இப்படி ஒரு பழமொழி செங்குந்தர்களான நம்மைப் பற்றிச் சொல்லப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
பொதுவாகவே எல்லா சாதிகளுக்கும் பெருமை தரக்கூடிய பெயரென்றும் செய்திகள் சிலவும் இருக்கும். அதேபோல தாழ்த்தும் பெயர் ஒன்றும் சிற்சில கதைகளும் பழமொழிகளும் கூட சாதியின் மதிப்பைக் கூட்டுவதாகவும் குறைப்பதாகவும் இருப்பதை நாமறிவோம்.
முதலியார் ஐம்பம் வெளக்கெண்ணெய்க்குக்கேடு என்ற பழமொழி பழைய பழமொழி. எப்படி இது வந்திருக்கும் என்று பலரும் பலரிடம் கேட்பதுண்டு, நம் குலவிளக்கு, குலசெம்மல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நம்மவர்கள் கூடிய கூட்டத்தில் இது குறித்துச் சொன்ன செய்தி : கைத்தறியைக் குலதொழிலாக கொண்ட நம்மவர்கள், பெரும்பாலும் தம் வீட்டிலேயே தறி அமைத்துக்கொண்டு நெசவு நெய்பவர்கள், எவருடைய ஆதிக்கத்திலும் - மேற்பார்வையிலும் வேலை செய்பவர்கள் அல்லர். ஒப்பந்த அடிப்படையில் சில நாட்களில் பாவறுத்து (துணியை)க் கொடுத்துப் பின் பாவு வாங்க வேண்டியவர்கள்.
நம்மை ஆளுமை செய்ய ஆள் இல்லை என்பதாலும் பாவு அறுத்துத்தருவதற்கு இன்னும் நாள் உள்ளதென்பதாலும் சற்று அலட்சியமாகவே பெரும் போக்காகவே வாழ்ந்தவர்கள் நம்மவர்கள்.
பகலில் ஊர்ச்செய்தி, உலகச்செய்தி எனப்பலரோடு பற்பல பொதுச் செய்திகளையும்,ஊரில் உடன் வாழ்பவர்களைப் பற்றிய நினைப்பே இல்லாமல் மாலை முழுவதும் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். வீட்டிற்குச் சென்ற பின்தான் விரைந்து துணியை நெய்து அறுக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தவராய், இரவிலும் தறி நெய்தால் தான் சரியான நேரத்தில் பாவு நெய்து முடிக்கமுடியும் என்ற உணர்வினால் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு விடிய விடிய நெய்வார்களாம். அந்தக்காலத்தில் விளக்கில் எண்ணெய் ஊற்றி எரியவிட்டுத்தான் இரவில் தறி நெய்ய முடியும். காரணம் இப்போதுபோல் மின்சாரம் இல்லாத காலம்.
வெளக்கெண்ணெய்க்குக் கேடு என்றால் வெளக்கெண்ணெய் இல்லை. விளக்கு -எண்ணெய் என்பது தான் பேச்சுவழக்கில் வி-வெ ஆகிவிட்டது. புறப்படு என்பது பொறப்புடு என்று பேச்சு வழக்கில் மாறுமோ அப்படி விளக்கு எண்ணெய் என்பது வெளக்கெண்ணெய் எனமாறியதாம்.
எப்படி இருந்தாலும் நம்மவர்கள் பிறருக்கு முடிந்தமட்டும் நன்மையைத் தான் செய்பவர்கள். தம்மைத்தாமே வருத்திக் கொண்டு பிறர்போற்ற, பிறரின் மனதில் நல்ல அபிப்பிராயத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கில் - இரவில் விளக்கை ஏற்றிவைத்துக் கொண்டேனும், எண்ணெய்க்குச் செலவுசெய்தும், இரவுஉழைப்பாளர்கள் என்பதால்தான் இப்படி ஒரு பழமொழி ஏற்பட்டது என்பதே வாரியார் சுவாமிகள் விளக்கம்.