பெருந்தலையூரைச் சேர்ந்த சின்னப்ப முதலியாருக்கு மொத்தம் நான்கு மகன்கள். தனது வாரிசுகளுக்கு. சொக்கண்ண முதலியார், ரங்கண்ண முதலியார். அருணாச்சல முதலியார் மற்றும் பொன்னையா முதலியார் எனப்பெயர் சூட்டினார். இன்று கோயில் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே முதன்முதலில் சின்னப்ப முதலியாரின் நினைவாலயம் தான் கட்டப்பட்டு இருந்தது. அவ்விடத்தை ஒட்டி சிவன். விநாயகர் மற்றும் முருகனுக்கு கோவில் எழுப்பினர்.
பெருந்தலையூர் சின்னப்ப முதலியார் குடும்பத்தார்க்கு, ஈரோடு சென்னிமலைக்கு அருகே உள்ள சின்ன புதுப்பாளையத்தில் வீற்றிருக்கும் சப்த கன்னிமார் தான் குல தெய்வம். அவர்களை வேண்டி, அங்கிருந்து மண் எடுத்துவந்து தான் இன்று பெருந்தலையூரில் நாம் காணும் கன்னிமார் கோவில் கட்டப்பட்டது.
சின்னப்ப முதலியார் 1924ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். இவ்வாண்டோடு (2024) அவர் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. 1976ஆம் ஆண்டு கோவிலாக எடுத்துக் கட்டப்பட்டு. சப்த கன்னிமார்கள் பெருந்தலையூர் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆடி மாதமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை நாளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
சொக்கமுதலி கூட்டத்தின் பங்காளிகள் அனைவருக்கும் இவ்விடம் பொதுவானது என்ற வகையில் பதிவு செய்து 5 குடும்பப் பங்காளிகளின்
பங்களிப்புடன், பிற பங்காளிகளின் பங்களிப்பும் சேர்த்து சிவன் கோவில், கன்னிமார் கோவில், விநாயகர், முருகர், கருப்பண்ணசாமி சன்னதிகளும் ஏற்படுத்தி, குழந்தைகள் மகிழ விளையாட்டுப் பூங்கா உருவாக்கி, சிவத்திரு சின்னப்பமுதலியார் கலையரங்கம் அமைக்கப்பட்டு, தெய்வத்திரு. பரிமளம் அம்மாள் அன்னதானக் கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாண்டு (2024) ஆவணி மாதம் 6 ஆம் நாள் 22-08-2024 வியாழக்கிழமை நாளில் கும்பாபிஷேகம் சீரோடும் சிறப்போடும் விமரிசையாக நடைபெற இருக்கிறது.
கன்னிமார் கோவிலோடு சேர்த்து பெருந்தலையூர் கிராமம் இன்னும் பல ஆன்மீகக் காரணங்களுக்காகவும் பெயர் போனது. பெருந்தலைச்சாத்தன் எனும் முனிவர் இவ்வூரில் பிறந்து, வளர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் இக்கிராம மக்கள் மனதார நம்புகிறார்கள். மேலும் பவானி ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் சோழர்காலத்து மகிழீஸ்வரர் என்ற சிவன் ஆலயத்தில் துர்வாச முனிவர் பூஜித்து இருக்கிறார். கண்ணப்ப நாயனார் சிலையும் வேடன் வேடத்தில் அர்ஜுனன் இருக்கும் சிலையும் இக்கோவிலில் வழிபடப்படுகின்றன.