காஞ்சிபுரத்து கரிகாலச்சோழப் பிள்ளையார் கல்வெட்டு
-----------------------------------------------------------
காஞ்சி மாநகரில் காமாட்சியம்மன் கோவிலின் அருகில், வடக்கு மாடவீதியில் அமைந்துள்ள சொக்கர் கோயில் சொக்கீசர் கோயில் என்று வழங்கப்படும் கௌசிகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் கௌசி என்ற துர்க்கை வடிவில் ஸ்ரீ காமாட்சி தவம்செய்து ஈஸ்வரனை வழிபட்டதால் இந்த கோயில் இந்த இடம் கௌசிகேஸ்வரர் என வழங்கப்படுகிற தாம். கோப்பர கேசரி வர்மனால் கட்டப்பட்ட கோயில். இங்கே குறிப்பிடப்படும் கோப்பர கேசரி வர்மன் என்பவர் முதலாம் ராஜேந்திர சோழனை (கோப்பரகேசரியின் 325 ஆம் ஆட்சியாண்டு, கி.பி. 10ஆம்
நூற்றாண்டு) குறிப்பதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட முதல் கற்கோயில் /கற்றளி இது. முழுமையும் கற்களாலேயே கட்டப்பட்ட இக்கோயிலில் உத்தம சோழன் கிபி 985 ஆம் ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள கரிகாலச்சோழன் பிள்ளையார் வழிபாட்டிற்காக கொடை அளிக்கப்பட்ட செய்தியும் காணப்படுகிறது.
கல்வெட்டு வாசகம்
"ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி பற்மற்கு யாண்டு
பதினைஞ்சாவது காஞ்சிபுரமானகரதோம்
இந் நகரத்தில் கோனேரியார் எல்லைக்குத் தெற்கு
இந் நிலம் உடையார் முத்தவாள் பெற்ற
கைக்கோளரில் ஆச்சன் சேனாச்சன் இந்நகரத்து
கடும்பிடுகு மேற்காப்பில் கரிகாலப்பிள்ளையாற்கு
திருவமுதுக்கு மாநகரத்தோம் விற்றுக்குடுக்கிற
நிலமாவது வடபாற்கெல்லை
மேற்கும் தென்பாற் கெல்லை திருவூரகத் தாழ்வார் நிலத்துக்கு
வடக்கும் மேல்பாற்கெல்லை குழிக்குக் கிழக்கும் இந்நாற்பாற்
கெல்லையுள் அகப்பட்ட நிலம் உடையார் மூத்தவாள் பெற்ற
கைக்கோளரில் ஆச்சன் சேனாச்சன் பக்கல் பெறுவிலைக் ர ககுப்பட்ட நிலம் முன்னூறும் விற்று விலையாவணம் செய்து
செம்பிலும் கல்லிலும் வெட்டிக் கொள்வதாகவும் செய்து
குடுத்தோம் கடும்பிடுகு மேற்காப்பில் தெற்கிருந்த நக்க
கோயிலில் கரிகால சோழப் பிள்ளையார்க்கு ஆச்சன்
சேனாச்சனேன் தெற்கிருந்த நக்காக்கு வைத்த சந்தி விளக்கு
ஒன்றுக்கும் இக்கோயில் காணியுடைய பாதபதி எங்குச்சோழ
தரணேந்திர பட்டனும் இவன் தம்பி திருவேகம்ப பட்டனும் கைக்கொண்ட பழங்காசு மூனறும் கைக்கொண்டோம்
இவை தரணேந்திர பட்டஸயனன் திருவேகம்ப பட்டஸ்ய.
தெற்கிருந்த நக்கர் கோயிலில்
கரிகால சோழ பிள்ளையாருக்கு
ஆச்சன் சேனாச்சனேன்
தெர்க்கிருந்த நக்கர்க்கு வைத்த
சந்தி விளக்கு ஒன்றுக்கு மிக்கோயில்"
காஞ்சிபுரம் மூத்தவாள பெற்ற கைக்கோளரில் ஆச்சன் சேனாச்சன் விலை கொடுத்து நிலம் வாங்கி காஞ்சிபுரம் கடும்பிடுகு மேற்காப்பில் தெற்கிருந்த நக்கர் கோயிலில் கரிகாலச்
சோழப் பிள்ளையார்க்குத் திரு அமுது படைக்க ஏற்பாடு செய்தார். மூன்று பழங்காசு கொடுத்து சந்தி விளக்கு வைக்கவும் ஏற்பாடு செய்தார். நிலம் காஞ்சிபுரம் மாநகரத்தாரிடமிருந்து சொக்கீசுவார் கோயிலுக்கு வாங்கப்பட் டது.
கோயிலின் முதல் தேவ கோட்டத்தில் அமைந்துள்ள கணபதியே கரிகால சோழ பிள்ளையார் என வழங்கப்படுகிறது. இந்த கோவிலில் காஞ்சிபுர தல வரலாற்றினை சிற்ப வடிவில் சிறிய அளவிலே கரிகால சோழ பிள்ளையார் தேவக் கோட்டத்தின் மேலே வரிசையாக காணமுடிகிறது. சிறு சிறு சிற்பங்கள் 24 நாசிக் கூடுகளில் அமைந்து சிற்பக் கருவூலமாகவே காட்சியளிக்கின்றன. இந்த கரிகால சோழ பிள்ளையார் சிலை மட்டும்தான் பழமையான சிலையாக பார்க்க முடிகிறது. இந்தப் பிள்ளை யாருக்கு கரிகால சோழ பிள்ளையார் என்று பெயர் வந்ததற்கான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கரிகால சோழன் இந்தக் கோயிலை தனது காலத்தில் புனரமைப்பு செய்ததுடன் அவருடைய சிற்பமும் சிலையாக வடிக்கப்பட்டு கரிகாலச் சோழன் என்ற பெயருடன் திகழ்ந்து வருகிறது. காலத்தால் முந்தியதாக கருதப்படும் இந்த கரிகாலச் சோழன் பிள்ளையார் கரிகால சோழன் காஞ்சி நகருக்கு வந்து காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலை சீர்படுத்திய காலத்தில் வணங்கிச் சென்றிருக்கலாம். இதனையும் சீர் செய்திருக்கலாம். அதிலிருந்து இது கரிகாலச் சோழன் பிள்ளையார் என்று வழங்கப் பட்டிருக்கலாம்.
--------------------------------------------
கல்வெட்டு மூலம் :
https://archive.org/stream/sengundhar-kaikolar-mudaliyar-historical-documents/செங்குந்தர்வரலாற்றுஆவணங்கள்(2)