குருசாமிபாளையம் செங்குந்த முதலியார்

0

 நெய்யும் தொழிலில் நிகரற்று விளங்கும் சிறப்பு மிக்க ஊர் தான் நாம் குடியிருக்கும் குருசாமிபாளையம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாக நமது ஊர் விளங்குகிறது. எந்த துறையானாலும் முதலில் நிற்போம் என்று தலை நிமிர்ந்து நிற்கும் பண்புடையோரே முதலியார். அத்தகைய செங்குந்த முதலியார் வாழும் பகுதியே குருசாமிபாளையம். "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழிக்கு ஏற்ப நமது ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து நிலைநாட்டிய கோவிலே அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் கோவிலாகும். நமது கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். 1935-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் நாள் (யுவ வருடம் வைகாசி மாதம் 20-ம் நாள் ) குடமுழுக்கு செய்யப்பட்டது. இக்கோவில், கற்ப கிரகம், அர்த்த மண்டபம்,மகாமண்டபம், மயில்குறடு, பலிபீடம், ,கொடிக்கம்பம், திருமதில், கோபுர வாசல், காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தீபஸ்தம்பம் முதலான பகுதிகளுடன் காணப்படுகிறது. இவைகள் பழங்காலத்து சிற்ப கலையின் சிறப்பை நாம் உணரும் வண்ணம் அமைந்துள்ளது.


ஊர்ப் பொது மக்களின் வாழ்க்கை வசதிகள்


நமது ஊராகிய குருசாமிபாளையம் சுமார் ஐம்பது ஆண்டுகளாக, பிள்ளாநல்லூர் பேரூரட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக பூர்த்தி செய்து வருகிறது. இரவை பகலாக்கும் வண்ணம் தெரு விளக்குகளை அமைத்துள்ளது. தூசு படியாத சாலை வசதிகளையும், சாக்கடை வசதிகளையும் செய்துள்ளது.நமது ஊர் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பூலாம்பட்டி கூட்டு குடிநீர்த் திட்டதில் இணைந்து காவிரி நீரை வழங்கி வருகிறது.


நமது ஊரில் அஞ்சல் அலுவலகம் பல ஆண்டுகளாகச் செம்மையாகச் செயல்பட்டு வருகிறது.


விசைத்தறி தொழிலுக்குப் பெரிதும் தேவைப்படுவது மின்சாரம். இதற்காக தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் இளநிலைப் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது . இவ்வூர் மக்கள் மின்சாரக்கட்டணம் செலுதுவதற்கு ஏதுவாக இவ்வூரிலே அலுவலகம் உள்ளது .


அஞ்சல் அலுவலக்கட்டிடமும் , மின்சாரவாரியக்கட்டிடமும் ஊர் செங்குந்தர் பஞ்சாயத்துக்கு சொந்தமானவை . மேலும் ஏற்கனவே அஞ்சல் அலுவலமாக இயங்கிவந்த முனியப்பன் கோவில் அருகில் உள்ள குள்ளக்கந்தன் சித்தமுதலியார் வீடும் பாவடிப் பஞ்சாயத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது பொது மக்களின் வணிகம் மற்றும் சேமிப்பிற்க்கும் வரவு செலவு கணக்கிற்க்கும் பிள்ளாநல்லூர் கனராவங்கி பெரிதும் உதவி செயல்ப்பட்டுவருகிறது .மக்களின் அறிவுக் கண்ணை திறப்பதற்கு 1961-ல் நமது ஊரில் சேலம் மாவட்ட நூலக ஆணைகுழுவின் கீழ்நூலகம் அமைக்கப்பட்டுள்ளது .இது பொதுமக்களின் பயன்பாட்டிற்க்குப் பெரிதும் உதவுகிறது .


"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்னும் முதுமொக்கு ஏற்ப மக்களின் உடல்நலத்தை பேணி காக்கும் வண்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டுவருகிறது.இது ஒரு வட்டார மேம்படுத்தப்பட்டசுகாதார நிலையமாகும்.

இங்கு பல ஆண்,பெண் மருத்துவர்களும்,சித்த வைத்தியரும்,செவிலியர்களும் மற்றும் சுகதார பார்வையாளர்களும் செம்மையாகச் செயல்பட்டு வருகின்றனர்.நாள்தோறும் பல நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று குணமாகி மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.இந்த ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கத்தில் நமது ஊர் மாரியம்மன் கோயில் அருகில் ஊருக்குச் சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் பிள்ளாநல்லூரில் பெரியக்கட்டிடங்கள் தமிழக அரசால் கட்டப்பட்டு அங்கு செயல்பட்டு வருகின்றது.


நமது ஊரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இதில் காய்கறிகள், கீரை வகைகள், பழவகைகள் போன்றன விற்பனையாகின்றன. வெளியூரில் இருந்து பொதுமக்கள் பலர் வந்து காய்கறிகள் மளிகை பொருட்கள் போன்றவைகளைப் பெற்றுப் பயனடைகின்றனர்



மனவளக்கலை மன்றம்.

வாழ்க வையகம் குரு அருள் வாழ்கவளமுடன்

உலகெல்லாம் காத்தருளும் பரம்பொருள், உயிருக்குயிராய் நின்று விளங்குகிறது. உடலுக்குள் ஆன்மா, ஆன்மாக்குள் உயிர், உயிர்க்குள் இறைவன்."உயிர்க்குயிராய் உறைவான் கோயில்" என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு.


இக்கருத்துக்களை மெய்ஞான நோக்கிலும் விஞ்ஞான நோக்கிலும் ஆய்வு செய்து இன்றைய மக்களுக்குப் புரியும் வகையில் நெறிப்ப்டுத்துவதே மனவளக்கலையாகும். சிறப்பு மிக்க இந்நெறியை அகில உலகிற்கும் அளித்த அருளாளர், நம் தமிழகம் செய்த தவப்பயனால் தோன்றியவர் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி. இவர் செங்குந்த மரபைச் சேர்ந்தவர். யோகிராஜ் அவர்களின் கருணை வெளிப்பாட்டினால் உருவாகியதே மனவளக் கலையாகும். இது உடற்பயிற்சி, தியானப் பயிற்சி, காய கல்ப பயிற்சி மூலம் உடலுக்கும், உள்ளத்திற்கும், உயிருக்கும் வளம் சேர்ப்பதாகும். இப்பயிற்சிகளை முறைப்படுத்தி ஊக்குவிக்கும் அறிவுத் திக்கோயில்கள் நாடெங்கும் உருவாகி வருவது காலத்தின் கட்டாயமாகும்.


அப்படிப்பட்ட அறிவுத் திருக்கோயில் நமது சேலம் அம்மா பேட்டையிலும் அமைந்துள்ளது. அதனுடைய கிளை நமது ஊராகிய குருசாமிபாளையத்திலும் அமைந்துள்ளது.நமது ஊரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அருகே உள்ள செங்குந்தர் மாகாஜன உதவிபெறும் துவக்கப் பள்ளியில் அமைந்துள்ளது.நாள்தோறும் விடியற்காலையில் பல பெண்கள் அங்கு வருகை புரிகின்றனர். அவர்களுக்கு உடற்பயிற்சி, தியானப்பயிற்சி, காயகல்ப பயிற்சி அளிக்கப்பட்டு, செம்மையாக செயல்பட்டுக்கொண்டுள்ளனர். இதற்காக கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. புதியதாக வரக்கூடிய பெண்களும் பயிற்சி பெற வரவேற்கப்படுகிறார்கள். இதற்கு பொறுப்பாசிரியராக இருப்பவர் திருமதி.அ.மல்லிகா ஓய்வு பெற்ற ஆசிரியை அவர்கள் ஆவார். இச்சீரிய முயற்சி சிறந்து விளங்க வேண்டும். நமது ஊரைச் சுற்றி அருள் , அன்பு அலைகள் பெருக வேண்டும்.அனைத்து உயிர்களும் இறைவனின் அருள் பேராற்றலால் எல்லா நலங்களும் பெற்று இன்புற வேண்டும்.


செங்குந்த குலச்சான்றோர்கள்

நமது செங்குந்தர் சமுதாயத்தில் பல்வேறு காலத்தில் பல்வேறு சாதனையாளார்கள் தோன்றி நாட்டிற்கு நன்மை செய்துள்ளனர் அவர்களைப் பற்றி ஈண்டு காண்போம். ஈட்டி எழுபது என்ற காவியத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவரே அவர் கூறும் முதலியார்களின் சிறப்பை ஈண்டு காண்போம்.


இந்திரன் அயல்மல் தேவர்

யாவர்க்கும் முதன்மையாக

வந்த பான்மையினால் சூல

மழுப்படை அந்தணார்க்கு

முந்திய நாமம் தானும்

முதலியார் ஆகையால் செங்

குந்தர் சந்ததிக்கும் அப்பேர்

முதலியார் என்று கூறும்.

எல்லாவற்றிற்கும் முதன்மையானவர்கள் என்பதன் பொருளில்தான் முதலியார் என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் அரசியல் சமூகம் பொருளாதாரம் கல்வி கலை ஆன்மீகம் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சிறந்து விளங்குபவர்கள் முதலியார்களே.


இவர்களில் குறிப்பிடத் தக்கவர் தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் அருந்தொண்டாற்றிய திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். இவர் உலகம் முழுவதும் ஆன்மீகச் சொற்பொழிவாற்றி வாழ்நாள் முழுவதும் ஆன்மீகப்பணிபுரிந்து செங்குந்தர் சமுதாயத்தைக் குன்றின் மேல் இட்ட விளக்குபோல் ஒளிபெறச் செய்தார்.


நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கையில் மூவர்ணக் கொடியை ஏந்தி தடைஉத்திரவை மீறி திருப்பூர் தெருவில் ஆங்கில அரசுக்கு எதிராக முழக்கமிட்ட முதல் ஆளான திருப்பூர் குமரன் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவரே,


சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேறிஞர் அண்ணாதுரை அவர்களும் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவரே. தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆட்சிக்கு வித்திட்டவரும் இவரே,


சேலம் மாநகரில் திரைப்படங்களைத் தயாரிக்கும் மார்டன் தியேட்டர்ஸ் என்ற ஸ்டுடியோவை நிறுவி, 100 படங்களுக்கு மேல் தயாரித்தவர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் முதன் முதலாக வண்ணத் திரைப்படத்தை தயாரித்தவரும் இவரே, இத்தகைய புகழ்ப் பெற்ற டி.ஆர்.சுந்தரம் அவர்கள் செங்குந்தர் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவரே,


தமிழ்த் திரைபடங்களில் தெளிவான குரலுடன் அட்டகாச சிரிப்பால் தமிழ் நெஞ்சங்களை கவர்ந்த பி.ஸ்.வீரப்பா அவர்கள் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவரே,


தமிழ்த் திரைப்பட தாயாரிப்பாளாரான டி.ஆர்.சுந்தரம் அவர்களின் சகோதரர் V.V.C.R.முருகேச முதலியார் அவர்கள். இவர் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு முருகபெருமான் குடி கொண்டிருக்கும் பழனிமலை தேவஸ்தானத்தை விரிவுபடுத்தினார் . இவரும் நமது செங்குந்தர் சமுதாயத்தைச் சேர்ந்தவரே,


கைத்தறி நெசவாளர் நெஞ்சங்களில் என்றும் குடியிருக்கும் கைத்தறி காவலர் S.P.நாச்சிமுத்து அவர்களும் முதலியார் சமுகத்தை சேர்ந்தவரே,


