தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்தில் இந்த ஓலைப்பட்டயம் உள்ளது. இந்த ஓலைப்பட்டயம் லிங்கனூர் கருப்பமுதலி என்பவரைப் பற்றிய சாதி வழக்கினை விரிவாக விளக்கிக் கூறுகிறது.
24 நாட்டுச் சமயமுதலிப் பட்டக்காரர், வையாபுரி நாட்டுப் பட்டக்காரர், பொன்குலுக்கிநாட்டுப் பட்டக்காரர், வாரக்கநாட்டுப் பட்டக்காரர், ஆறைநாட்டுப் பட்டக்காரர் போன்ற செங்குந்தர் குலத்தினரும், பழனிக் கவுண்டர், கருப்பண கவுண்டர், செல்லப்ப கவுண்டர், முத்துக் கவுண்டர் போன்றவர்களும் சேர்ந்து சுமார் 75 ஊர்களைச் சேர்ந்த நாட்டார்க்கும், ஊராருக்கும், சமூகத்தாருக்கும், கவுண்டர்களுக்கும், நாட்டாண்மைக் காரர்கட்கும், பெரியதனக்காரர்கட் கும், புள்ளிக்காரர்கட்கும், காரியக் காரர்கட்கும், உறவின்முறையாருக்கும் எழுதிக்கொடுத்த ஓலை. துன்முகி மாசி 14 என்று மட்டும் காலம் குறிக்கப்பட்டுள்ளது.
லிங்கனூர் கருப்பமுதலி என்பவர் செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்தவரா அல்லவா என்று வடமுகம மணியகாரம்பாளையத்தில் வழக்கு நடைபெறுகிறது. கவுண்டர்களும, சமூகத்தார்களும், பட்டக்காரர்களும் ஆலோசனை செய்கின்றனர்.
ராக்கபாளையம் பெரியதனக்காரர் சின்னப்பமுதலி, நாட்டாண்மைக் காரர் மாரப்பமுதலி போன்றவர்கள் அக் கருப்பமுதலி தங்கள் உறவுக்காரர் என்றதால் அவர் செங்குந்தர் சமூகத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.
செங்குந்தர்களின் குல குருவாகிய சுவாமியார் அங்கு வந்தபோது அவரும் அதனை விசாரித்து அவரை செங்குந்தர் சமூகத்தவராகவே ஏற்றுக்கொண்டு காணிக்கை பெற்றுத் தீர்த்தமும் பெற்றுச் சிட்டாவிலும் பெயரைப் பதிவு செய்துகொண்டார்.
பின்னர் 4 கிராமத்து செங்குந்தர்கள் சேர்ந்து இதற்கு எதிராகச் சுவாமியாரிடம் புகார் கூறியதால் மேற்படி லிங்கனூர் கருப்பமுதலியை சாதியைவிட்டு நீக்குவதாகச் சுவாமியார் இரண்டாவதாக ஓலை மூலம் அறிவிக்கிறார்.
சுவாமியாரின் இரண்டாவது திருமுகம் செல்லாது என்று லிங்கனூர் கருப்பமுதலிக்கு ஆதரவாகக் கவுண்டர்களும், செங்குந்தர்குலப் பட்டக்காரர்களும் சேர்ந்து பல ஊர்க்காரர்கட்கும் எழுதிக்கொடுத்த ஓலையே இதுவாகும். தாம் செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை நிலைநாட்ட லிங்கனூர் கருப்பமுதலி எடுத்துக்கொண்ட முயற்சி இதில் விளக்கப்படுகிறது.
ஒரு சமூகத்தார் கூடி ஒருவரைச் சாதிக்குள் சேர்க்கலாம்; அல்லது நீக்கலாம் என்ற வழக்கம் இருந்ததை இச்செப்பேடு தெரிவிக்கிறது. செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்த இப் பட்டயத்தில் கவுண்டர்கட்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கையொப்பமிட்டுள்ளனர்.
