தனித்துவம் பேணும் - யாழ்ப்பாணம் செங்குந்தர்கள்

0

2006 செங்குந்த மித்திரன் புத்தகத்தில் இருந்த செய்தி 

பல இலங்கையின் வடபுலத்தே உள்ள யாழ்ப்பாண நகரில் நுாற்றாண்டுகளாக செங்குந்தர்கள் வாழ்கிறார்கள். எட்"பாது வந்தார்கள் என்பது சரித்திர சான்றாகத் தெரியாது. சோழப் பேரரசு காலத்திலோ அதற்குப் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசர்கள் காலத்திலோ வந்திருக்க வேண்டும். யாழ்ப்பாண அரசின் இராசதானியாக, கடைசி தமிழ் மன்னன் சங்கிலியன் வரை இருந்த யாழ் நகரின் மத்தியில் அமைந்துள்ள நல்லுாரிலும், அருகாமையிலும் உள்ள திருநெல்வேலி என்ற இடங்களில் தான் இன்றும் செங்குந்தர்கள் செறிந்து வாழ்கிறார்கள். இந்த இடங்களில் கிட்டத்திட்ட 12000 பேர் வரை நம்மவர்கள் இருக்கிறார்கள். இதைவிட கரவெட்டி என்னும் வடபுலத்திலும் சிறு தொகையினர் வாழ்கிறார்கள். இந்த இரு இடங்களும் அரச இருக்கையை அனுமதித்த இடங்களாக இருப்பதால் அக்காலத்தில் செங்குந்தர்கள் அரச படையைச் சார்ந்தவர்களாக இருந்திருப்பார்கள் என்பது வெளிப்படையாகும்.


யாழ்ப்பாணத்தில் 19ம் நூற்றாண்டுவரை வேறுபல சாதியினர் வாழ்ந்தார்கள். அதாவது அகம்படியார், சைவச் செட்டிமார், மடப்பளியார், கோவியர், சிவியார், கரையார் இவர்களுடன் பொதுவாக தம்மை ஒருமைப்படுத்தி உயர்ந்தவர்களாகக் கூறும் வெள்ளாளர் என்போர் ஆகும். மேற்கூறிய சாதியினரால் சிவியாரையும் (சிவிகை துாக்குபவர்கள்) கரையார் (மீன்பிடிப்பவர்கள்) தவிர்த்த அனைவரும் வெள்ளாளர் என்று தம்மை உயர்த்தி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் இன்று வரை. அன்று தொட்டு இன்று வரை இச்சமுதாய அமைப்பில் சிறு தொகையினரான செங்குந்தர்கள் தமது தனித்துவம் பேணி, சமுதாயக் கடமைகளை சிறப்பாகச் செயலாக்கி செங்குந்தர்களாக இன்றும் வாழ்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.


கடந்த 19,20-ஆம் நூற்றாண்டுகளில் தமக்கு பெரும்பான்மையினரால் ஏற்படுத்தப்பட்ட சமுதாய சிக்கல்கள், மிரட்டல்கள், போட்டி பொறாமைகளையும், முருகன் துணைகொண்டு, சிறப்பாக வாழ்வது ஒரு சிறப்பாகும்.


ஒரு சிறு எடுத்துக்காட்டு அவசியம் என்று எண்ணுகிறேன். நல்லூரில் கிறித்துவக் கோவிலில் மணி அடித்து பிழைப்பு நடத்திய கந்தபர் என்பவரின் மகன் ஆறுமுகம் (நாவலர்) கிறித்துவ-யாழ் மத்திய கல்லுாரியில் வண பேர்சிவல் பாதிரியாரிடம் (Rev.Percissual) கல்வி கற்று, அவர் விருப்பத்துக்கேற்ப, பைபிளை (Bible) தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தவர். பின் நாட்டுக் கோட்டை செட்டிமாரின் பணத்தில் மயங்கி வைதிக சமயத்தின் பாதுகாவலராக மிளிர்கிறார். இவர்தான் இருக்கு வேத வைதிக சாதிப் பாகுபாட்டில் அன்றைய தமிழர்களைப் பிரித்து ஆக்கம் செலுத்தியவர். இன்று சைவத்தையும் தமிழையும் பாதுகாத்தவர் என்று போற்றப்படுகிறவர்.


