காஞ்சிபுரம் சரவண தேசிகர்

0
காஞ்சீபுரம் சரவண பத்தர் & சரவண தேசிகர் இவரை காஞ்சிபுரம் மக்கள் குடும்பத்தின் தமிழ்த்தாத்தா என்றே அழைப்பர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான முனிவர் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் காஞ்சிபுரக் கிளை மடத்தில் சிலகாலம் வாழ்ந்துவந்தார். 

அப்போது அவருக்குக் கிடைத்த 12 சீடர்களுள் ஒருவராக விளங்கியவர் இந்தச் சரவண தேசிகர். இதற்குச் சான்றாக அந்த மடத்தின் ஒரு கல்வெட்டில் சிவஞான முனிவருடைய 12 சீடர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன என்பர். 

அந்தப் பட்டியலில் சரவண தேசிகர் பெயரும் இடம்பெற்றுள்ளது. சிவஞான முனிவர் ஒரு தமிழ்க் கடல், சைவ சமயத் துறவி. தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஒருங்கே பெற்றவர். எனவே, இவர்தம் சீடராக இருந்த சரவண தேசிகர் சிவஞான முனிவரிடமிருந்து சைவ சமயம் குறித்தும் குறிப்பாகச் சைவ சித்தாந்தம் குறித்தும் தமிழ்மொழி இலக்கண இலக்கியங்கள் குறித்தும் அறிந்துவைத்திருந்தார் எனக் கருதலாம். 

சிவஞான முனிவர் காஞ்சிப்புராணம், சிவஞான மாபாடியம், தொல்காப்பியப் பாயிர விருத்தி, நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரைக்குக் குறிப்புரை, சோமேசர் முதுமொழி வெண்பா, இலக்கண விளக்கச் சூறாவளி போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவர்தம் சீடர்களில் ஒருவராக விளங்கிய கச்சியப்ப முனிவரும் கச்சியானந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது, திருத்தணிகைப் புராணம், பேரூர்ப் புராணம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். 

எனவே, அந்தப் புலமை மரபில் நெருக்கமாக இருந்த சரவண தேசிகரும் சைவ சித்தாந்தம் தொடர்பான பல நூல்களை இயற்றியுள்ளார். இந்தக் குடும்பத்தின் வரலாற்றில் முதலாவது அடையாளமாக விளங்கும் சரவண தேசிகர் ஒரு தமிழ்ப் புலவராகவும் சைவ சிந்தாந்த அறிஞராகவும் சைவத் துறவியாகவும் இருந்துள்ளார் என்பதை எண்ணிப் பெருமையடையலாம். 

சரவண தேசிகர் ஆறு நூல்களை எழுதியுள்ளார் என்பதற்கான சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன. அவை யாவும் சைவ சித்தாந்த நூல்கள். 


அவை வீட்டுநெறியுண்மை ஒருபாவுண்மையுபதேசம் பஞ்சாக்கரவநுபூதி உபதேசச் சித்தாந்த விளக்கம் முத்தி முடிவு ஒருபாவொருபது இவை அனைத்தையும் தொகுத்துப் பின்னர் அச்சில் வெளியிட்டுள்ளனர். அதன் முகப்புப் பக்கம் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் தொடக்கத்தில் கச்சபாலயம் என்பவர் எழுதிய பாயிரத்தில் சரவண தேசிகர் பற்றிய சிறிய வரலாறு காணக்கிடைக்கிறது. 

இந்தப் பாயிரத்தைப் பாடிய கச்சபாலயம் என்பவர் சரவண தேசிகரின் சீடர் ஆவார். திருவாவடுதுறைச் சிவஞாந தேசிகனால் ஒருமொழி அரும்பொருள் அறிந்தோன், கச்சியப்பவாரியனால் பதி, பசு, பாசப் பண்பினைத் தெளிந்தோன், சுவர்க்கபுரத்து உறைகின்ற தவப்பிரகாச சற்குரு அருளால் பஞ்சாக்கர நிலை உணர்ந்தோன், திருப்போரூர் சிதம்பர தேவனால் முத்தி முடிவு தேர்ந்தோன், கச்சியப்ப முனிவர் ஆனந்த ருத்திரேசர் மீது வண்டுவிடு தூது, பதிற்றுப் பத்தந்தாதி, கழிநெடில் போன்ற நூல்களை இயற்றுமாறு செய்வித்தோன் என்று அப்பதிகம் சரவண தேசிகர் பற்றிய குறி களைத் தருகிறது. 

