இன்று புஞ்சைபுளியம்பட்டியில் செங்குந்த முதலியார் சமூகம் மக்கள் சிறப்புடன் வாழ 1920s களில் அடித்தளம் அமைத்த மிராசுதார் கருப்பண்ண முதலியார் பற்றிய செய்தி.
ஈரோடு மாவட்டம் கோபி தாலுக்கா புஞ்சைப் புளியம்பட்டியில், வாய்மை, சாந்தம், ஜீவகாருண்யம், குலாபிமானம், தெய்வ பக்தி முதலிய எல்லா நற்குணங்களும் ஒருங்கே அமையப்பெற்று, செங்குந்தர்களை நல்லொழுக்கத்தின் கண் நின்று உய்யுமாறு புத்திபுகட்டி, அவர்கள் யாவரையும் இனிய மொழிகளால் தம் வயமாக்கிப் பரம்பரையான பெரியதனப் பட்டமும் பெற்று நூல் வியாபாரம் செய்து வரும் பிரபல மிராஸ்தாராகிய திரு.தி.கருப்பண்ண முதலியார் அருந்தவப் புதல்வர்களாகிய, அறிவிலும் வயதிலும் முதிர்ந்த திரு.கருப்பண்ண முதலியார், திரு.மாரப்ப முதலியார் என்னும் பெரியார்கள் இருவரும் உடலும் உயிரும் போலிருந்து அவ்வூரிலுள்ள நம்மவர்களைக் கக்ஷிப் பேதமின்றி ஒற்றுமையோடு வாழச்செய்து வருவதன்றி 15 வருஷங்களுக்கு முன்னரே அவ்வூரில் 'ஸ்ரீ முத்து விநாயகர் சன்மார்க்க சங்கம்' என ஒரு சங்கம் நிறுவி, பிரதி அமாவாசை தோறும் கூட்டம் கூட்டுவித்தும் மாதம் ஒன்றுக்கு வியாபாரிகளுக்கு 4 அணாவும், தோயும் பாவுக்கு ஒரு அணாவும், வேறு தொழில் செய்வோர்க்கு ஒரு அணாவுமாகச் சந்தாப் பணம் வசூலித்துச் சேர்ந்த தொகையை வட்டிக்கு விட்டுப் பெருந்தொகையாக்கி ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயம், ஷை சங்கத்திற்கு ஒரு வலுத்த கட்டடம், செங்குந்தர் மடம் முதலியவை கட்டுவித்துக் கிணரும் ஒன்று எடுத்து ஷை மடத்தின் நாள்தோறும் இரண்டு மூன்று பாங்களுக்கு உணவளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள். அவ்வூரிலுள்ள கந்து பாங்கிக் கடையில் அதிக வட்டிக்குப் பணம் வாங்கிப் பல செங்குந்த குடும்பங்கள் நசித்துப் போவதைக் கண்டு சகியாது அப்பாங்கியில் கடன் வாங்க முயன்றவர்களைத் தடுத்து மேற்கண்ட திருப்பணிகள் செய்து மிகுந்துள்ள தொகையின் ஒரு பாகத்தைச் சொற்ப வட்டிக்குக் கொடுத்து இம்சிக்காமல் மெதுவாய் வருவித்து அத்தொகையைக் கொண்டு பாவடிக்குத் தெற்கிலும் சத்தியமங்கலம் ரோட்டிற்குக் கிழக்கிலுமுள்ள இடத்தில் வசதியான கட்டடமொன்று கட்டி அதைக் கவர்ண்மெண்டு ரிஜிஸ்டரார் ஆபீசுக்கு மாதம் 20 ரூபாய் வாடகைக்கு விட்டிருக்கின்றனர். வாடகைக்கு விட இன்னும் அநேக கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட பல வழியிலும் சங்கத்திற்குத் தொகை சேர்ந்து கொண்டு வருகிறது. சமீபத்தில் 12 ஏக்கர் நிலம் நம்மவர் நன்மைக்காக 3,400 ரூபாய்க்கு வாங்கி வீடுகள் கட்டி சந்நிதி வீதி, பாவடி முதலிய ஒழுங்காக வகுத்து ஸ்ரீ காமாக்ஷியம்மன் கோயில் திருப்பணி வேலையும் நடந்து வருகிறது. கக்ஷிப்பிரதிகக்ஷிகளால் பிளவுபட்டுக் கோர்ட்டுக்கும் வக்கீல்களுக்கும் பெரும் பொருள் செலவிட்டுத் தாழ்மையையே எய்தி வரும் ஒவ்வொரு செங்குந்த கிராமமும் இனியாவது இதைப் பின்பற்றி இன்னும் சீர்கேடுறாது மேன்மையடையுமென நம்புகிறோம். இதுகாறும் நமது தலைச்சங்கம் செய்துள்ள நன்மைகளைக் குறித்து மேற்கண்ட பெரியோர்கள் இருவருக்கும் நாங்கள் விரிவாக எடுத்துரைத்தோம். அவர்கள் அதைக் கேட்டு அளவிலா மகிழ்ச்சி எய்தி அவ்வூர்ச் சங்கத்தைத் தலைச்சங்கத்தோடு இணைத்து வருஷக் கட்டணம் செலுத்தி வருவதுடன் அநேக கிளைச்சங்கங்களை ஸ்தாபிக்கவும், மித்திரனுக்குச் சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருவதாகவும் வாக்களித்துள்ளார்கள். கொடுக்க வேண்டியவற்றிற்குக் கொடுத்தும், கொடுக்கத் தகாதவற்றிற்குக் கொடாமலும் அளவறிந்து செலவு செய்து வரும் நன்னோக்கமுடைய இப்பெரியோர்களை நாங்கள் தெய்வங்களாகப் பாவித்து வருகிறோம். பிறவிடங்களிலும் நம் குலப் பெரியோர்கள் இவர்களைப் போல் பொது நன்மைக்கு உழைக்க முன் வருவார்கள் என்ற கருத்தோடு இதனை நமது மித்திரனில் பிரசுரிக்குமாறு வேண்டுகின்றோம். கர்னம் நயினாமலை முதலியார் கணபதி வா.ப. நஞ்சப்ப முதலியார் வடக்கலூர் ஆபூதி கிராமம் மேற்கண்ட செய்தி 1929 ஆம் ஆண்டு ஜீன் - ஜீலை மாத செங்குந்த மித்திரன் இதழில் வெளிவந்துள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன் நம் சமுதாய மக்கள் இருந்த நிலையையும், அந்த சூழ்நிலையில் அவர்கள் முன்னேற்றத்திற்காக தொலை நோக்குப் பார்வையுடன் நம் சமுதாய பெருமக்கள் எடுத்துகொண்ட முயற்சியையும், நம்மால் அறிய முடிகின்றது. மற்றவர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மேற்கண்ட செய்தி அன்றைய தினம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 75 ஆண்டுகளுக்கு பிறகும் கூட நாமும் இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.