இவர் முருகப் பெருமானுக்கும், வேலுக்கும் என் செங்குந்தர்கட்கும் எதிரானவர் என்றால் மிகையாகாது. தொன்று தொட்டு பல நூற்றாண்டுகளாக நல்லுார் கந்தசாமி கோவில் கருவறையில் வைத்து வணங்கப்படுவது வேல் செங்குந்தமே ஆகும். இவர் தமிழகத்திலிருந்து யாழ் நகர் வந்து தொடங்கிய சைவ இயக்கம், நல்லூர் கந்தசாமிகோவில் கருவறையில் இருந்து வேலை அகற்ற வேண்டும் என்பதாகும். இதற்கு அன்றும் இன்றும் அறங்காவலர்கள் இணங்கவில்லை. அக்காலத்தில், செங்குந்தர்களின் உரிமையாளர்களான முருகன் தம்பிமார்களாகிய வீரவாகு தேவர் பரம்பரையில் வந்த செங்குந்தர்கள் தான் உறுதுணையாக இருந்துள்ளார்கள். அன்று தொட்டு இறுதிவரை எம்மவர்கள்மேல் காழ்ப்பு உணர்ச்சியுடன் தான் இருந்தார். எமது சமூகத்தை தமது நூல்களில் இழிவு படுத்தினார், சாதிக் கொடுமையின் பாதுகாவலராக மிளிர்ந்தார்.


அன்று தொட்டு, இவரைத் தமது துணையாகக் கொண்டு வாழும் யாழ்ப்பாண வெள்ளாளர் என்போர் எம்மை இழிவுபடுத்தி தாழ்வு மனப்பான்மையோடு கருதுகிறார்கள். கந்தபுராணத்தைப் பதிப்பவர்களும் இவர் தான். அப்பொழுது அதில் இரண்டாயிரம் பாட்டுக்கள் வரை செங்குந்தர் புகழ் கூறும் பகுதியை இவர் விலக்கிவிட்டார் என்று இன்றும் கர்ணபரம்பரை வாய்வழிச் செய்தி எம்மவர்களால் பேசப்படுகிறது. நாவலர் பற்றியவற்றை இத்துடன் விடுவோம்.


இனி நம்மவர் போற்றும் நல்லுார் கந்தசாமி கோவில் பற்றிப் பார்ப்போம்.


இலங்கையில் இருக்கும் முருகன் கோவில்கள் பற்றிப் பார்ப்போம்.


முதன்மைப் பெற்று போற்றப்படுவது. சித்தர் போகரினால் ஆக்கப்பட்ட இயந்திரம் கருவறையில் உள்ள கதிர்காமம் முருகன் திருத்தலமாகும். அடுத்து வருவது கருவறையுள் வேல் வைத்து வணங்கப்படும் நல்லூர் கந்தசாமி கோவிலும் செல்வச் சந்நிதி முருகன் கோவிலுமாகும். பெருமைமிக்க இம்மூன்று முருகன் கோவில்களையே அருள் நாடி இலட்சோப இலட்சம் மக்கள் இன்று நாடி வந்து வணங்குகிறார்கள் என்று கூறினால் மிகையாகாது.


நல்லுார் கந்தசாமி கோவிலுக்கு இன்று வரை கொடிக்கவி காலந்தொட்டு, யாழ் செங்குந்தர்களே கொடிச்சீலை கொடுக்கிறார்கள். எம்மவர்கள் தேர் ஓடும் செங்குந்தர் வீதியில், இதற்கென ஓர் சிறு தேர் செய்து அதில் வைத்து கொடிச்சீலை மேளதாள கொடி, குடை ஆகிய சிறப்புடன் கொண்டு சென்று கொடுத்து வருகிறார்கள். இது முதனிலை தனித்துவம் பேணும் செயலாகும்.