அவரது அடிச்சுவற்றில் தொடர்ந்து பணியாற்றும் நெசவாளர் நேசன் J.சுத்தானந்தம் அவர்களும் செங்குந்தர் சமுதாயத்தைச் சேர்ந்தவரே,


நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முதல் முதலில் திரையுலக்கத்துக்கு அறிமுகப்படுத்தியவர் நேசனல் பிக்சர்சர்ஸ் அதிபர் P.R.பெருமாள் என்பவரும் முதலியாரே,


திரு.வி.க. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்களும் முதலியார் இனத்தை சேர்ந்தவரே ,


பல புரட்சிக் கருத்துக்களை கவிதையில் புகுத்தி புரட்சி கவி என்று போற்றப்பட்ட புரட்சி கவிபாரதிதாசனும் முதலியார் சமுதாயத்தைஸ் சேர்ந்தவரே


சேலம் அம்மாப்பேட்டையில் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு அரும்பாடுபட்டு முன்னேறச் செய்தவர் அம்மாப்பேட்டை A. மாரியப்பன் அவர்களும் சமுதாயத்தைச் சேர்ந்தவரே,


இப்படி செங்குந்தர் குலச் செம்மல்களை அடுக்கி கொண்டே செல்லலாம் இறுதிய தற்போது சந்திரனுக்கு ஆளில்லாத செயற்கைக் கோளான சந்திராயனை வெற்றிகரமாக செலுத்திய மயில்சாமி அண்ணாதுரையும் நமது முதலியார் இனத்தைச் சேர்ந்தவர் தான். மேலும் நமது ஊரைஸ் சேர்ந்த மணியம் K.S.மாரிமுத்து முதலியார் அவர்களின் பேரன், திருப்பூர் S.நடராஜன் I.A.S அவர்கள் தற்போது மதுரையில் ஒழுங்குமுறை ஆணையத்தில் ஆணையாளராக உள்ளார்.இவரும் முதலியார் இனத்தைச் சேர்ந்தவரே


நாடகக் கலை

ஆயக்கலைகள் அறுபத்துநான்கு என்பர் ஆன்றோர். அந்த அறுபத்து நான்கு கலைகளில் மிகவும் சிறப்புபெற்று விளங்குவது நாடகக் கலையே! ஏன் என்றால் மற்ற கலைகள் நமது ஐம்புலன் களில் ஏதாவது ஒரு புலனுக்குத்தான் விருந்தளிக்கிறது. ஆனால் நாடகக் கலையோ நமது கண் செவி ஆகிய இரண்டுபுலங்களுக்கும் ஒருசேர சிறப்பாக விருந்தளிக்கிறது. அத்தகைய நாடகக் கலையின் சிறப்பை உண்ர்ந்தவர்கள் நமது ஊர் செங்குந்த பெருமக்கள் எனவே ஏறத்தாழ 89 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1920ம் ஆண்டு முதலே நமது ஊரில் நாடகத்துறை மிகவும் சிறந்து விளங்கியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திரத்தை முன்னிட்டு சிவசுப்ரமணியர் தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த பண்டிகையின் போது இரண்டு அல்லது மூன்று நாடகங்களைச் செம்மையாக நடத்திவந்தனர். அல்லிஅர்ச்சுமா பவளக்கொடி ஸ்ரீவள்ளி சத்தியவான் சாவித்திரி போன்ற புராண நாடகங்களை நடத்திவந்தனர்.


அந்த காலத்தில் மின்சார வசதி இல்லாததால் மண்னெண்ணை கசலை எண்னெய் ஆகியவற்றைத் கலந்து தீப்பந்தம் பிடித்து நாடகங்களை நடத்திவந்தனர். பவளக்கொடி நாடகத்தில் ராஜவேடம் அணிந்து மேற்கத்தி கந்தசாமி முதலியார் சிறப்பாக நடித்துவந்தார். அவர் ஊர் காரியக்காரராகவும் இருந்ததால் ராஜாகாரியக்காரர் என்ற சிறப்பு பட்டம் பெற்றார். நாரதராக நடித்தவர் தொட்டிகார காளியப்ப முதலியார் அவர்கள் ஆவார். 1925ம் ஆண்டு முதல் 1930ம் ஆண்டு வரை மார்க்கண்டன் நாடகம் மிகவும் சிறப்பாக நடந்துவந்தது. அதில் மார்க்கண்டனாக நடித்தவர் குடும்பத்தை மார்க்கண்டன் வீடு என்றே பட்ட பெயர் கொடுத்து வழங்கி வருகின்றனர் .


நாடகத்தில் எமன் வேடமணிந்து நடித்தவர் கொம்பேரி பெருமாள் முதலியார் அவர் நாடகத்தில் மட்டும் அன்றி சாதாரணமாகப் பார்த்தாலும் நமக்கு பயம் ஏற்படும் 1930ம் ஆண்டு முதல் 1935ம் ஆண்டு வரை வெளியூரில் இருந்து நாடகக் கலைஞர்கள் நமது ஊருக்கு வருகை புரிந்து நாடகம் நடத்தி வந்தனர். அவர்கள் பார்வையாளரிடமிருந்து அரையணா,அல்லது ஒரு அணா,அதாவது தற்சமயம் புழகத்திலுள்ள மூன்று பைசா, ஆறுபைசாவைக் கட்டணமாக வசூலித்து நாடகம் நடத்தினர்.


