ஊமையம்பட்டி ந.கந்தசாமி முதலியார்

0

 நாம் மறந்த நம் இனக் கவிஞர் ! ஊமையம்பட்டி ந.கந்தசாமி முதலியார்


சேலம் மாவட்டத்தில், இப்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் (மல்லை என்று இன்று சுருக்கமாய் அழைக்கின்ற ஒரு சிற்றூரில் - ஊமையம்பட்டி என்ற, வண்டி, வாகன வசதி இல்லாத, தெரு விளக்குகள் கூட அக்காலத்தில் இல்லாத ஒரு குக்கிராமத்தில் நா.கந்தசாமி பிறந்தார், அவரின் பெற்றோரின் பெயரைக்கூட அவரின் உறவினர்களால், பேரன் என்று சொன்னவரும் கூட சொல்லவில்லை. தெரியவில்லையோ என எண்ணுகிறேன்.


ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையை நான் 1990ல் ஈரோட்டில் தொடங்கி ஆண்டு தோறும் விழா நடத்தி, சான்றோர்களுக்கு விருதுகள் அளித்து வருகிறோம். அந்த வகையில் 1996ஆம் ஆண்டில் ராசிபுரத்தில் ஒரு சிறந்த கவிஞர் உள்ளார். அவர் பெயர் ஊமையம்பட்டி ந.கந்தசாமி என்று பேரவையின் துணைத்தலைவர் திரு.மழைமகன் கூற,நானும் மழை மகனும் ராசிபுரம் சென்று அவரிடம் பேசியபோது, தான் எழுதி அச்சிட்டிருந்த இளமை நினைவு, பாரதி பராக்கிரமம் அலிபுரம் நொண்டி என்ற மூன்று நூல்களினைத்தந்தார். மிகச்சிறந்த அந்த மூன்று நூல்களைக் கண்ட நாங்கள் வியந்தோம். அந்த ஆண்டு ஒட்டக்கூத்தர் விருதை கவிஞர் ஊமையம்பட்டி ந.கந்தசாமி அவர்களுக்கே அளித்தோம்.


அப்போதெல்லாம் விருதுக்கு ரூ. 1000/- பொற்கிழியும் தந்தோம். விருதுபெற விழாவுக்கும் கவிஞர் வரவில்லை. அதனால் அந்த விருதைத் தர நானும் மழைமகனும் அவர் இல்லத்திற்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்ற நேரத்தில் அவர், அவர் வீட்டின்முன் இருந்த முருங்கை மரத்தின் கீழே நிழலில் போடப்பட்டிருந்த, கல்லின்மேல் சம்மணம்போட்டு அமர்ந்திருக்க, நாவிதர் அவருக்கு முடிவெட்டிக் கொண்டிருந்தார்.


நாங்கள் இருவரும் வீட்டிற்குள் வருவதைக் கண்ட கவிஞர் வாருங்கள். என்ன சேதி என்றார். விருதைத் தந்துவிட்டு அதற்கான பொற்கிழியும் தரவந்தோம் என்றோம். நான் சுதந்திரப் போராட்ட வீரன் தெரியுமில்ல, எனக்கு அரசாங்கம் பென்சன் தருகிறது. அதையே செலவுபோக, இங்கே உள்ள குழந்தைகள் நன்கு படிக்கச் சொல்லி, அவர்களுக்கு வேண்டிய சில பல செலவுகளுக்குப் பணம் தருகிறேன். உங்கள் பணம் எனக்கு வேண்டாம். சேலத்தில் ஒரு நண்பர் பெயரைச் சொல்லி அவரிடம் தந்து விடுங்கள் என்றார். உடனே நான். நாங்களே நன்கொடை வாங்கித்தான் விழா நடத்துகிறோம். இந்தப் பணத்தை நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்றோம். அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.


சற்றேறக்குறைய 65. 70 வயதிருக்கும் அவருக்கு அப்போது, கூர்மையான பார்வை. நல்லசிவப்பு, தெளிவான பேச்சு, நாடு, மொழிமேல் மிகுந்த பற்றுடன் பேசினார். பணம் ஒரு பொருட்டே இல்லை என்றும். தேவைக்குமேல் பணம் எவரிடம் உள்ளதோ அவர் திருடர் என்றும். செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்பதற்கிணங்க எல்லாரும் இயன்ற உதவிகளைத் தன் உறவினர்களுக்குச் செய்தாலே நாடு உருப்பட்டுவிடும். நன்றாக இருக்கும் என்று சொன்னார்.


வறுமைநிறைந்த வீட்டில் பிறந்த கவிஞர் எப்போதும் கலகலப்பாகவே இருந்திருப்பார் என்பது அவரின் கவிதைகளில் அவர் கூறியுள்ள நிலா விளையாட்டு,இளைஞர்களிப்பு, முதுவேனில், பழவேட்டை, ஆடிமாதம் என்ற தலைப்புகளில் எழுதியுள்ள அவரின் பாக்கருத்துகளே அவர் எப்படி இளமையிலே இருந்திருப்பார் என்பதனை நாம் அறிந்து கொள்ள வாய்ப்பாகும்.


