தொழிலதிபர் K.K. இராமசாமி முதலியார் குடும்பம்

0

 

 
சாதனை படைக்கும் 'சார்ப்' சகோதரர்கள்

கோவை மாவட்டத்தில் காளப்பட்டி ஒரு சிறிய கிராமம். கோவையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கோவை தொழில் துறையில் வளர்ச்சிபெறாத காலகட்டத்தில் காளப்பட்டியில் நெசவாளர் குடும்பத்தில் செங்குந்த கைக்கோளர் சமூகம் பிறந்த கருப்பண்ண முதலியார் கருப்பாத்தாள் தம்பதியினருக்கு கே.கே.ராமசாமி, ஜெகநாதன், ராமச்சந்திரன், ராஜன் என்ற நான்கு ஆண் மக்கள் பிறந்தனர். குடும்பத்தில் வறுமையில்லை; ஆனால் ஏழ்மை இருந்தது. இருப்பினும் நல்ல பண்புடன், நாணயத்துடன் உழைப்பை நம்பி வாழ்ந்தனர். 


கருப்பண்ண முதலியாரின் மூத்த மகன் ராமசாமி பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் பி.இ. இயந்திரவியல் பட்டப்படிப்பைப் படித்து முடித்தார். படிப்பை முடித்ததும் அரசு சார்ந்த வேலை வாய்ப்புகள் கிடைத்தும் அவைகளையெல்லாம் தவிர்த்து தான் பயின்ற கல்வி நிறுவனத்தில் ஓர் அங்கமான பூ.சா.கோ. தொழிலகத்திலேயே பணிக்கு சேர்ந்தார் ராமசாமி. பத்து ஆண்டுகள் கடுமையாக உழைத்து, தன்னுடைய ஆற்றலையும் திறமைகளையும் வளர்த்துக்கொண்டார். சுயமாக தொழில் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்த ராமசாமி 1967ஆம் ஆண்டு பணியிலிருந்து விலகி சுயமாகத் தொழில் தொடங்கினார். பெரிய முதலீடு ஏதும் கிடையாது. தன் பத்தாண்டு கால பணிக்குக் கிடைத்த பணிக்கொடை ரூ.5000/-
ம் தான் அவருடைய ஆரம்ப முதலீடு. ஒரே ஒரு லேத்து - அதனையும் கடனாகப் பெற்று தன் தொழிலைத் தொடங்கினார். தொழில் தொடங்குவோருக்கு ஆரம்பத்தில் உள்ள சிரமங்கள் அத்தனையையும் தானும் அனுபவித்தார். ஆனால் மனம் தளரவில்லை. தன் திறமையின் மீதும், உழைப்பின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருந்தார். அந்த தன்னம்பிக்கையும், விடா முயற்சியும், கடும் உழைப்பும், நேர்மையான நிர்வாகமும் அவருடைய வளர்ச்சிக்கு வித்தாக அமைந்தது. தன் தந்தை, மனைவி, மாமனார் என்று சுற்றத்தார் 10 பேரை பங்குதாரர்களாக் கொண்டு 'சார்ப்' நிறுவனத்தை ஆரம்பித்தார். 1978-ஆம் ஆண்டில் தன் தந்தையின் மறைவிற்கு பிறகு மற்ற பங்குதாரர்களை விலக்கி விட்டு தன்னுடைய சகோதரர்கள் கே.ஜெகநாதன், கே.கே.இராமச்சந்திரன், கே.கே.ராஜன் ஆகிய மூவரையும் இணைத்துக்கொண்டு புதிய பொலிவுடன் சார்ப் நிறுவனத்தை நடத்தத் தொடங்கினார். 1967-68ஆம் ஆண்டில் ரூ.14,000/- மட்டுமே விற்று முதலாக இருந்த நிறுவனம் இன்று ஆல்போலத் தழைத்து, பல விழுதுகளை விட்டு, 37 ஆண்டுகளில் சார்ப் குரூப் நிறுவனங்களின் விற்று முதல் ரூ.100 கோடியை எட்டும் அளவுக்கு மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சகோதரர்கள் நால்வரும இப்பொழுது தனித்தனியாக தொழில் செய்து வந்தாலும் தங்கள் நிலை மாறாது, தாங்களும் வளர்ந்து; தங்களைக் சார்ந்த மற்றவர்களும் வளரக் காரணமாக இருந்து வருகிறார்கள். தொழில் நகரமாம் கோவையில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக கே.கே.ராமசாமி அவர்களும் அவர்தம் சகோதரர்களும் விளங்கி வருகிறார்கள். இதற்காக பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்கள். கே.கே.ராமசாமி அவர்களுடைய குமாரர்கள் கே.ஆர்.பாண்டியன், கே.ஆர்.பார்த்திபன் ஆகியோரும் தந்தை வழியிலேயே பொறியியல் பட்டப்படிப்பைப் படித்து விட்டு தந்தையுடன் இணைந்து தொழிலைச் செம்மையாக நடத்தி வருகின்றார்கள்.

