ஈரோடு K.K. பாலுசாமி முதலியார்

0

சாதனைச் செம்மல் K.K. பாலுசாமி முதலியார் 

நிறுவனர்: K.K. பாலுசாமி & கோ, ஈரோடு 

தலைவர் மற்றும் தாளாளர்:

ஈரோடு இந்து கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமரத்துப்பாளையம் 

ஈரோடு இந்து கல்வி நிலையம் நர்சரி & பிரைமரி பள்ளி, இடையன்காட்டு வலசு 

ஈரோடு இந்து கல்வி நிலையம் நர்சரி & பிரைமரி பள்ளி, சூரம்பட்டி.

இந்து இண்டர்நேஷனல் பள்ளி, வி.கே.வலசு, ஈரோடு 

செயலாளர் மற்றும் தாளாளர் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ரங்கம்பாளையம், ஈரோடு - 2 

டாக்டர் ஆர்.எ.என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு - 2 

EIT பாலிடெக்னிக் கல்லூரி, கவுந்தப்பாடி. 

காமாட்சியம்மன் ITI கவுந்தப்பாடி, 

முன்னவர், CKK அறக்கட்டளை ஈரோடு நிறுவனர், இளம் வணிகர் நலம்நாடும் சங்கம், ஈரோடு நிறுவனர், K.K.B அற நிறுவனம், ஈரோடு .


சாதனைச் செம்மல் வள்ளல் K.K. பாலுசாமி, K.K.B என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு. K.K.பாலுசாமி அவர்கள் ஈரோடு மாவட்டம் கோபி வட்டம், கணக்கம்பாளையம் என்னும் கிராமத்தில் சமுதாயப் பற்றாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத்தின் தலைவருமாக இருந்த செங்குந்த கைக்கோளர் மரபு ரங்கஜாலதாண்டா கோத்திரம் பங்காளிகளைச் சேர்ந்த பெரும் வணிகர் C.K. கந்தசாமி முதலியார் - குருவாயம்மாள் தம்பதியினரின் மகனாக 1944ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி பிறந்தார். 

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கோவை P.S.G கல்லூரியில்  படிப்பை நிறைவு செய்தார்.

திரு K.K. பாலுசாமி அவர்களின் துணைவியார் திருமதி விஜயா பாலுசாமி ஆவார். இவர்களின் திருமணம் 03.11.1968 அன்று  நடைபெற்றது. இவரின் துணைவியார் திருமதி விஜயா பாலுசாமி அவர்களும் இவர்களின் மகள் திருமதி மஞ்சுளா வித்யாசங்கர் அவர்களும், ஈரோடு இந்து கல்வி நிலையத்தின் துணைத்தலைவர்களாகவும் சிறப்புப் புரவலர்களாகவும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். 

அவரது மகன் திரு.B.அருண்குமார் பாலுசாமி அவர்கள் ஈரோடு இந்து கல்வி நிலையத்தின் பொருளாளராகவும், K.K.B & Co. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்.

வணிகமும் வழிகாட்டியும்

  கல்லூரிப் படிப்பிற்குப் பின் தன் தந்தை வழியில் துணி வணிகத்தில் ஈடுபட்டு, K.K.B & Co. என்ற நிறுவனத்தை நிறுவி லுங்கி வணிகத்தைத் தொடங்கினார். தன் தொழில் திறமையால் லுங்கி வியாபாரத்தில் தனிச் சிறப்பையும் மேன்மையும் பெற்றார். இதனால் ”கைலி கிங்” (Kaily King) என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்களால் அழைக்கப் பெறும் அளவிற்கு வியாபாரத்தில் தனிச்சிறப்புப் பெற்றார். தன்னைப் போல் மற்ற இளைஞர்களும் வியாபாரத்தில் உயர்வடைய வேண்டும் என்ற பரந்த நோக்குடன்  ”இளம் வணிகர்கள் நலம் நாடும் சங்கம்” என்ற அமைப்பைத் தொடங்கி  இதில் இணைத்துக் கொண்ட இளைஞர்களை வணிகத்தில் வளரச்செய்து பல தொழிலதிபர்களை உருவாக்கியுள்ளார். 

