அயன்பொம்மையாபுரம் - ஒரு வரலாற்று பார்வை
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நமது செங்குந்தர் சமுதாய மக்கள் வேறு இடத்திலிருந்து புலம் பெயர்ந்து தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம் மதுரை சாலையில் அயன்பொம்மையாபுரம் என்னும் கிராமத்தை உருவாக்கி ஐந்து தெருக்களில் வசித்து வந்தனர். அப்போது கூரை வீடுகளும், ஓலை வீடுகளும் அதிகமாக இருந்தன. நம் சமூக மக்கள் தன் குலத் தொழிலான நெசவுத் தொழிலோடு விவசாயத்தையும் மேற்கொண்டனர். அநேகமாக எல்லோருடைய வீடுகளிலும்தறி இருந்தது.
ஐந்து தெருக்களில் நடுத்தெருவில் ஒரு சிறிய கூரை வீட்டில் பிள்ளையார் கோவில் இருந்தது. இங்கு தான் செங்குந்தர் இராமலிங்கம் தொடக்கப்பள்ளி நடத்தப்பட்டதாக பெரியவர்கள் கூறினர். 1952ஆம் ஆண்டில் தறிக் கூடத்தில் தீப்பற்றி அத்தீ ஊர் முழுவதம் பரவி ஊர் தீக்கிரையாகியது. அதன் பின்னரே கூரை வீடுகள் ஒட்டு வீடுகளாக வளர்ச்சி பெற்றன. அந்தச் சூழலில் பள்ளிக்கூடம் மடத்திற்கு மாற்றப்பட்டு 1956லிருந்துநிரந்தரமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
நம் ஊரில் நெய்யப்படும் துணிகள் அனைத்தம் நமது சமுதாயத்தின் சார்பாக அமைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களான சரஸ்வதி, 1041, வினாயகர், பாரதி என்ற பெயர்களில் அமைந்து சங்கத்தின் மூலமாக நெசவுத் தொழில் சீரோடும் சிறப்போடும் வளர்ந்தது. நமக்கு வனத்தை தந்த வண்டிமலைச்சிக்கு சிறப்புச் செய்ய வேண்டி 06.04.1956ல் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 06.04.1985 அன்று கோவிலின் முன்பு மண்டபம் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. தற்போது 31 ஆண்டுகள் சென்ற பின்னர் 26.05.2016 அன்று நம் சமூக மக்கள் பலரின் முயற்சியாலும், வண்டி மலைச்சி அம்மன், சிறப்பாலும், நம் மக்களின் பொருளாதார மற்றும் கல்விச் சிறப்பாலும் அயன்பொம்மையாபுரத்தில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது