பாவடி - செங்குந்த முதலியார் உயிர் நாடி.

0

 இன்று பலவகை இயந்திரங்களை பயன்படுத்தியன்படுத்தி, வண்ண வண்ண துணிகள் உற்பத்தியாகின்றன. பட்டுப்பூச்சியின் உமிழ்நீரிலிருந்து பட்டாடை, செயற்கை இழைகளைக்கொண்டு பலவகை துணிகள் என நாகரிகமும், தொழில்வளர்ச்சியும் உச்சத்துக்கு சென்றுள்ளது.


ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், எந்தவிதமான இயந்திரங்களோ, தொழில் நுட்பங்களோ இல்லாத காலத்தில், மரங்கள் குச்சி, இரும்புத்துண்டுகள், திறந்தவெளி, கற்கள் ஆகிய இயற்கையில் கிடைத்தவற்றை மட்டுமே பயன்படுத்தி, தங்களது அறிவு மற்றும் திறமையால் துணிகள் நெய்து, நாகரிக உலகிற்கு நமது செங்குந்தர்  முன்னோர்கள் வழிகாட்டினார்கள்.


பல கிராமங்களில் திறந்தவெளியில், 120லிருந்து 50க்கும் மேற்பட்ட, நான்கு அடி உயரமுள்ள கற்கள் நடப்பட்டிருக்கும். இது கடந்த கால வரலாற்றின் நினைவுகளில் ஒன்றான 'பாவடி' ஆகும்.



பஞ்சும், திரிகட்டும்


பருத்தியிலிருந்து பஞ்சை எடுத்து, திரிகளாக்கினர்; 30 திரிகள் கொண்டது ஒரு கட்டு எனப்பட்டது. இந்த திரிகளை 'ராட்டை' என அழைக்கப்படும் மர இயந்திரத்தின் மூலம் நுாலாக மாற்றினார்கள். இந்த நுால் 'கதிர்கள்' என அழைக்கப்படும் ஒரு குச்சியில் சேமிக்கப்பட்டது. இதில் ஓரளவு நீளம் வரை தான் சுற்ற முடியும். நுால்கள் துண்டு துண்டாக இருக்கும். நீண்ட நுால்களைக்கொண்டு தான், துணிகள் நெய்ய முடியும். இதற்காக இந்த நுால்கள் நீண்டதாக மாற்றப்பட்டது.



போவனியும், பாவு ஜத்தமும்


ராட்டையில் சுற்றப்பட்ட நுால்கள் கதிர்களில் சேமிக்கப்பட்டு, பின் 'போவனி'க்கு மாற்றம் செய்யப்படும். நான்கு இன்ச் சுற்றளவுள்ள, ஒரு அடி நீளமுள்ள மரத்துண்டுகள் அல்லது நன்கு வளர்ந்த மூங்கில்களை துண்டுகளாக்கி இந்த உருளைக்கு 'போவனி' என பெயரிட்டனர். இந்த போவனியில் சுற்றப்பட்ட நுால்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்துக்கு நீட்ட முடியும்.


நெய்வதற்கு இன்னும் நீண்ட நுால்கள் தேவை என்பதால், இதற்கு அடுத்ததாக 'பாவுஜத்தம்' என்ற சக்கரத்தில் நுால்கள் சுற்றப்படும்.


பெரிய மரக்குச்சிகளை கொண்டு, மூன்று அடிக்கும் அதிக வட்டவடிவத்தில் ஆறு 'இன்ச்' அகலத்தில் இந்த பாவுஜத்தம் இருக்கும். துணிகள் நெய்ய பயன்படுத்தப்படும் நீண்ட நுால்களை இந்த பாவுஜத்தம் சேமிக்கிறது.



பாவடி


ஜத்தத்திலுள்ள நுால்கள் உத்தேசமாக, 40 மீட்டர் நீளத்தில், 4,000 இழைகள் (நுால்கள்) உள்ளதாக இருக்கும். இதை ஜத்தத்திலிருந்து வெளியே எடுத்து அடுத்த கட்டத்துக்கு தயார் செய்வார்கள். இந்த நுால்கட்டு 'பாவு' எனப்படும். பாவு கட்டு நுால்கள் இயற்கையான கெட்டித்தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால், இந்த கெட்டித்தன்மை துணிகள் நெய்ய போதுமானதாக இருக்காது.


