1929 முதல் செங்குந்தர் மாநாடு முக்கிய நிகழ்வுகள்

0




ஒரு கண்ணோட்டம் * (1929 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த தென்னிந்திய செங்குந்தர் முதலாவது மாநாட்டைப் பற்றிச் செங்குந்தமித்திரன் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு ) செங்குந்தர் வரலாறு மீட்பு குழு 78269 80901 தென்னிந்திய செங்குந்தர் முதலாவது மாநாடு விபல ஆண்டு, தைத் திங்கள் 7, 8 தேதிகளில் (19. 20-1-1929) ஈரோட்டில் நடைபெற்றது. தலைமைச் சங்கத்தின் விருப்பப்படி ஜனவரி மாதத்தில் மாநாட்டைக் கூட்டுவதென 10-10-1928இல் முடிவு செய்யப்பட்டது. தலைமைச் சங்கத்தாரின் ஆலோசனையையும், ஒத்துழைப்பையும் பெரும் பொருட்டுத் தலைமைச் சங்கத்தின் அமைச்சரும் செங்குந்தமித்திரன். ஆசிரியருமாகிய திரு. ம. சண்முகசுந்தர முதலியார் எம். ஏ. எல். டி... அவர்களை ஈரோடு, சித்தோடு, வாத்துக்குளி முதலிய இடங்களைச் சேர்ந்த செங்குந்த மகாஜனங்கள் 12-12-28இல் வரவழைத்து மகாநாட்டைச் சிறப்புடன் நடத்துவதற்குரிய ஆலோசனைகளைப் பெற்றனர். தென்னிந்திய செங்குந்தர் முதலாவது மாநாடு என்னும் பெயருடன் சமூக மாநாடு, வர்த்தகர் மாநாடு, வாலிபர் மாநாடு, கைத்தொழிற் கண்காட்சி என்னும் பிரிவுகளுடன் கூட்டுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. கோவை திரு. V.S. செங்கோட்டையா முதலியார் அவர்கள் சமூக மாநாட்டு வரவேற்புத் தலைவராகவும், திருச்செங்கோடு திரு. T. R. கந்தப்ப முதலியார் அவர்கள் வர்த்தகர் மாநாட்டு வரவேற்புத் தலைவராகவும், ஈரோடு திரு. நா. மு. சண்முகசுந்தர முதலியார் அவர்கள் வாலிபர் மாநாட்டு வரவேற்புத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். திரு. V. V.C.V. நடேச முதலியார் அவர்கள் பொதுச் செயலாளராகவும், திரு. செ. ராமசாமி முதலியார் அவர்கள், திரு. V.V.C.V. பெரியசாமி முதலியார் அவர்கள் ஆகிய இருவரும் பொருளாளர்களாகவும் அமர்த்தப்பட்டனர். ஈரோடு திரு. S. மீனாட்சிசுந்தர முதலியார் பி. ஏ. எல். டி. அவர்கள் (தலைமை யாசிரியர் . ராஜா உயர் நிலைப் பள்ளி, சிவகங்கை ) தொண்டர் படைத் தலைவராக இருந்து மிகச் சிறப்புடன் தொண்டாற்றினார். பிரஞ்சு அரசாங்கத்தின் இந்திய அமைச்சர் புதுவை திரு. ஆ. வே. முத்தைய முதலியார் பி. ஏ... பி.எல் .. அவர்கள் சமூக மா நாட்டின் தலைவராகவும், தென்காசி திரு. தெ.ப.கு. ஆறுமுக முதலியார் அவர்கள் வர்த்தகர் மாநாட்டிற்குத் தலைவராகவும், குடியேற்றம் திரு. மா. வே. பீமராஜா முதலியார் அவர்கள் வாலிபர் மாநாட்டிற்குத் தலைவராகவும் இருந்து சிறப்பித்தனர். கனம் திவான்பகதூர் சென்னை அரசாங்கத்தின் சட்டசபை மெம்பர் எம். கிருஷ்ணன் நாயர் பி. ஏ., பி. எல்., அவர்கள் சமூக மாநாட்டையும், திருவாரூர் திரு. தி. நா. சபாபதி முதலியார் அவர்கள் வர்த்தகர் மாநாட்டையும், கொல்லங்கோடு திரு. கு. முத்துக்குமாரசாமி முதலியார் அவர்கள் வாலிபர் மாநாட்டையும் திரு. ஈ.