மூலம்
ஸ்ரீமத் சகலகுண சம்பந்நரான சகல ப்ரீதிபாலகரான பந்துசன சிந்தாமணிகரான பவுசுபாக்கியப் பிரமாணிக்கரான அன்னதான விநோதரான அஷ்டலட்சுமி ஐஸ்வர்ய சம்பந்நரான மித்துருசன மனோரஞ்சிதரான வெகுசன போஷகரான அரிபூசை குருபூசை மயேசுவரபூசை மறவாத பக்திப் பிரியரான வித்தைக்கு விநாயகரான புத்திக்கு விபீஷணரான பொறுமைக்குத் தருமரான போருக்கு வீமரான வில்லுக்கு விசயரான பரிக்கு நகுலரான சாஸ்திரத்திற்குச் சகாதேவரான சொல்லுக்கு அரிச்சந்திரரான கொடைக்குக் கர்ணரான அழகுக்கு மன்மதரான போகத்திற்குத் தேவேந்திரரான தனத்திற்குக் குபேரரான வடமுகம் ஆண்டிபாளையம், சீரயகவுண்டம்பாளையம், செட்டிபாளையம் முருகம்பாளையம், இடும்பபாளையம், கருப்பையகவுண்டம்பாளையம் இதுகளிலுள்ள மகாமேருவாகிய கவுண்டர்களுக்கும், நாட்டாமைக்காரர், பெரியதனக்காரர், புள்ளிக்காரர், காரியக்காரர் மற்றுமுண்டாகிய நம் உறவின்முறையார்கள் அனைவோர்களுக்கும்
தொங்கிட்டிப்பாளையம், குமாரபாளையம், அலகுமலை, வேலாயுதம்பாளையம், இராமணம்பாளையம், கட்டூர்வலசு, உகாயனூர், பெத்தாம்பாளையம், மலையப்பாளையம், நல்லூர், சிங்கலூர், புதூர் இதுகளிலுள்ள மகாமேருவாகிய கவுண்டரவர்களுக்கும், நாட்டாமைக்காரர், பெரியதனக்காரர், புள்ளிக்காரர், காரியக்காரர் மற்றுமுண்டாகிய நம் உறவின்முறையார் அனைவோர்களுக்கும்,
கரிசமடை, இலவந்தி, கோட்டாம்பாளையம், மந்திரிபாளையம் சித்தநாயக்கன்பாளையம், வடுகபாளையம், சின்னியகவுண்டம் பாளையம், கள்ளிப்பாளையம், அப்பியாபாளையம், வேலம்பாளையம், சித்தம்பலம், போகம்பட்டி, செம்மிபாளையம், பனம்பட்டி, அக்கம்பாளையம், தொட்டம்பட்டி, பொரயபாளையம் இதுகளிலுள்ள சித்தூர், மகாமேருவாகிய கரடிவாவி, கோதவாடி, கவுண்டர் அவர்களுக்கும், நாட்டாமைக்காரர், பெரியதனக்காரர், புள்ளிக்காரர், காரியக்காரர் மற்றுமுண்டாகிய நம் உறவின்முறையார் அனைவோர்களுக்கும்,
கோவிந்தனூர், நடுப்புலி, ஒடுகம்பள் ளம், நல்லியப்பள்ளி, சித்தூர், வேங்கோடு, ராமச்சேரி, கொழமணம், மேலார்க்கோடு, குனிச்சேரி, எருமையூர், பழம்பாலக்கோடு, காரியோடு, கூட்டாலை, நடக்காவு, ஏகாசி இதுகளிலுள்ள மகாமேருவாகிய கவுண்டரவர்களுக்கும், நாட்டாமைக்காரர், பெரியதனக்காரர், புள்ளிக்காரர், காரியக்காரர், மற்றுமுண்டாகிய நம் உறவின்முறையார் அனைவோர்களுக்கும்,
கம்மாளபட்டி, நாகம், கோழிக்குட்டை, சனப்பம்பட்டி இதுகளிலுள்ள மகாமேருவாகிய கவுண்டரவர்களுக்கும், நாட்டாமைக்காரர், பெரியதனக்காரர், புள்ளிக்காரர், காரியக்காரர் மற்றுமுண்டாகிய நம் உறவின்முறையார் அனைவோர்களுக்கும்,