1935-ம் ஆண்டு வைகாசி மாதம் நமது ஊரில் ஸ்ரீசிவசுப்ரமணியர் கோயில்கட்டி, அஷ்டபந்தன மகா கும்பாபிசேக விழா மணியம் K.s.மாரிமுத்து முதலியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விழாக்காலங்களில் நாடகம் சிறப்பாக நடைபெற்றது.அந்த நாட்களில் சிறப்பாக பாட்டு பாடியும்,அதற்கு விளக்கம் சொல்லியும் நடிப்பர். தனிவசனம் கிடையாது.1942-ஆம் ஆண்டு திருநெல்வேலி சங்கமேஸ்வரன் ஆசிரியர் அவர்களால் சம்பூரண ராமாயணம் நாடகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கனகசபை அங்கமுத்து முதலியார்,T.P.சித்தமுதலியார் நாட்டாமங்கலம் வீரப்பமுதலியார், தூங்கஆசாரி, செட்டியார் சின்ன பையன்,பூச்சி கந்தசாமி முதலியார்,பருவாச்சி களியப்பமுதலியார், தாரமங்கலம் கைலாசமுதலியார் மற்றும் பலர் ஒன்று சேர்ந்து நடிகர் குழு அமைத்தனர். இவர்கள் நடத்திய இராமாயண நாடகத்தை காணும் போது ,வேடம் என்று நினைக்காமல் இராமாயண கதா பாத்திரங்களே நேரில் தோன்றுவதுபோல் இருக்கும். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வருகைப் புரிந்தவர்கள், விடியும் வரை கண் உறங்காமல் நாடகத்தை பார்த்து ரசித்து மகிழ்வடைவார்கள்.


மின்சாரம் இல்லாத காலத்திலே பெட்ரூமாஸ் விளக்கை கயிற்றில் கட்டி, பந்தலில் தூக்கிகட்டி அந்த வெளிச்சத்தில் நாடகத்தை நடத்துவார்கள். அந்த விளக்கின் வெளிச்சம் குறையும் போது அதனை கீழே இறக்கி காற்று அடித்து,மீண்டும் விளக்கை உயரே கட்டி நாடகத்தை தொடங்குவதற்குவார்கள் .இவ்வாறு விளக்கிற்கு காற்று அடித்து உயரே கட்டுவதற்கு ஒரு மணிநேரம் கூட ஆகலாம்.அதுவரை பார்வையார்கள் பொறுமையுடன் காத்திருப்பார்கள்.


நமது ஊர் நடிகர்களின் நடிப்பையும்,வேடப்பெருத்ததையும் கண்டு மகிழ்ந்த களங்காணி ஊர்மக்கள், நமது ஊர் நடிகர்களை அவர்கள் ஊருக்கு அழைத்துச் சென்று நாடகம் நடத்துமாறு வேண்டினார்கள் என்றால், நமது ஊர் நாடகநடிகர்களின் பெருமையை சொல்லவும் வேன்டுமோ? நமது ஊர் நடிகர்களில் சிலருக்கு சேலம் மார்டன் தியேட்டரில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும் நமது ஊர் நடிகர்கள் அதனை தவற விட்டுவிட்டனர்.இராமாயணம் நாடகம் 1952-ம் ஆண்டு வரை சிறப்பாக நடைபெற்றது.


காலாட்டம் ஆடிக் கொண்டும்,பாடிக் கொண்டும் நடிப்பார்கள் இதனை காலாட்டம் என்பர். இந்த அரிய நாடகத்தை பண்டிதம் சின்னு, மத்தளாம் மாரிமுத்து ,நாட்டாமங்கலம் கந்தசாமி ,புள்ளி அப்பு என்ற சூரப்புலி ஆகியோர் 1957-ம் ஆண்டு வரை நடத்தி வந்தனர்.அதன் பிறகு மொசுவம் அங்கமுத்து முதலியார் ,பூசாரி முத்துசாமி, சூலப்புலி ஆகியோர் சித்தரவள்ளி என்ற ஒட்ட நாடகத்தை நடத்திவந்தனர்.அந்த இசையும் பாட்டும் மக்களை ஈர்த்த காலமுண்டு.


1960-ம் ஆண்டு கரிச்சி பழனியப்பமுதலியார் தலைமையில் முத்தமிழ் நாடகமன்றம் துவங்கப்பட்டது.இந்த நாடகமன்றமானது "இலங்கேஸ்வரன் " என்றநாடகத்தை சிற்ப்பாக நடத்தி வந்தது. இந்த நடகமன்றத்தில் S.A.அங்கமுத்து முதலியார் ,k.சண்முகம்,N.மாரிமுத்து A.மாரிமுத்து,V.சதாசிவம்,M.சுப்ரமணியம் மற்றும் சிலர் முயற்சியால் நாடகம் சிறப்பாக அமைந்தது. நாடகத்தில் நடிப்பவர்,வேடத்திற்கு தகுந்த உருவமும் தோற்றமும் கொண்டிருந்தமையால் மக்கள் மனதை மிகவும் கவர்ந்தது.நான்கு ஆண்டுகள் சிறப்பாக இவர்கள்நாடகத்தை நடத்தினார்கள் .