இதற்காக இந்த நுால்களை கெட்டியாக்குவார்கள். இது தான் இந்த தொழிலின் முக்கியமானதாக குறிப்பிடப்படும் 'பாவுஓட்டுதல்'' ஆகும். திறந்த வெளியில் நான்கு அடி உயரத்துக்கு பல கற்கள் நட்டு, 4 மீட்டர் நீளமுள்ள பாவுநுால்களை இந்த கற்களில் இழுத்துக்கட்டுவார்கள். துவளாமல் இருக்க பாவுக்கு இடையில் குச்சிகளை வைத்து கட்டுவார்கள். காயவைப்பது போல் நீளமாக திறந்த வெளியில் பாவுகள் கட்டப்படும். பாவு நுாலின் மீது, அரிசிக்கஞ்சியை துணியில் நனைத்து பூசி இளவெயிலில் காய வைப்பார்கள். இந்த இடம் 'பாவடி' என அழைக்கப்பட்டது. பழமையான நெசவுத்தொழில் நடந்த கிராமங்களில் இந்த பாவடி முக்கிய இடம் பெற்றன.



பாவு ஓட்டுதல்


கஞ்சி பூசப்பட்ட பாவிலுள்ள, 4,000 க்கும் மேற்பட்ட நுால்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து விடாமல் இருக்க, பாவடியில் பாவு ஓட்டுதல் நடக்கும். மலைகளிலுள்ள குறிப்பிட்ட மரத்தின் வேர்களை துண்டித்து எடுப்பார்கள். ஆறு அடி நீளம் கொண்ட இந்த பெரிய வேரின் அடிப்பாகத்தில், நுன்னிய, மென்மையான வேர்கள் இருக்கும். இதை 'பாவுக்குச்சி' என குறிப்பிடுவார்கள்.


இந்த குச்சியைக்கொண்டு, பாவு நுால்களின் மீது சிறிது அழுத்தியபடி, பல முறை முன்னும் பின்னும் இழுத்து செல்வார்கள், நுன்னிய வேர்கள் நுால்களுக்குள் புகுந்து ஒன்றுடன் ஒன்று இணையாமல் பிரித்து கொடுக்கும், இந்த பக்குவத்தில் இளவெயில் காயும் நுால்கள் கெட்டித்தன்மை கூடி, தனித்தனியான நுாலாகி நெய்வதற்கு தயார் ஆகி விடும். இதை 'பாவுஓட்டுதல்' என அழைப்பார்கள். இதற்குபின், கைத்தறி நெசவுக்கு அனுப்பப்பட்டு, நெசவுக்குப்பின் துணிகளாகும்.


பாவடியும் கிராமமும்


பழமையான காலத்தில், பொதுவான ஒரு இடத்தை தேர்வு செய்து, பாவடி அமைப்பார்கள். இந்த பாவடி இந்த கிராமத்திலுள்ள நெசவாளர்களுக்கு உரிமையானதாக இருந்தது. காலை அல்லது மாலை நேரங்களில் கிராமபாவடிகளில் நெசவாளர்கள் பாவு ஓட்டுதலுக்காக கூடுவார்கள். இந்த நேரங்களில் கிராமப்பாடல்கள் பாடுவதும், சில வேடிக்கையில் ஈடுபடுவதும் கிராமங்களின் அழகை கூட்டுவதாக இருக்கும். மன்னர் காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் நெசவுத்தொழிலாளர்கள் ஒன்றாக நெய்ததும் உண்டு, இப்படிப்பட்ட இடத்தில் பல ஏக்கர் பரப்பளவில் பாவடிகள் இருந்தன.



மடத்துக்குளத்தில் பாவடிகள்


மடத்துக்குளம் பகுதியில் பழமையான கிராமங்களில் நெசவுத்தொழில் பூர்வீகமாக நடந்துள்ளது. காரத்தொழுவு, சோழமாதேவி, வேடபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த பாவடிகள் தற்போதும் உண்டு. புதிய தொழில் நுட்பங்கள், புதிய இயந்திரங்கள் வருகையால் பழமையான நெசவு முறை சற்று மறைந்து போனது. கைத்தறிகள் அழிந்து, பவர்லுாம், ஆட்டோலுாம் என புதிய முறையில் துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், கிராமங்களிலுள்ள 'பாவடிகள்' வரலாற்று நினைவுகளாகிப்போனது.


மடத்துக்குளம் பகுதியிலுள்ள நெசவாளர்கள் கூறுகையில், 'பாவடிகளில் குடும்பம், குடும்பமாக உழைத்ததும், கைத்தறியில் துணிகள் நெய்ததும் மறக்க முடியாத நினைவுகள்' என்றனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)