கல்விப் பணி

     கல்விப் பணியிலும் நாட்டம் கொண்ட திரு K.K. பாலுசாமி அவர்கள்  ஈரோடு இந்து கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைத் தொடங்கி அதன் தலைவராகவும் தாளாளராகவும் இருந்து வருகின்றார். திரு K.K. பாலுசாமி அவர்களின் சீரிய தலைமையினாலும் சிறந்த நிர்வாகத்தினாலும்  ”ஈரோடு இந்து கல்வி நிலையம்”  ஈரோடு மாவட்டம் மற்றும் மாநிலத்திலும் சிறந்த பள்ளியாகத் திகழ்ந்து வருகிறது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் உலக அளவில் பல்வேறு துறைகளில் பல சாதனைகள் புரிந்து வருகின்றனர்.          

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 50 வகுப்பறைகள், நுழைவுவாயில், தார்ச்சாலை அமைத்துக் கொடுத்தார். அக்கல்லூரியின் 45 ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்குப் பேராசிரியர் கவிஞர் தமிழன்பன் மற்றும் விஜய் டிவி ம.க.ப. ஆனந்த் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்தனர். ஈரோடு C.S.I மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 10 லட்சம் செலவில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராவும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார். ஆண்டுதோறும் சிவகிரியில் தியாகி திருப்பூர் குமரன் விழா சிறப்பாக நடைபெறுவதற்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து வருகிறார்.

2008 ஆம் ஆண்டு முதல் மாமரத்துப்பாளையத்தில் செயல்பட்டு வந்த Indu International School (IIS)  என்ற புதிய CBSE பள்ளியை 2012 ஆம் ஆண்டு முதல் இந்து கல்வி நிலைய டிரஸ்ட் மூலம் V.K. வலசு என்ற இடத்தில் 32 ஏக்கரில், 1,05,000 சதுர அடிப்பரப்பளவில் சர்வதேசத் தரத்துடன்  கட்டப்பட்ட பிரமாண்டக் கட்டிடத்தில் நடத்தி வருகிறார்.

ஈரோடு இந்து கல்வி நிலையத்தின் வெள்ளி விழாவினை 30.07.2010 அன்று மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இவ்விழாவில் புதுடெல்லி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் திரு s.சதாசிவம் அவர்களும்  கோவை  பாரதியார்  பல்கலைக்கழகத்  துணைவேந்தர்  முனைவர் திரு C.சுவாமிநாதன் அவர்களும் மற்ற முக்கிய பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.


அறப்பணி

         அறப்பணிகளில் நாட்டம் கொண்ட திரு K.K. பாலுசாமி அவர்கள் தன் தாயார் குருவாயம்மாள் நினைவாக K.K.B அறநிறுவனம் என்ற அமைப்பை நிறுவி திரு. சுகிசிவம் போன்ற சிறந்த முன்னணி பேச்சாளர்களால் பல ஆன்மிக சொற்பொழிவுகளை நிகழ்த்தி ஈரோடு மாநகரில் ஆன்மீகத்தை வளர்த்தவர்.

2006 ஆம் ஆண்டு முதல் K.K.B & Co.  வின் முன்னாள் ஊழியர்கள் சார்பாக 206 உறுப்பினர்களுடன் சமுதாய சேவைகள் செய்து வருகிறார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கான பரிசோதனைக் கருவிகள் வாங்குவதற்கு நன்கொடை வழங்கியுள்ளார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் சாதனைச்செம்மல்   திரு K.K. பாலுசாமி அவர்கள் சென்னையில் ”செங்குந்தர் மாளிகை” அமைப்பதற்கு நிதி ரூபாய்  1.25 லட்சம் வழங்கியுள்ளார்.

தமிழக அரசின் நிர்வாகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ஈரோடு முதலியார் கல்வி நிறுவன அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களை மீண்டும் முதலியார் கல்வி நிறுவன அறக்கட்டளை நிர்வகிக்கும் உரிமையைத் தமிழக அரசிடம் இருந்து மீட்டுத் தந்தமைக்கு கணக்கம்பாளையம் வாழ் ஊர் பொதுமக்கள் சார்பாக ”உரிமை மீட்பு செம்மல்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஈரோடு மாநகராட்சி மின்மயான திட்டமான ஆத்மாவிற்கு ரூபாய் 6 இலட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். 