1964-ம் ஆண்டு S.A.அங்கமுத்து முதலியார் அவர்கள் முத்தமிழ் நாடக மன்றத்திற்குத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.பங்குனி உத்திரத்தேர்த்திருவிழாவின் போது மூன்று நாடகங்களை நடத்திசிறப்பித்தனர்.பண்டிதம் கேசவமூர்த்தி, K.பாலகிருஷ்ணன் , மல்லூர் குணசேகரன் ,பருவாச்சி இராமலிங்கம் ,A.ஆதிமூலம்,மத்தளம் சண்முகம் மத்தளம் தங்கவேலு,கரிச்சி வடிவேல் , V.சதாசிவம், மேட்டுபாளையம் சுப்ரமணியம், கண்ணாடி சீனிவாசன் ஆகியோர் விடா முயற்சியால் நாடகம் சிறப்பாக நடத்தப்பட்டது.நாடக ஆசிரியர் புதூர் M.N.மாரிமுத்து அவர்கள் இயக்குனராகப் பணியாற்றினார். அவர்களின் முயற்சியால் பல சரித்திர நாடகங்களும்,புராண நாடகங்களும் நடை பெற்றுவந்தது.அவருக்குப் பிறகு இயக்குனர் பொறுப்பை பண்டிதம் கேசவமூர்த்தி ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.கடந்த 25 ஆண்டுகளாகப் பல அரிய நாடகங்களை நடத்தி வரும் முத்தமிழ் நாடக மன்றத்தினர் நமது ஊரில் உள்ள செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி மற்றும் செங்குந்தர் மகாஜன மகளிர் உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு,பன்னிரொண்டம் வகுப்பில் பயின்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவ,மணாவியருக்கு பரிசித்தொகை வழங்கி சிற்றப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது .


1976-ம் ஆண்டு டாக்டார் பாலுசாமி,நாட்.சீனிவாசன்,k.k.மாதேஸ்வரன் ஆகியோர் ஒன்று சேர்ந்து பாரதி கலை வளர்ச்சி நாடக மன்றத்தைத் துவக்கினார்கள்.இவர்கள் தேர்த்திரு விழாவிற்கு முதள்நாள் பல சமூக நாடகங்களை நடத்தி வருகின்றனர்.நாடக மன்றம் என்பது நடாகக் கலை சார்ந்தும்,மக்களுக்கு வாழ்வில் பயன் தரக்கூடிய நல்ல சிந்தனைகளை உருவாக்கவும்,நேர்மையானப் பாதையைக் கடைபிடிக்கவும்,சமுதய சமதர்மத்தைக் காக்கவும்,கல்வியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது.இதனை மையமாகக் கொண்டே பாரதி கலை வளர்ச்சி மன்றம் தொடங்கப்பட்டது.எனவே பல சமூகநாடகங்கள் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்தியம்பிக் கொண்டுள்ளது.மேலும் ஆண்டுதோறும் செங்குந்தர் மகாஜன உதவிப் பெறும் துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்களில் ஐந்தாம் வகுப்பில் முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தையும் பெறும் மாணவ,மாணவியருக்கு கல்விக்குப் பயன்படும் தமிழ் அகராதியைப் பரிசகக்கொடுப்பது வழக்கம்.மேலும் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி,செங்குந்தர் மகாஜன மகளிர் உயர் நிலைப் பள்ளியில்பயின்று பத்தாம் வகுப்பில் முதல் இரண்டு தகுதி பெற்ற நான்கு மாணவ மாணவியருக்கும் வெள்ளிப் பதக்கம் பரிசளிப்பு வழக்கம். மேலும் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் முதல் இரண்டு மதிப்பெண்கள் பெற்றவருக்கும் வெள்ளிப் பதக்கம் பரிசாக வழங்கப்படுகிறது.


முத்தமிழ் மன்றமும் பாரதி கலை வளர்ச்சி மன்றமும் தேர்த்திருவிழாவின் போது ஓரிரு ஆண்டுகள் தவிர தொடர்ந்து நாடகங்களை நடத்தி வருகின்றனர்.திரைப்படங்கள் தொலைக்காட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தால் மக்களிடையே நாடகம் பார்க்கும் ஆர்வம் குறைந்து காணப்பட்டாலும், குருசாமிபாளையத்து முன்னோர்கள் தோற்றுவித்த நடகக்கலையின் பெருமை குறையாமல் நடைபெற, குருசையில் எழுந்தருளியுள்ள எல்லாம் வல்ல ஸ்ரீசிவசுப்ரமணியர் அருள் பாலிக்க வேண்டுகிறோம்.


கல்வி கண் கொடுத்த செங்குந்தர் மஹாஜன பள்ளிகள்

 

முக்கனிகளில் முதன்மை பெற்று விளங்குவது மாங்கனி. மாங்கனி நகர் என்று போற்றப்படுவது சேலம் மாநகர். அத்தகைய சேலம் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் அமைந்திருந்தது தான் நமது ஊரான குருசாமிபாளையம்.1996-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து நாமக்கல் மாவட்டம் உதயமானது. அது சமயம் நமது ஊர் நாமக்கல் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. நெய்க்கு பெயர் பெற்றது ராசிபுரம். இராசிபுரம் வட்டத்தில் நெய்தல் தொழிலுக்குப் பெயர் பெற்றது குருசாமிபாளையம். இங்கு வாழும் செங்குந்தப் பெருமக்கள் கல்வியைக் கண் போலக் கருதினர். எனவே ஆதி காலத்தில் நமது ஊரில் குருகுலப் பள்ளிகள் மூன்று இயங்கி வந்தன. சேலத்தார் என்று அழைக்கப்படும் திரு கிருஷ்ணமுதலியார் அவர்கள் முயற்சியால் அந்த மூன்று குருகுலப்பள்ளிகளும் ஒன்றாக இணைந்தன. அவ்வாறு இணைக்கப்பட்டப் பள்ளியின் பெயர் தான் ஸ்ரீ கிருஷ்ணவிலாஸ் உயர்தர ஆரம்ப பாடசாலையாகும். இப்பள்ளியில் ஜம்பை திரு. மா. அர்த்தனாரி முதலியார் அவர்கள் ஆசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இப்பள்ளி திருமதி. அலமேலு அம்மாள் அவர்களது மேற்பார்வையில் அமைந்தது. அந்த அம்மையார் அப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி செம்மையாக செயல் பட்டு வந்தார்.