வி. ராமசாமி நாயகர் அவர்கள் கண்காட்சியையும் திறந்துவைத்துப் பெருமைபடுத்திச் சிறப்பித்தனர். தலைச் சங்கத்தின் பிரதிநிதியாக, ஈரோட்டில் இருந்து மாநாட்டினைச் சங்கத்தின் சட்டப்படிக்கு நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து மாநாடு சிறப்புடன் நடைபெறத் துணைபுரியும்படி திரு. பி. செ. மாணிக்கவாசக முதலியார் அவர்கள் தலைச் சங்கத்தாரால் மா நாட்டுச் சிறப்புச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 மாதல் களுக்கு முன்னரே ஈரோட்டுக்கு அனுப்பப்பட்டார். மாநாடு சம்மந்தமாக அவ்வப்போது நடைபெறும் வேலைகள் துண்டுப் பிரசுரம் மூலமாகவும், தமிழ், ஆங்கில தினசரிப் பத்திரிகைகள் வாயிலாகவும். 'செங்குந்த மித்திரன்' மூலமாகவும் அனைவரும் அறியும்படி வெளியிடப்பட்டன, மாநாட்டிற்கென பிரப் துரையவர்கள் மைதானத்தில் 600 அடி நீளமும், 400 அடி அகலமும் உள்ள 'செங்குந்த நகர் ' ஒன்று புதிதாய் நிர்மாணிக்கப்பட்டது. அதனுள் ' நவ வீரர் மாளிகையும்' அதனைச்சுற்றித் தெருக்களும் அமைக்கப்பட்டன. நவவீரர் மாளிகை 800 அடி நீளமும், 200 அடி அகலமும் உடையதாய் விளங் கியது. மாளிகையின் தெற்குப் பாகத்தில் 50 அடி நீளமும் 39 அடி அகலமும் உள்ள 400 பேர் அமரக்கூடிய மேடை அமைக்கப்பட்டது. செங்குந்தர் நகரில் நுழைந்தவுடன் மேற்கில் அமைந்த 'கந்தப்ப முதலியார் வீதி யில் வரவேற்புத் தலைவர்கள் அலுவலகம், செயலாளர் அலுவலகம், விசாரணை அலுவ லகம், செங்குந்தமித்திரன் அலுவலகம், ஒட்டக்கூத்தர் வாசகசாலை, சில விற்பனைச் கடைகள் முதலிய இருந்தன. இடதுபுறமாகச் செல்லும் 'சண்முகசுந்தர முதலியார் வீதி'யில் தொண்டர் தலைவர் அலுவலகமும், சில விற்பனைக் கடைகளும் காணப்பட்டன. வலதுபுறமாகச் செல்லும் 'சபாபதி முதலியார் வீதியில் தமிழ்நாடு, திராவிடன், குடியரசு முதலிய பத்திரிகைகளின் காரியாலயங்களும், சில கண்காட்சி சாலைகளும் அமைக்கப்பட்டிருந்தன கிழக்கில் அமைந்த 'செங்கோட்டையா முதலியார் வீதியில் அரசாங்கத்தில் கைத்தறித் தொழிற்சாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட புதுமாதிரித் தறி நெசவு சாலைகளும், துணிகளுக்கு அச்சடிக்கும் இயந்திரச் சாலைகளும், சாயந்தீர்க்கும் சாலைகளும் மற்றும் அநேக விசித்திரக் கண்காட்சி சாலைகளும் அழகுற விளங்கின. இவ்வீதிகளுக்கு நடுவணதாய இடத்தில் 60 அடிகளுக்கு மேற்பட்ட உயரமுள்ள