மேலும், இளமை நினைவுகள் என்னும் தன் நூலில் நீர் வளம், எங்கள் ஊர், ஏரிவளம், மார்கழி, தை மாதம், உழவர் போக்கு என்னும் கவிதைகளில் அவரின் கவி எழுதும் திறம், தன் ஊரின்மேல் கொண்டபற்று, ஊருக்குள் இருந்த வளங்கள் அனைத்தும் படிக்கப்படிக்க மனத்தை மகிழ்விக்கின்றன. பாடல்கள் அனைத்தும் பல்வேறு பா வகைகளில் எழுதி இருப்பதைக் காண்கையில் தமிழ்மேல் அளவு கடந்த பற்று கொண்டவர். நாட்டின் மேலும் மிகவும் பற்று கொண்டவர் என்பதை அறியலாம்.


மேலும் இவர்


விடுதலை வேட்கை


பாரதி பராக்கிரமம்


குமரன் தியாகம்


உழைப்போர் உள்ளம்


காந்தி காவடிச் சிந்து


அலிப்புரம் நொண்டி (நாடகம்)


கந்தசாமி கவிதைகள்


மேலும், பல பாடல்கள், கவிதைகளை இவர் எழுதியுள்ளார் என்பது "இளமை நினைவுகள்" என்னும் நூலின் மூலம் அறிந்து கொள்கிறோம்.


1956ல் கவியரசர் கண்ணதாசன் அவர்களும் கவிஞர்


ஊமையம்பட்டி கந்தசாமி அவர்களும் ஒரே தொடர்வண்டியில் பயணித்தார்களாம். கவியரசு கண்ணதாசன்தான் எதிரில் அமர்ந்துள்ளார் என்பதை அறியாத ஊமையம்பட்டியார் தன்பாட்டொன்றை இசையாக பலமாகப் பாடிக்கொண்டிருந்தாராம். அதைக் கேட்ட கவியரசர் அவர்கள் இவரை யார் எந்த ஊர் என்பதை அறிந்து கொண்டு அதன்பின் தான் கண்ணதாசன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம். ஊமையம்பட்டியார் அலட்டிக்கொள்ளாமல், "ஓ அப்படியா" சினிமாவுல நாட்டு மொழிப்பற்று மிக்க பாடல்களாக எழுதலாமே என்றாராம்.


அதன்பிறகு பயணம் முடித்து இருவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டனராம். அதன்பின் 4, 5 வாரம் கழித்து குமுதம் வார இதழில் கவியரசர் பேட்டியில், ரயிலில் ஒரு கவிஞரைப் பார்த்தேன். மிகச்சிறந்த பாடல் எழுதித்தானே பாடிக் கொண்டிருந்தார். இவரைப் போன்றதிறமைசாலிகள் ஏராளம் நாட்டில் உள்ளனர். அவர் ஊமையம் பட்டி கந்தசாமி என்று தன்பெயரைச் சொன்னார். இவர் திரைத்துறைக்கு வந்தால் நான் இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவேன் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் கவியரசர். இச்செய்தியை ஊமைபட்டிக்கவிஞர் எங்களிடம் சொல்லி அந்தக் குமுதம் இதழையும் காட்டினார். மிகச்சிறந்த ஒரு கவிஞருக்குத்தான் ஒட்டக்கூத்தர் விருதைத் தந்துள்ளோம் என்ற மன நிறைவுடன் நானும்மழைமகன் அவர்களும் ஈரோடு திரும்பினேன்.


மகாத்மாகாந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி போன்ற தலைவர்களைப் பார்த்துள்ளதாக மிகப்பெருமிதத்துடன் கூறினார். இளமையில் எதிலும் விளையாட்டில், பேச்சில் முதல் வரிசையிலே முன்னவராகவே இருந்தாராம். ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பாராம். பயம் என்பதே என்னவென்று அறியாதவராய் இருந்ததனால்தான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாராம். அன்னியதுணிகள் புறக்களிப்பு. உப்புசத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டதனால் இரண்டரை ஆண்டுகாலம் வெள்ளையனின் கொடுஞ்சிறையில் துன்பங்கள் அனுபவித்துள்ளாரம், சொல்லும்போது மகிழ்ச்சியாகவும் மிடுக்காகவும் கூறினார்.


வீரம் செறிந்த தியாகியை, திறமைவாய்ந்த கவிஞரைக் கண்டு பேசிய மகிழ்ச்சியில் நாங்களிருவரும் விடைபெற்றுக் கொண்டு ஈரோடு மாலை


வந்து சேர்ந்தோம்.


Post a Comment

0Comments
Post a Comment (0)