செங்குந்தர் கைக்கோளர் மரபினர்கள் பெரும்பான்மையாக வாழும் குடியாத்தம் நகரின் முன்னாள் நகர்மன்றத் தலைவர்.
இவர் குடியாத்தம் நகரில் வளர்ச்சிக்கும் அப்பகுதி செங்குந்தர் நெசவாளர்களின் வளர்ச்சிக்கும் உழைத்தவர் .
தொண்டை வளநாடு சான்றோருடைத்து" என்ற பொன்மொழிக்கேற்ப குடியேற்றம் நகரத்தில் தர்ம சிந்தனையாளர், முன்னாள் நகர மன்றத் தலைவர் M.A. கோவிந்தராஜ முதலியார், திருமதி இரத்தினம்மாள் |அவர்களின் தவப்புதல்வராக 1931-ம் ஆண்டில் | M.G. அமிர்தலிங்கம் பிறந்தார்.
சென்னை இலயோலா கல்லூரியில் பட்டப்படிப்பையும், சட்டக்கல்லுாரியில் சட்டக்கல்வியையும் பயின்று, அந்நாளில் வேலுாரில் பிரபல வழக்கறிஞர் ஊசூர் இரங்கசாமி அய்யங்காரிடம் ஜூனியர் ஆக பணியாற்றியதோடு தமது தந்தையார் நிறுவிய ஸ்ரீ இராஜேஸ்வரி நூற்பாலையில் சட்ட ஆலோசகராகவும் தமது இளமைக்கால வாழ்க்கையை ஆரம்பித்தார். 1956-ம் ஆண்டில் ஈரோட்டைச் சார்ந்த திருமதி சுலோச்சனா அம்மையார் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
தந்தையாரின் மறைவுக்குப் பின் 1964-ம் ஆண்டு நூற்பாலையின் நிர்வாக இயக்குனராக தமது 34-வது வயதில் பொறுப்பேற்று இறப்புவரை சுமார் 44 ஆண்டுகள் திறம்பட செயலாற்றினார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியான காரைக்காலில் நூற்பாலையை நிறுவினார். தமது தொழிற்சாலைகளில் செங்குந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்து சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தார்.
1969 ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை குடியேற்ற நகர மன்றத் தலைவராக விளங்கி பொற்கால ஆட்சியைத் தந்தவர். அவர் நகர மன்றத் தலைவராக இருந்தபோது 1974-ம் ஆண்டில் குடியேற்றம் நகரத்தில் வரலாறு காணாத தொடர் தீ விபத்து நடைபெற்றது. தீ விபத்தின் போது ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறி, நெசவாளர்களுக்குத் தேவையான நெசவுத் தொழில் உபகரணங்கள், மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கு சத்துள்ள உணவுப் பொருட்கள் வழங்கினார். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக மாநில அரசுடன் தொடர்பு கொண்டு நூல் மற்றும் கட்டுமானப் பொருட்களை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார்.
தீ விபத்தில் வீடிழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட ஏற்பாடுகள் செய்ததோடு, நகராட்சி மூலம் வீட்டு வரைபடங்களுக்கு வழிமுறைகளை தளர்த்தி அனுமதி வழங்கினார். மேலும், தமது பதவிக்காலத்தில் நகராட்சியில் நம் சமுதாய மக்கள் 100க்கும் அதிகமானவர்களுக்கு ஆசிரியப் பணி மற்றும் அலுவலகப்பணியை பெற்றுத் தந்தார். அவருடைய பதவிக்காலத்தில் 1972-ம் ஆண்டு நகர மன்றத்தின் 86-வது ஆண்டு விழாவில் அன்றைய மாநில ஆளுனர் மேதகு. K.K.ஷா அவர்களால்
நகரமன்றத்தில் "சேர்மன் M.G அமிர்தலிங்கம் ஹால்" திறந்து வைக்கப்பட்டது. அந்த அரங்கம் இன்றும் அவரது புகழை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. கல்வி அறக்கட்டளையின்
தலைவராகப் பொறுப்பேற்று சமுதாய மக்களுக்கு கல்வி உதவி, ஊக்கப்பரிசு, சீருடை, மருத்துவ உதவி போன்றவற்றை 22 ஆண்டுகளாக வழங்கி வந்தார். 1993-ம் ஆண்டு குடியேற்றம் நகரில் நடைபெற்ற தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநாடு சிறப்பாக நடைபெற பல்வேறு உதவிகளைச் செய்தார். குலகுரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் வெளிநாடுகள் சென்று திரும்பிய போது சிறப்பான வரவேற்பளித்து விழா எடுத்தார். நம் சமுதாய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர மன்ற தலைவர், உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடத்தி பெருமை சேர்த்தார்.
பல்வேறு கோயில் திருப்பணிகளைச் செய்தவர். படவேட்டு எல்லையம்மன் கோயிலுக்கு அறங்காவலர் குழுத்தலைவராக இருந்தபோது கோயிலின் சார்பில் திருமண மண்டபம் கட்டி அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் திறக்கச் செய்தார். மேலும், நகர அரிமா சங்கம் நிறுவன தலைவராக விளங்கி பல்வேறு தொண்டுகளைச் செய்தார்.
1991-ம் ஆண்டில் குடியேற்றம் நகரத்தில் நேஷனல் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி நிர்வாகப் பொறுப்பை ஏற்று சிறந்த கல்வி, ஒழுக்கம் என்ற குறிக்கோளுடன் பள்ளியை குறுகிய காலத்தில் மாவட்ட, மாநில அளவில் சிறந்த பள்ளியாக உருவாக்கிக் காட்டினார்.
மனித நேய பண்பாளர் மாமனிதர் அமரர் M.G. அமிர்தலிங்கம் அவர்கள் “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றிலின் தோன்றாமை நன்று"
என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப பெரு வாழ்வு வாழ்ந்து செங்குந்த சமுதாயத்துக்கும், குடியாத்தம் நகரத்துக்கும் பெருமை சேர்த்தார். அன்னாரின் புகழ் வாழ்க.