இரண்டாவதாக கந்த சஷ்டி சூரன் போல் வழிபாடு பற்றியதாகும். இன்றும் சூரன் போர் அன்று எமது சமூக செங்குந்தர்கள் ஆறு நாளும் விரதம் இருந்து, நவவீரர் உடைதரித்து, முடிபோட்டு வாள் ஏந்தி, கலட்டி பிள்ளையார் கோவில் முன்றலில் இருந்து, கோவில் மேளதாள கொடி பரிவட்டம் சகிதம் ஊர்வலமாகச் சென்று, நல்லுார் ஆறுமுகம் பெருமாளுடன் துணை நின்று சூரனை வதை செய்வார்கள். இது அடுத்து தனித்துவம் பேணுவதாகும்.


அடுத்து எம் ஊர் மத்தியிலிருக்கும் நூற்றாண்டு பெருமை பெற்ற சந்தைக்கு அன்றும் இன்றும் பெயர் - செங்குந்தர் சந்தை (கைக்கோளர் சந்தை) இதற்கு மேலாக எமது ஊர் மத்தியில் சந்தைக்கு அருகாமையில் உள்ளது செங்குந்தர் இந்துக் கல்லூரி. இவை எல்லாம் செங்குந்தர்கள் பெருமையும்

தனித்துவமும் போற்றுபவையாகும்.இப்படியான அமுக்க இடர்கள் தடைகள் மத்தியிலும் யாழ் நகரிலும் செங்குந்தர்கள் தனித்துவத்தை எவ்விதத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை, எதிர் நீச்சல் போல் விழைந்தார்கள்.


இதன் பெறு பேறு, தமிழகத்தில் 1930ம் ஆண்டுகளில் வள்ளல் சபாபதி முதலியார், மொட்டையப்ப முதலியார் ஆகியோர் தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கம் தொடங்கிய நாட்களில், அன்றைய யாழ்ப்பாண செங்குந்தர்களின் சமுதாய முதல்வர்கள், ஒருங்கிணைந்து ஓர் அமைப்பு உருவாக்கினார்கள், அதுவே வட இலங்கை செங்குந்தர் மகாசன சங்கம், யாழ்ப்பாணம்.அன்று அடக்கி ஒடுக்க முனைந்த வெள்ளாளர் என்போருக்கு அறை கூவல் விடுவது போல் அந்நாளில் 1932ம் ஆண்டு எமது சமூகத்தில் மூத்த தலைவர்களான பேராசிரியர் சண்முகசுந்தர முதலியார் மற்றும் பி. மாணிக்கவாசகர் முதலியார் தமிழகத்தில் இருந்து அழைத்து வந்து, ஓர் மாபெரும் மாநாடு நடத்தினார்கள்.


எனது தாய் வழி பாட்டனார் நா. இராமலிங்க முதலியார் வைத்தியர் அவர்களால் திருநெல்வேலியில் கட்டப்பட்ட அருள்மிகு வாலை அம்மன் கோவில் முன்றலில் பந்தல் போட்டு, முதல் நாள் தேரோடும் செங்குந்தர் வீதிகளில் குதிரை வண்டியில் தலைவர்களை அமர்த்தி மாபெரும் ஊர்வலம் நடத்தி, மூன்று நாள் மாநாடு நடத்தினார்கள். அன்றைய மாநாடு தலைவர் எனது தந்தை ஆ. சுப்பிரமணியம் முதலியார் - வைத்தியர். இன்றும் யாழ் நகரில் செங்குந்தர்கள் எமது கடமைகளைச் செயற்படுத்தி வீறு நடைபோடுகிறார்கள்.


ஆ.சு.செல்வரத்தினம், B.Sc.,


செயலாளர், வட இலங்கை செங்குந்த மகாசன சங்கம்


Post a Comment

0Comments
Post a Comment (0)