தன் சொந்த ஊரான கணக்கம்பாளையத்தில் நடுநிலைப் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுத்துள்ளார். மேலும் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை  அமைத்துக் கொடுத்துள்ளார்.

ஆழ்வார். ஸ்ரீ ராமானுஜர் அவர்கள் கொங்கு நாட்டின் வழியாக மேல் கோட்டையூர் செல்லும் வழியில் கணக்கம்பாளையத்தில் தங்கிச் சென்ற வரலாற்றைப் பதிவு செய்யும் வண்ணம் ”உடையவர் சரித்திரம்” என்னும் நூலையும்  பவானி கூடுதுறை அருள்மிகு சங்கமேசுவரர் திருக்கோவிலை முதன்முதலில் திருப்பணி செய்த  “கெட்டி முதலியார் சரித்திரம்” என்னும் நூலையும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள “சிறு தெய்வங்களின் கோவில் வரலாறு” என்னும் நூலையும் முனைவர். திரு. வேதநாயகம் அவர்கள் தொகுத்து வெளியிடுவதற்குப் பொருளுதவி செய்துள்ளார்.

மேலும் பங்களாபுதூர் திருவள்ளுவர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் நடைபெறும் திருவள்ளுவர் இலக்கிய விழாவிற்கு நிதி உதவி செய்து வருகிறார்.


இறைப்பணி

ஈரோடு நகர் அருள்மிகு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலுக்குத் தொடர்ந்து அறங்காவலர் குழுத்தலைவராகத் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஈரோடு அருள்மிகு கஸ்தூரி ரங்கநாதர் கோயில் கோட்டை பெருமாள் கோயில் திருப்பணிக்குழுத்  தலைவராகப் பொறுப்பேற்று சுமார் 2 கோடி, ரூபாய் செலவில் ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டும் திருப்பணிகளைச் செய்து 30.08.2009 அன்று கும்பாபிஷேகம் செய்தார்.

பட்டமும் பதவியும்

 இவருடைய சமுதாயப் பணி, கல்விப்பணி, இலக்கியப்பணி ஆகியவைகளைப் பாராட்டி ஈரோடு நகர மக்களின் சார்பில் ”சாதனைச்செம்மல்” என்ற பட்டத்தை மறைந்த தொழில் அதிபர் ராணா K.V. லட்சுமணன் அவர்கள் வழங்கிப் பெருமைப் படுத்தினார்.   இளம் வணிகர் நலம் நாடும் சங்கத்தின் சார்பில் ”வணிகர் திலகம்” என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.  வர்த்தக மேம்பாட்டிற்காக அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். தன் சொந்த ஊரான கணக்கம்பாளையம் வாழ் மக்கள் பயன்பெறும் வகையில் தான் தலைவராக இருந்து காமாட்சி அம்மன் கோயிலும் C.K.K கலையரங்கம் என்ற பெயரில் திருமண மண்டபமும் கட்டிக் கொடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் ஈரோடு இந்து கல்வி நிறுவன அறக்கட்டளையின் சார்பாக மாணவ மாணவியருக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கல்வி ஊக்கத் தொகையாக 8 கோடியே 25 லட்சம் வழங்கியமைக்கு ஈரோடு மாநகர் பொதுமக்கள் சார்பாக ”மனிதநேயர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இமயங்களை இலக்குகளாகக் கொள்ளாமல் இதயங்களை இலக்குகளாகக் கொண்டவரான திரு K.K. பாலுசாமி அவர்களின் பொதுத்தொண்டினைப் பாராட்டி ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி தமிழ்ப்பேரவை சார்பாக ”வாழ்நாள் சாதனையாளர் விருது”  வழங்கி கெளரவிக்கப்பட்டார். 

தகவல் வெளியீடு: செங்குந்தர் வரலாறு மீட்பு குழு 

இவர் பற்றிய தகவல்கள் மேலும் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்ஸ்அப் எண்ணுககு அனுப்பவும் +91 78269 80901


இவரின் 

கோத்திரம் பெயர்: ரங்கஜால தாண்டா முதலிக் கூட்டம்

குலதெய்வம்: பழனி முருகன் மற்றும் கன்னிமார் கருப்பராயன்

குலகுரு: ஸ்ரீலஸ்ரீ இம்முடி பரஞ்சோதி குருக்கள் மடம்






 

 

Post a Comment

0Comments
Post a Comment (0)