1951-ம் ஆண்டு வரை இராசிபுரம் அரசினர் உயர் நிலைப் பள்ளியைத் தவிர இந்த வட்டாரத்தில் உயர்நிலைப் பள்ளியே இல்லை. ஆகவே நமது ஊரைச் சேர்ந்த மாணவர்கள் இராசிபுரம் சென்று தான் உயர்நிலைக் கல்வி கற்று வந்தனர். அவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த நிலையை மாற்ற பொது நலம் படைத்த நல்ல உள்ளம் கொண்ட செங்குந்த சமுதாயப் பெரியவர்கள் ஒன்று கூடி நமது ஊரில் உயர்நிலைப்பள்ளி ஏற்படுத்த வேண்டும் என்றும் நமது சமுதாய மாணவர்கள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்றும் எண்ணினர். அவர்கள் நல்ல எண்ணத்துடன் ஒன்று பட்டு உயர்நிலைப் பள்ளியை நிறுவினார்கள்.இது குருசாமிபாளையம் செங்குந்த பெருமக்கள் செய்த புண்ணியம் என்று சொன்னால் மிகையாகாது.


முதன் முதலாக கீழ்க்கண்டவர்களைக் கொண்ட பள்ளி நிர்வாகக் குழுவை செங்குந்த பெருமக்களின் சமுதாயத்தால் நிறுவப்பட்டது.


1.திரு.ஜி.ஏ.செங்கோட முதலியார் அவர்கள், தலைவர்.

2.திரு.எம்.கே.காளியப்ப முதலியார் அவர்கள்,செயலாளர்.

3.திரு.ஏ.எஸ்.அருணாசல முதலியார் அவர்கள்,துணைத் தலைவர்.

4.திரு.எஸ்.மாரிமுத்து அவர்கள்,உறுப்பினர்.

5.திரு.யு.ஏ.சுப்பராய முதலியார், அவர்கள் உறுப்பினர்.

6.திரு.கே.எஸ்.மாரிமுத்து முதலியார் ,அவர்கள் உறுப்பினர்.

7.திரு.டி.கே.அருணாசலம் அவர்கள்,உறுப்பினர்

8.திருமதி.அலமேலம்மாள் அவர்கள்,உறுப்பினர்

9.திரு.கே.என்.பழனியப்ப முதலியார் அவர்கள்,உறுப்பினர்

10.திரு.என்.வெள்ளைய முதலியார் அவர்கள்,உறுப்பினர்


பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகக் குழு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பள்ளித் துவக்கம்


 02.07.1951-ம் நாள் சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சிவசங்கரன் அவர்கள் தலைமையில்,சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.வி.ஏ.மரியசூசை அவர்களால் முதல் படிவத்திலிருந்து நான்காம் படிவம் வரையுள்ள பள்ளியாகத் தொடங்கி வைக்கப்பட்டது.பின்னர் 1953-1954-ம் ஆண்டு முதன்முறையாக ஆறாம் படிவத்துடன் முழுமையான உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டது.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நமது பள்ளி வளர்ந்து 01.07.1978-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.



செங்குந்தர் மகாஜன மகளிர் உயர்நிலைப் பள்ளி.

நமது பள்ளியில் 1988-1989-ம் ஆண்டில் 1800 மாணவ-மாணவியர் கல்வி பயின்றனர். மகளிர் கல்வி சிறப்பாகஅமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு இதே நிர்வாகத்தின் கீழ் செங்குந்தர் மகாஜன மகளிர் உயர்நிலைப்பள்ளி துவக்கப்பட்டு 1989-90-ம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கெண்டி. A.அர்த்தனாரி அவர்கள் முயற்சியால் மகளிர் பள்ளி உருவானது. இப்பள்ளிக்கு சுமார் ரூ. 26 இலட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு 13-11-1999 அன்று தமிழக கல்வி அமைச்சர் மாண்புமிகு க.அன்பழகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1150- மாணவ மாணவியரும், மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 650 மாணவியரும் கல்வி பயின்று வருகின்றனர்.

செங்குந்த மகாஜன உதவி பெறும் துவக்கப்பள்ளி

1994-ம் ஆண்டு வரை நமது ஊரில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணவிலாஸ் துவக்கப்பள்ளியை, திருமதி அலமேலு அம்மாள் (ஐயர் வீட்டு அம்மாள்) அவர்களிடமிருந்து பெற்று இதே நிர்வாகம் செங்குந்தர் மகாஜன உதவிபெறும் துவக்கப்பள்ளி என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது.


தற்போது மேல்நிலைப் பள்ளியில் 39 ஆசிரியர்களும், 6 அலுவலக பணியாளர்களும், பணிபுரிகின்றனர். மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 12 ஆசிரியைகளும், 2 அலுவலகப் பணியாளர்களும் பணிபுரிகின்றனர். துவக்கப் பள்ளியில் 15 ஆசிரியர்களும் பணியாற்றி கல்வித் தரத்தை உயர்த்த பாடுபட்டுக் கொண்டுள்ளனர்.

பள்ளியில் தொழிற்கல்வியின் முலம் பயன் பெற்றவர்கள்

மேல்நிலைப் பள்ளியில் 1985-86-ம் ஆண்டு முதல் 1989-90-ம் ஆண்டு முடிய ஐந்து ஆண்டுகள் மேல்நிலைக் கல்வியுடன் இடைநிலை ஆசிரியர் பயிற்சியும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பயின்று இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்ற மாணவிகள் இன்று பல்வேறு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியைகளாகவும்,தலைமை ஆசிரியைகளாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி வரலாற்றில் இது மேலும் ஒரு மைல் கல்பதித்தது போல் ஆகும் என்று கூறினால் மிகையாகாது.


பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்கள்.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் புகழ் பெற்ற மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும்/ அறிவியல் அறிஞர்களாகவும்,கணிப்பொறி வல்லுனர்களாகவும்,நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.அரசுஅலுவலர்களாகவும்,ஆசிரியர்களாகவும் பலர் பணியாற்றி வருகின்றனர். காவல் துறை ஐ.ஜி.திரு.ஆ.பழனிவேல் அவர்களும்,காவல் துறை டி.ஐ.ஜி,திரு.குமாரசாமி அவர்களும்,ஐ.ஆர்.எஸ்.அதிகாரியான சரவணக்குமார் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.


மாணவ-மாணவிகள் சாதனை:

1996-1997-ம் கல்வியாண்டில் மேல்நிலைத் தேர்வில் இப்பள்ளி மாணவி ரம்யா என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றார்.1997-1998-ம் கல்வியாண்டில் நாமக்கல் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்புத் தேர்வில் இரண்டாம் இடத்தை என்.சிவராஜசேகர் என்ற மாணவரும்,மூன்றாம் இடத்தை.எஸ்.ஜெகதீஸ் என்ற மாணவரும்,நான்காம் இடத்தை பச்சியப்பன் என்ற மாணவரும் பெற்று சாதனை படைத்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.


மகளிர் பள்ளியில் 2001-2002-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை ஈ.நர்மதா என்ற மாணவி பெற்று சாதனை படைத்தார்.மேலும் 2002-2003-ம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை ஜ.கீர்த்தனா என்ற மாணவி பெற்று சாதனை படைத்துள்ளார்.


முன்னாள் மாணவ மன்றம்


நமது பள்ளியில் முன்னாள் மாணவ மன்றம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.1951-ம் ஆண்டு துவக்கப்பட்ட நமது பள்ளியின் பொன்விழா 2001-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.இதையொட்டி பள்ளியின் முன்னாள் மாணவர்மன்றம் சார்பாக ஒரு பொன்விழா கட்டிடம் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தனர். அவர்கள் அன்பளிப்பாக அளித்த நன்கொடையில் சுமார் 10.50லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டது.அக்கட்டிடம் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டில் அமைந்துள்ளது.


1951-ம் ஆண்டு துவக்கப்பட்ட நமது பள்ளி நிர்வாகக் குழுவானது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை,செங்குந்தர் பெருமக்களால் மாறுதல் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

அந்த முறையில் தற்போது 16-10-2007-ம் ஆண்டு முதல் கீழ்க்கண்டவர்களை நிர்வாகக் குழுவாகக் கொண்டு நமது பள்ளி செயல்பட்டு வருகிறது.


1. திரு. மா . சண்முகம் அவர்கள் - தலைவர்.

2. திரு. அ. பழனிச்சாமி அவர்கள் - துணைத்தலைவர்.

3. திரு. மு. வடிவேல் அவர்கள் - செயலாளர்.

4. திரு. ஆ. பழனிசாமி அவர்கள் - பொருளாளர்.

5. திரு. கா. விஸ்வநாதன் அவர்கள் - உறுப்பினர்.

6. திரு. சௌ. ஞானசேகரன் அவர்கள் - உறுப்பினர்.

7. திரு. செ. லோகநாதன் அவர்கள் - பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதி.


16-10-2007-ம் ஆண்டு பொறுப்பேற்ற பள்ளி நிர்வாகக் குழுவானது மிகுந்த முயற்சி எடுத்து பழுதான கட்டிடங்களையும், சேதமடையும் நிலையில் இருந்த கட்டிடங்களையும் எடுத்து விட்டு புதியதாகக் கட்டிடம் கட்ட தீர்மனித்தது. மேலும் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. சுமார் 30 இலட்சம் மதிப்பில் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய மாடிக்கட்டிடம் கட்ட எண்ணி, மாவட்ட ஆட்சித் தலைவரை அனுகி 50% மானியத்துடன் ரூ. 17 இலட்சம் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தில் ஐந்து வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடமும் கட்டப்பட்டது. மேலும் சேலம் ரோட்டரி சங்கத்தின் மானியத்தில் ரூ, 2 இலட்சம் மானியம் பெற்று மகளிர் உயர் நிலைப் பள்ளிக்கு 100 பெஞ்ச், டெஸ்க்கும் வாங்கப்பட்டது. மேல்நிலைப்பள்ளியில் ரூ. 2.50 இலட்சம் மானியம் பெற்று 12 அறைகளைக் கொண்ட நவீன கழிப்பிடமும் கட்டப்பட்டது. மேலும் இரண்டு பள்ளிகளுக்கும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது.


சாதனைகள் பல படைத்தாலும் இப்பள்ளி பல சவால்களையும் எதிர்நோக்கி உள்ளது. பெருகி வரும் ஆங்கில வழி பள்ளிகளைக் கருத்தில் கொண்டு, நம் பள்ளியில் 6- மற்றும் 7-ம் வகுப்புகளுக்கு ஆங்கில வழிப்பாடம் துவக்கப்பட்டுள்ளது. 2008- ம் ஆண்டு மேல்நிலைத் தேர்வில் நம்பள்ளி கார்த்தி என்ற மாணவன் அரசியல் அறிவியல் பாடத்தில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது ,பள்ளி வரலாற்றில் பொன் ஏட்டில் பொறிக்க வேண்டிய ஒன்றாகும். இதுபோல இன்னும் பல சாதனைகளைப் படைத்து நமது பள்ளியானதுமாவட்டத்திலும்,மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் பெயர் பெற பள்ளி நிர்வாகமும்,ஆசிரியர்களும் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளனர். செங்குந்தர் சமுதாய மக்களும் சுற்று வட்டாரப் பொது மக்களும், நல்லாதரவு வழங்க அன்புடன் வேண்டுகிறோம்.


ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய சிறப்பு நிகழ்ச்சி

 

தமிழ் வருடப்பிறப்பு அன்று சிவசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெறும். மாலை சுவாமி அலங்கார ஊர்வலம் மேலதாளத்துடன் நடைபெற்றுவருகிறது.