இராயர்பாளையம், மாணிக்கபுரம், வேலம்பாளையம், மூனுமடை, சின்னகாளிபாளையம், இடுவாய், வஞ்சிபாளையம் இதுகளிலுள்ள மகாமேருவாகிய கவுண்டரவர்களுக்கும், நாட்டாமைக்காரர், பெரியதனக்காரர், புள்ளிக்காரர், காரியக்காரர் மற்றுமுண்டாகிய நம் உறவின்முறையார் அனைவோர்களுக்கும்,
தாங்கள் இத்யாதி ஊர் நாட்டுக்கும் மகாமேருவாகிய கவுண்டரவர்களுக்கும், நாடு சமூகத்தார் அனைவோர்களுக்கும், கரப்பத்தூரிலே இருக்கும் மகாமேருவாகிய கவுண்டர்களுக்கும், பழனிக்கவுண்டர், கருப்பய்ய கவுண்டர், முத்துக் கவுண்டர், செல்லப்ப கவுண்டர், மற்றுமுண்டாகிய கவுண்டர்கள் அனைவோருக்கும்,
இருபத்துநாலு நாட்டுச் சமயமுதலிப் பட்டக்காரர் குழந்தைவேலு முதலியாரும், கருமாண்ட வாண்ட வாத்தியாரும், இடும்பபாளையம் வையாபுரி நாட்டுப் பட்டக்காரரும், பட்டக்காரரும், கரப்பத்தூர் வாரக்கநாட்டுப் ஆறைநாட்டுப் பட்டக்காரரும், இடும்பபாளையம் பொன்குலுக்கிநாட்டுப் பட்டக்காரரும், கெணாசாரிநாட்டுப் பட்டக்காரரும், கரப்பத்தூர் நாட்டாமைக்காரர், பெரியதனக்காரர், புள்ளிக்காரர், காரியக்காரர் மற்றுமுண்டாகிய நம் உறவின்முறையார் அனைவர்களும் கூடி நாட்டுக்கு எழுதிய பராபாத்தியம் நாட்டோலை என்னவென்றால்
துன்முகி வருஷம் மாசி மாதம் 18ஆம் தேதி லிங்கனூர் கருப்பமுதலி என்பவன் இதற்கு முன்னதாக வடமுகம் மணியகாரம்பாளையத்தில் இடும்பன்பாளையத்தானிடத்திலும் என்கிறதாகச் சொன்னார்கள். தன்பேரில் சில நாயமுண்டு சொன்னதைப்பற்றி நாடு சமூகம் கூடி விசாரணை செய்தோம். செய்ததில் ராக்காபாளையம் பெரியதனக்காரன் வகையறா, நாட்டாமைக்காரர் வகையறா இந்த இரண்டு தெருவிலும் லிங்கனூர் கருப்பமுதலியை பெரியதனக்காரன் சின்னியமுதலி என்பவன் என்னுடைய சொந்தப் பெரியப்பன் மகன்தான் என்கிறதாகச் சொல்லி ஒப்புக்கொண்டான்.
மேற்படியூர் நாட்டாமைக்காரர் வகையறாவில் குமாரமுதலி மகன் மாரப்பமுதலியும், வேப்பமரத்தான் மகன் மாரப்பமுதலியும் இவர்கள் இரண்டு பேரும் லிங்கனூர் கருப்பமுதலி மகன் மூத்த பிள்ளையை என்னுடைய பங்காளி மகனுக்குக் கலியாணம் செய்திருக்கிறோம் என்கிறதாகச் சொன்னார்கள் கருப்பமுதலி பெண்சாதி ரங்காயி என்பவள் மேற்படி மாரப்பமுதலி இவர்கள் இரண்டுபேரும் மேற்படி காரியோட்டிலே இருக்கும் கருப்பமுதலி என்னுடைய பங்காளி அவனுடைய மகள்தான் ரங்காயி என்கிறதாகச் சொன்னார்கள்.
இது காரியங்கள் எல்லாம் மகாமேருவாகிய கவுண்டர்களும், நாடு சமூகத்தார்களும், பட்டக்காரர்களும் ஆலோசனை செய்து பார்த்து லிங்கனூர் கருப்பமுதலி பேரில் யாதொரு சந்தேகமும் இல்லை என்கிறதாக ஒப்புக்கொண்டோம். ஒப்புக்கொண்டு உண்பது தின்பது ஓட்டம் தோச்சல் கொள்ளக் கொடுக்கப் பந்திபோசனம் யாதொன்றும் தடையில்லாமல் புழங்கிக் கொள்ளும்படியாகத் தஸ்தாவேஜியும் கொடுத்தோம். அதன்பேரில் நாட்டில் கொள்ளக் கொடுக்கவும் ரொம்பவும் சிறந்து இருக்கிறது.