செங்குந்த கொடிமரம் நாட்டப்பட்டிருந்தது. ஈரோட்டின் எந்தப் பாகத்திலிருந்து பார்த்தாலும் இக்கொடி மரத்தின் ஊச்சி நன்கு தென்பட்டது. ஈரோடு நகரமானது. ரயில்வே ஸ்டேஷன் முதல் 'செங்குந்தர் நகர்' வரையில் உள்ள முக்கியத் தெருக்கள் எல்லாம், தோரணங்களும், கொடிகளும், பச்சிலைகளும், வாழை, கமுகு, ஈச்சு முதலிய மரங்களும் கட்டப்பட்ட பூப்பந்தல்களாலும், சித்திர வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டுத் தேவ நகரம் போல் திகழ்ந்தது. மாநாட்டையொட்டி, ஈரோடு நகராட்சி சிறப்பான பல ஏற்பாடுகளைச் செய் திருந்தது. தெருக்களில் சிறிதும் குப்பை இல்லாமல் அவ்வப்போது சுத்தம் செய்து அப்புறப்படுத்தவும். பிரதிநிதிகள் தங்குகின்ற இடங்களில் உள்ள கக்கூஸ்களை அடிக்கடி சுத்தம் செய்யவும், செங்குந்த நகரில் உள்ள வீதிகளை ஒழுங்காக வைத்திருக்கவும் பல நகராட்சித் தொழிலாளர்களை எப்போதும் தயாராக இருக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மாநாடு கூடுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பிருந்தே ஈரோடு நகரிலும். செங்குந்த நகரிலும் உள்ள முக்கியமான தெருகளுக்கு எல்லாம் லாரி மூலமாகத் தண்ணீர் தெளித்துச் சிறிதும் புழுதி கிளம்பாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாடு நல்ல நிலவுக் காலத்திற் கூடினாலும் வரவேற்புக் கழகத்தினர் விரும்பிய பல இடங்களில் விளக்குகனைப் புதிய தாய் அமைத்தும், அவசியமான சில இடங்களில் புதிதாய்க் குழாய்கள் வைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகராட்சி ஆரம்ப பாடசாலைகளுக்கும், உயர் நிலைப் பள்ளிகளுக்கும் 21 ஆம் தேதி திங்கள் கிழமை உட்பட சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தினங்களும் விடுமுறை விடப்பட்டது. அப்பள்ளிகளில் பிரதிநிதிகள் தங்குவதற்காக அவற்றைக் காலி செய்து தந்து உதவியது. இவையாவும் நகராட்சியின் விஷேச ஏற்பாடுகளாகும். ஊர்வலம் காலை 8.30 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டது. புறப்படும்போது 5000 பேர்கள் அடங்கிய ஊர்வலம் புறப்பட்ட சிறிது நேரத்திற் குள்ளாக 10000 பேர்கள் அடங்கிய ஊர்வலமாக மாறி 10 மணிக்குச் செங்குந்தர் நகரை அடையும்போது 15000 பேர்கள் கொண்டதாக முடிவடைந்தது. ஊர்வலம் கொடி மரத்தை அடைந்ததும் தொண்டர் படைத் தலைவர் திரு. S. மீனாட்சிசுந்தர முதலியார் பி. ஏ., எல். டி.... அவர்கள் செங்குந்தர் கொடியேற்றப் பாட்டினை இனிய இராகத்தோடு பாடினார். அதன்பின் மாநாடு சிறப்புடன் தொடங்கியது. தொகுப்பு : ந. சண்முகானந்தன், T. ஜெகதீசன். மலர்க் குழு

Post a Comment

0Comments
Post a Comment (0)