ஆறு படை வீடுகள்.

1. திருப்பரங்குன்றம், (மதுரைக்கு அருகில்)

2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

3. திருவாவினன் குடி (பழநி)

4. திருவேரகம் (சுவாமி மலை)

5 குன்றுதோறாடல் (திருத்தணிகை)

6. பழமுதிர்ச்சோலை (மதுரைக்கு அருகில்)


மாரியம்மன் திருவிழா


 ஓம் மங்கள காரணீ ச வித்மஹே

மந்த ஹாஸினி ச தீமஹி

தன்னோ மாரி ப்ரசோதயாத் - காயத்திரி


ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்திலுள்ள தெய்வங்களை வணங்கிய பின்னர், ஸ்ரீமாரியம்மன் சந்நிதியை அடைகிறோம். இந்த ஆலயம் மிகவும் பழமையானதும், மிகவும் சக்தி வாய்ந்ததும் ஆகும். இந்த ஆலயமானது பழங்காலத்தில் நாட்டு ஓடு கொண்டு வேயப்பட்ட கொட்டகையில் அமைந்திருந்தது. வருடா வருடம் ஐப்பசி மாதத்தில் ஊர் பெரியதனக்காரர் மற்றும் காரியக்காரர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பாக பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு முன்பே முதலில் பூவோடு வைத்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். அன்று முதல் மஞ்சள் நீராடி பண்டிகை முடிவடையும் வரை பக்தர்கள் பல வேடங்கள் பூண்டு நேர்த்தி கடனை செலுத்துவதோடு மக்களையும் மகிழ்விக்கிறார்கள். பொங்கல் அன்று வண்டிவேடிக்கை நடைபெறும். வண்டி வேடிக்கையில் முதலில் வருவது பூந்தேர், பூந்தேரை அலங்கரித்து முறைப்படி பூஜை செய்து வருபவர்கள் இவ்வூரில் வாழும் அத்தனூரார் பங்காளிகள் வகையறாவினர் ஆகும்.


அதன் பின் யானை மேல் அமர்ந்து ராஜதர்பாருடன் கூடிய வேடமிட்டவர் வருவார். இவர் குழந்தைகளுக்குத் திருநீறு அணிவித்தால் குழந்தைகள் நோயற்று நலமுடன் வாழும் என்பது ஐதீகம். இவ்வாறு யானை வண்டிவேடமிடுபவர்கள் ஓலைப்பட்டியார் பங்காளி வகையறாவினர் ஆகும்.


ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் திருவிழாவின் போது சத்தாபரணம் நடைபெறுவது வழக்கம். சத்தாபரண நிகழ்ச்சிக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சிக்கும் பவானி கொமராபாளையத்தைச் சேர்ந்த சிவசக்தி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்களான சிவசக்தி கரிச்சி கே.லோகநாதன் அவரது தம்பிகளான கே.சண்முகசுந்தரம் மற்றும் கே.தனசேகரன் ஆகியோர்கள் அவர்களது சொந்த செலவில் இதுவரை நடத்திவருகின்றனர்.


இத்திருக்கோவிலுக்கு கல்மண்டபம் அமைக்க எண்ணிய நமது ஊர்மக்கள் முயற்சியாலும் ஆன்மீகச் செல்வந்தர்கள் முயற்சியாலும் கல் மண்டபம் அமைத்தனர்.07.09.1990-ம் ஆண்டு அன்றய பெரியதனக்காரர் பஞ்சாடி அவினாசி முதலியார் தலைமையில் ஆயிரம் பிறை கண்டவர் பிரதிஷ்டா ரத்தினம் V.M.குப்புசாமி குருக்களும், ஸ்ரீமது ஆதிசைவ புரந்தர பண்டித குருஸ்வாமி சிவயாக நிர்வாக செம்மல் M.சண்முகசுப்ரமணிய குருக்களும் சிவ ஆகமப்படி வேத விற்பனர்களைக் கொண்டு மிகக் சிறப்பாக குடமுழுக்கு செய்வித்தனர்.


நாம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அனைவருக்கும் அருள் அளிக்கும் ஸ்ரீவிநாயகரை வணங்கி வழிபட வேண்டும். பின்னர் கருணையே வடிவாக அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மனை ஒரு மனதுடன் வழிபடவேண்டும். பின்பு மாரியம்மனுக்கு எதிர்புறமுள்ள சிம்மவாகனத்தை வழிபட வேண்டும். அதன் கிழபுறம் அமைந்துள்ள காமாட்சி அம்மனை வழிபட்டு ,அதன் கிழபுறம் அமைந்துள்ள ஸ்ரீமுத்துகுமாராசாமியை வணங்க வேண்டும் .பின்னர் அதன் அருகில் உள்ள இடும்பன்,கடம்பன் சுவாமிகளை வணங்க வேண்டும்.அதன் பின்னர் குறிஞ்சி மண்டபத்தை வலம் வந்து அதில் அமைந்துள்ள ஊஞ்சலை வணங்க வேண்டும். இந்த குறிஞ்சி மண்டபம், கருப்ப முதலியார் பங்காளிகள் வகையறாக்களால் அமைத்துப் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு மாரியம்மனை வணங்கிவழிபட்டு அம்மன் அருளை அனைவரும் பெறவேண்டும்.


மாரியம்மன் கோயிலுக்கு கிழக்கே செட்டி பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் வைசியர் செட்டியார் சமூகத்தினரால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.


பூந்தேரைத் துவக்கிவைப்பவர் ஆண்டகளுர்கேட் திரு. ஜெகநாத ஐங்கார் அவர்கள் ஆவார்.



விடுபட்டுள்ள தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு அனுப்பவும்

Post a Comment

0Comments
Post a Comment (0)