சரவண தேசிகர் எழுதிய அந்த ஆறு நூல்களும் அவருடைய தமிழ்ப் புலமையையும் சைவ சித்தாந்தப் பேரறிவையும் பறைசாற்றும் சான்றுகளாகத் திகழ்கின்றன. உபதேச சித்தாந்த விளக்கம் என்னும் நூலின் கடவுள் வாழ்த்தாக அமைந்த இவருடைய ஒரு பாடலைக் கீழே காணலாம். 

சீராரும் உபதேச சித்தாந்தக் கட்ட ளையைத் தெளிய ஆராய்ந்து ஏரார் செந்தமிழ் யாப்பிலிசைப் பதனுக்கு இடையூறு ஒன்றின்றி முற்றக் கூரார் கோடொன்று இரண்டுசெவி மூன்றுமதம் நால்வாய்க் குலாவும் ஐங்கைக் காரார் குஞ்சர முகத்துக் கணபதி செந்தா மரைத்தாள் கருத்துட் கொள்வாம் கணபதி வணக்கமாக அமைந்த இப்பாடலில் கணபதியின் வடிவத்தை ஒன்று, இரண்டு என்னும் எண்களில் வரிசைப்படுத்தியுள்ளார். 

தந்தம் ஒன்று, செவி இரண்டு, மதம் மூன்று, நால்வாய் (தொங்கும் வாய்-தும்பிக்கை), ஐந்து கை உடைய யானைமுகக் கணபதியின் பாதத்தைச் சிந்தை செய்வதாகப் பாடியுள்ளார். இந்தப் பாடலில் அவருடைய பக்தி நெறியும் தமிழ்ப் புலமையும் வெளிப்படுகின்றமையைக் காணலாம். 4 1886'ஆம் ஆண்டில் இலங்கை நாட்டினரான ஆணல்ட் சதாசிவம்பிள்ளை என்பார் எழுதிய 'பாவலர் சரித்திர தீபகம்' என்னும் நூல் தமிழ்ப் புலவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு நூலாகும். அதில் சரவண தேசிகர் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

சரவண தேசிகர் என்னும் பெயரில் பலர் இருந்துள்ளனர் என்று குறிப்பபிடும் அந்நூல் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த சரவண தேசிகர் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் வாழ்ந்த சரவண தேசிகர், சரவண பத்தர் என்றும் அழைக்கப்பட்டார் என்னும் குறிப்பும் அதில் உள்ளது. (பக்கம்.183, பாவலர் சரித்திர தீபகம்-தொகுதி-2, கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியீடு,1979). இந்தக் குடும்பத்தினர் வாழ்ந்து வந்த த ஓலைச் சுவடிகளைத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பெற்றுச் சென்றுள்ளார் என்றும் கூறுவர். அந்த ஓலைச் சுவடிகள் சரவண தேசிகரால் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கிய ஆளுமையாக விளங்கும் உ.வே.சா. இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார் என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. 

சரவண தேசிகர் இல்லற வாழ்வில் ஈடுபட்ட பின்னரே சைவத் துறவியாக மாறியுள்ளார். இவருக்கு ஒரு மகன் இருந்தார் என்னும் குறிப்பும் சரவண தேசிகரின் நூலில் கிடைக்கிறது. அவர் பெயர் மணியப்பன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தம் தந்தையாரான சரவண தேசிகரின் சிறப்பைப் பற்றி எழுதியுள்ள செய்யுள் ஒன்றும் அந்நூலில் இடம் பெற்றுள்ளது. தந்தையாரும் மகனாரும் தமிழ்ப் புலமையும் சைவப் பற்றும் கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர்.

18 - 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர் சரவண தேசிகர் காஞ்சீபுரம் நகரை சேர்ந்த செங்குந்தர் மரபில் பிறந்தவர்.

இவர் திருவாவடுதுறை ஆதினத் திராவிட மாபாடிய கர்த்தராகிய சிவஞான சாமிகளிடம் இலக்கண இலக்கியம்களைக் கற்றவர்.

கச்சியப்ப சாமிகளிடம் மெய்கண்ட சந்தான சாத்திரங்களைக் கற்றார். 

சொர்க்கபுரம் தவப்பிரதாப மூர்த்திகளிடம் பஞ்சாக்கர உண்மையுபதேசம் பெற்ருர்,

இவர் நைட்டிக விரதம் ஏற்று மாணவர் பலருக்குக் கல்வி கற்பித்தார். 

தாம் வழிபட்டு வந்த ஆநந்தருத்திரேசனுக்குக் கோயில் அமைத்து நாள் வழிபாடு சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்தார்.

இவர் எழுதிய நூல்கள்: ஒருபா உண்மை உபதேசம், வீட்டுநெறி உண்மை, பஞ்சாக்கர அநுபூதி. உபதேச சித்தாந்த விளக்கம், ஒருபா ஒருபது, தேவிகாலோத்தரம்.









Post a Comment

0Comments
Post a Comment (0)