினர்களான வாத்தியார் சுவாமிகள் குடும்பத்தினரிடம் உள்ளது என்றும், அவர்கள் ஓலைச் சுவடியினை பாதுகாத்து பூசை செய்து வருவதாகவும் கூறினார்.


அதனடிப்படையில் எனது நண்பரும், பொங்கு பாளையத்தைச் சேர்ந்த திரு.சி.சதாசிவம் அவர்களிடம் இதனைப் பற்றிக் கூற, அவர் உறவினரும், வாத்தியார் சுவாமிகளின் இரண்டாவது மகனான குழந்தைவேல் முதலியார் அவர்களின் மாணவருமான திரு. கவிஞர் தூரன் பழனிச்சாமி அவர்களிடம் அழைத்துச் சென்று ஒலைச் சுவடிகளைப் பற்றிக் கூறி கேட்க அவரும் வாத்தியார் சுவாமிகளின் குடும்பத்தாரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அதன் விளைவாகவும், பெருங்கருணாம்பிகை எனது வழிபடு கடவுளான உடனமர் அவிநாசியப்பரின் திருவருளாலும் ஓலைச்சுவடிகள் அனைத்தையும் என்னிடம் கொடுத்தனர்.


அவ்வோலைச் சுவடிகளை படியெடுக்கும்போது திரு. தூரன்பழனிச்சாமி அவர்கள் ஓர் நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்து அதில் வாத்தியார் சுவாமிகள் எழுதிய ஆறு பதிகங்கள் உள்ளன. அதனையும் பாருங்கள் என்றார். அதனை ஓலைச் சுவடிகளோடு வைத்து ஒப்பிட்டு நோக்கி, இந்த நூல் அச்சாகி வெளிவருகிறது.


வாத்தியார் சுவாமிகளின் வழிபாடுகடவுள் விநாயகப்பெருமான். விநாயகர் சதுர்த்தி அன்று பொங்குபாளையத்தில் உள்ள விநாயகப் பெருமான் ஆலயத்தில் சுவாமிகள் வழிபாடு செய்து, தான் இயற்றிய ஆதார தரிசனப் பதிகத்தைப் பாடுவாராம். அவ்வாறு பாடி முடித்தவுடன் வான்மேகம் கருத்து, சுமார் 1 மணி நேரம் மழைபொழியுமாம். இதனை அங்குள்ள பெரியவர்கள் இன்றும் நினைவு கூறுகின்றனர்.


இதனை கவிஞர் தூரன் பழனிச்சாமி அவர்கள்,


விநாயக சதுர்த்தி விழாக்களி லன்று விநாயக னுக்கு வேண்டிய செய்து


மல்லிகை முல்லை மலர்ந்த செண்பக வில்வ மெடுத்து மேனியிற் சார்த்தி அருகு மாலையை அன்புடன் சார்த்தி உருகு மனமுடன் உளமகிழ்ந் தாடி


இளநீர் வைத்து இச்சைக் கினிய புளக முக்கனி பொறுக்கி வைத்து பொன்னர ளிப்பூப் போற்றி யெடுத்து இன்னுளம் பொங்க இருகண் நீர்விடப்


பாடிப் பணிந்து பரம திருப்தியாய் வீடினி தேகில் விண்ணோர் பார்த்து மாரி பொழிந்து மகிழ்ச்சி மிக்கராய் ஆரிவ ரென்று அன்பு கொள்வராம்


என புகழ்ந்து பாடியுள்ளார். இதனை இன்றும் அவ்வூர் மக்கள் நினைவு கூறுகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆதார தரிசனப் பதிகம் தான் முதல் பதிகமாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ஓலைச்சுவடியை வழங்கிய வாத்தியார் சுவாமிகளின் குடும்பத்தாருக்கும், அதனைப் பெற உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி.


பாடல்களை நோட்டுப்பிரதிகளில் இருந்தும், ஓலைச் சுவடிகளில் இருந்தும், படியெடுக்கிறபொழுது பாடல்களின் சீர்கள் மாறியிருந்தன. அதனை சரியான முறையில் இலக்கணச் சுத்தமாக மாற்றித்தந்த திருப்பூர், நஞ்சப்பா மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் பைந்தமிழ்ச்செம்மல் ஒ.சுந்தரமூர்த்தி எம்.ஏ.,பி.எட்.,எம்.பில்., அவர்களுக்கு நன்றிகள்.


பாடல்களை மட்டும் நூலாகப் போடலாம் என்று எண்ணுகிறபோது எனது நண்பர்கள் சுருக்க உரை இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். அதன் விளைவாக, உரை எழுதிப் பதிப்பிக்கலாம் என எண்ணினேன். அடிப்படையிலேயே இந்நூலுக்கு உரை எழுதினேன்.


யாம் உரை எழுதுகின்ற போது பல்வேறு இடங்களில் சந்தேகங்கள் எழுந்தன. அச்சந்தேகங்களை நிவர்த்தி செய்த பேரூர், மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் தலைவர் சித்தாந்த ஞானசரசுவதி சிவத்திரு.ந.இரா.சென்னியப்பனார் அவர்களுக்கும், திருப்பூர், பெரியார் காலனி, சிவத்திரு. சு.மாணிக்கவாசகம் அண்ணா அவர்களுக்கும் இச்சமயத்தில் நன்றி உரைக்கக் கடமைப்பட்டுள்ளேன்.


நான் எழுதிய உரைகளை சரிபார்த்தும், செப்பனிட்டும் கொடுத்த கோபி, பேராசிரியர் சிவத்திரு. இரா. க. மாணிக்கம் அய்யா அவர்களுக்கும், கோவை, வித்வான் சிவத்திரு. கு.சோ.முருகன் அய்யா அவர்களும் நன்றிகள் பல.


வாத்தியார் சுவாமிகளின் ஆதார தரிசன நூலுக்கு மிகச் சிறப்பானதொரு அணிந்துரையை வழங்கியுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் மேனாள் உதவி ஆணையர் மற்றும் வழக்குரைஞர் மதிப்புமிகு சிவத்திரு. அழ.முத்துப் பழனியப்பன் எம். ஏ., பி.எல்., அவர்களுக்கும் நன்றிகள்.


இந்நூலை அற்புதமான முறையில் தட்டச்சு செய்து கொடுத்த திருமதி. ச.சரண்யா, திருப்பூர் அவர்களுக்கும், இந்நூலினை நன்முறையில் அச்சிட்ட சௌமி அச்சக உரிமையாளர் சைவத்திரு. தே.திருஞானசம்பந்தம் அவர்களுக்கும் எனது நன்றிகள் என்றும் உரியன.




இவர் எழுதிய ஓலை சுவடிகள் பற்றிய ஆங்கில நாளிதழில் வெளிவந்த கட்டுரை


Post a Comment

0Comments
Post a Comment (0)