அப்படி இருக்கச் சாமியார் அவர்களும் இடும்பபாளையம் சவாரி வந்தபோது லிங்கனூர் நாயத்தைப்பற்றி மனியகாரம்பாளையம் அய்யம்பாளையம் காவிலிபாளையம் கொண்டபாளையம் இன்னம் சில ஊர்க்காரர்களும் நம்மிடத்தில் பிராது சொல்லிக் கொள்கிறதாகச் சுவாமியார் அவர்களும் சொன்னார்கள். அதன்பேரில் லிங்கனூர் நாயத்தை அடிதலை பூர்வமாய் நாங்களும் சாமியாரிடத்தில் சொன்னோம். சாமியார் அவர்களும் கேட்டு அந்த நாயத்தைப்பற்றி யாதொரு சந்தேகமும் இல்லை என்கிறதாக லிங்கனூர் குப்பமுதலி கருப்பமுதலியிடத்தில் காணிக்கையும் வாங்கித் தீர்த்தப் பிரசாதமும் கொடுத்து சிட்டாவில் பேரையும் எழுதிப் பதித்துக் கொண்டார்கள்.
இப்படியிருக்கச் சிலநாள் கழித்து நாலூர்க்காரர் போய்ச் சாமியாரிடத்தில் லிங்கனூர் குப்பமுதலி கருப்பமுதலி பேரில் நாயம் உண்டு என்கிறதாகச் சொல்லிச் சாமியார் அவர்களும் நீக்குதலையாகத் திருமுகம் எழுதித் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். ஆகையால் எனக்குச் சேரன் சோழன் தெய்வபாண்டியன் மூன்று ராசாக்களும் நவவீரர்வம்சம் என்பதற்கு சாதி நாயத்திற்கும் அதிகாரத்துவம் கொடுத்து நாலாயிரச் சில்வானம் வருஷம் ஆகிறது. அப்படி நானும் நாட்டி நடத்தி வந்திருக்க இந்தத் தீர்மானத்தை அல்லவென்று திருமுகம் எழுதியிருக்கிறபடியால் இந்தத் திருமுகத்தைத் தொட்டு யாதொரு பாத்தியமும் இல்லை என்கிறதாக எழுதி நாட்டுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். நாட்டுக்கும் கவுண்டர்களுக்கும் நாடு சமூகத்தார்களுக்கும் தெரியப்படுத்தியி- ருக்கிறோம்.
பழனிக் கவுண்டர் ரசு. கருப்பண கவுண்டர் ரசு.
செல்லப்பக் கவுண்டர் ரசு. முத்துக் கவுண்டர் ரசு.
கரப்பனூர் இருபத்துநாலு நாட்டுச் சமயமுதலிப் பட்டக்காரர் குழந்தைவேலுமுதலி ரசு. கருமாண்டவாத்தியார் ராமமுதலி ர௬சு. இடும்பபாளையம் வையாபுரி நாட்டுப் பட்டக்காரர் முத்தமுதலி ரசு. மேற்படி பொன் குலிக்கி நாட்டுப் பட்டக்காரர் லிங்கமுதலி ரசு. கரப்பனூர் வாரக்கநாட்டுப் பட்டக்காரர் நஞ்சையமுதலி ரசு. ஆறைநாட்டுப் பட்டக்காரர் ௬௬. பெரியதனக்காரர் சின்னைய முதலி ரசு.
நாட்டாமைக்காரர் முத்தாமுதலி தற்குறி குழந்தைமுதலி ரசு. காமாட்சியம்மன் துணை.
இந்த நம்ம நாட்டு நாயத்து ஓலை ரொம்பக்காலம் பழகிப் போனபடியால் கொஞ்சம் எழுத்து போயிருந்தபடியால் நாங்கள் அந்த ஓலைக்குப்பதில் புது ஓலை போட்டு யுவ வருஷம் ஐப்பசி மாதம் 15ஆம் தேதி எழுதியிருக்கிறோம். ஏட்டுக்குற்றம் எழுத்துக்குற்றம் வாசகத்தப்பு வரிமாறாட்டம் இருந்தபோதிலும் நீங்கள் அனைவோரும் பொறுத்துக்க வேண்டியது. கடவுள் துணை.