கடந்த 25.9.04 அன்று கோவை மாவட்ட செங்குந்த முன்னேற்ற சங்கத்தின் வெள்ளி விழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள ஈரோட்டிலிருந்து கோவை புறப்பட்ட பொழுது கே.கே.ராமசாமி அவர்களின் இளவல் கே.கே.ராமச்சந்திரன் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதிய உணவை அண்ணார் வீட்டில் முடித்துவிட்டு விழாவிற்கு போகலாம் என்று கூறினார். கே.கே.ராமசாமி அவர்கள் உடல்நலம் குன்றியிருந்தார். அவருடைய உடல் நலத்தையும் விசாரித்துவிட்டு மதிய உணவையும் அருந்திவிட்டு விழாவிற்குச் செல்லலாம் என்று கோவை சென்றேன். கே.கே.ஆர் அவர்களின் இல்லத்துக்குச் சென்ற பொழுது சகோதரர்கள் நான்கு பேரும் குடும்பத்துடன் முகமலர்ச்சியுடன் வரவேற்றனர். அவர்களுடைய விருந்தோம்பலில் திளைத்துப் போனேன். மதிய உணவு அருந்திய பிறகு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! கே.கே.ஆர். அவர்கள் சார்ப் குரூப் நிறுவனங்களின்சார்பில் செங்குந்தர் மாளிகை கட்டிட நிதிக்கு ரூ.1.25 லட்சத்துக்கான காசோலையை தன் சகோதரர்களுடன் சேர்ந்து வழங்கிய பொழுது உள்ளம் மகிழ்ந்து போனேன். இந்த நிதியை வழங்குவதற்காகவே மருத்துவமனையிலிருந்து வந்து என்னுடன் உணவருந்தி, நிதியை வழங்கிவிட்டு, மீண்டும் மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று கே.கே.ஆர். அவர்கள் கூறிய பொழுது உள்ளம் நெகிழ்ந்து போனேன். நெசவுத் தொழிலை நம்பி வாழ்ந்தால் நம் சமுதாயம் முன்னேறாது. எனவே நம் சமுதாய இளைஞர்கள் உயர்கல்வி பயின்று நம்பிக்கையுடன் சுயதொழிலை தொடங்கினால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று கே.கே.ஆர். அவர்கள் அடிக்கடி கூறுவார். நம் குலக் கொழுந்துகளின் உயர் கல்விக்கு உதவுவதற்குத் தான் செங்குந்தர் மாளிகையும் கட்டப்பெற்றது. எனவே தம் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளதை கருத்தில் கொண்டு, சமுதாய உணர்வுடன் சார்ப் சகோதர்கள் செங்குந்தர் மாளிகைக்கு நிதி கொடுத்து உதவியது சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கே.கே.ராமசாமியும், அவருடைய சகோதரர்கள் கே.ஜெகநாதன், கே.கே.ராமச்சந்திரன், கே.கே.ராஜன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ வேண்டும்.







Post a Comment

0Comments
Post a Comment (0)