காஞ்சீபுரம் சிதம்பர முனிவர

0

செங்குந்த கைக்கோளர் குலத்தை சேர்ந்த காஞ்சீபுரம் சிதம்பர முனிவர்



ஆன்மிகம் செழித்து வளர்ந்தோங்கிய காஞ்சியில், குமரக் கோட்டம் வாழ் ஆறுமுகப்பிரானை நாள்தோறும் சென்று வழிபடும் அடியவர்.இவரது தந்தை சிதம்பரம் மிகச் சிறந்த தமிழ்ப் பண்டிதர். தந்தையிடம் இளமையில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்தார் சிதம்பரம். அருணகிரிநாதரைத் தமது மானசிக குருவாகக் கொண்டு, அவர் அருளிய திருப்புகழை தினமும் ஓதித் திருவருள் இன்பத்தில் திளைத்து வந்தார். ஒருமுறை, சிதம்பரத்தின் உடலில் ஒரு கட்டி ஏற்பட்டது. பலவிதமான மருந்துகளை உபயோகிக்கும், உபாதை நீங்கவில்லை. நாளாக ஆக, வலியினால் அலறித் துடித்தார் சிதம்பரம். முருகப் பெருமானிடம் அழுது முறையிட்டார். பவரோக வைத்தியப் பெருமானே! பிறவிகள்தோறும் நோய்கள் எனை நலியாதபடி உன்திருவருள்கள் அருள்வாயே! என்று வேண்டினார். கச்சியில் வரம் அருளும் கந்தப்பெருமான், உச்சிமேல் கைகுவித்து வணங்கும் அடியாரை மெச்சி ஆட்கொள்ள விழைந்தார்.அக்கணமே கந்தக்கோட்டை சிவாச்சார்யர் ஒருவரது வடிவில் அங்கே வந்தார். வந்தவர் அன்பனே சிதம்பரம்! இப்போதே முத்தி மண்டபத்துக்கு விரைந்து வெல்வாயாக! என்று கட்டளையிட்டார் ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேட்கத் தோன்றாமல் உடனே காஞ்சிபுரம் சர்வ தீர்த்தக் கரையில் உள்ள முத்தி மண்டபத்துக்கு விரைந்தார் சிதம்பரம் ஆனால், அங்கே ஒருவரையும் காணவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் அங்கே அமர்ந்தார். குன்றுதோறும் அமர்ந்த பரம்பொருளை உள்ளம் குழைந்து கைகூப்பி, விழியில் நீர் மல்க தியானித்து மெய்மறந்திருந்தார் சிதம்பரம் அப்போது அங்கே தோன்றினார் முருகப் பெருமான். அன்று பாகு கனிமொழி மாதுவான வள்ளிக் குறமகளின் பாதம் வருடிய குமரன், இன்று அடியவர் சிதம்பரத்தின் உடலையும் தம் கரத்தால் வருடினார். அப்போது சிதம்பரத்துக்குள் சொல்லமுடியாத ஓர் இன்ப அதிர்ச்சி உண்டானது.அதேநேரம் அவரது நோய் உபாதையும் நீங்கியது. நெக்குருகிப் போன சிதம்பரம், தம்முடைய வினையை நீக்கித் தம்மை ஆட்கொண்ட கருணைமேரு கந்தவேளை சிந்தை குளிர்விக்கும் சந்தத் தமிழில் பாடத் தொடங்கினார்.

ஒளிர் வேலன் ஆறுமுகவன்

ஒருபரம் பொருள் எம்மை ஆள் அருணகிரிநாதர்

ஓதும் திருப்புகழ் எனும்

தாங்கார மணிமார்பன் அம்புவியில் ஒரு நூறு

தலமேவு குமரகுருவின்

தண்டை கிண்கிணி அணி சரணங்கள் புகழுநம்

தமிழ்மாலை தழைக வென்றே! அருணகிரிநாதர் ஓதும் திருப்புகழ் என்னும் பாமாலையை மார்பில் அணிந்தவன். சூரபத்மனை வென்ற பிரகாசிக்கும் வேலை உடைய ஆறுமுகன் ஆகிய பரம்பொருள் இப்புவியில் நூறு தலங்களில் அருளை வழங்கும் குமரகுருபரனின் தண்டையிலிருந்து வெளிப்படும் சப்த ஜாலங்களாகிய தமிழ் மாலையாம் இப்பிள்ளைத்தமிழ் சிறக்க வேண்டி காப்புச் செய்யுளைத் தொடங்குகிறேன். என்று துவங்கிய சிதம்பரத்தின் பாடல் மழை தொடர்ந்து கந்தவேள் மீது பொழிந்தது. முருகப்பெருமானுக்குப் பாமாலை சூட்டியவர். காசி மாநகரில் அருள்பாலிக்கும் விநாயகரின் திருவடிகளை முதலில் போற்றி இந்தப் பாமாலையை அவருக்கு அணிவித்து இன்புறுகிறார் இந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் சிதம்பர முனிவர் என்று அழைக்கப்படலானார். குழந்தைவேலனைத் துதித்துப் பலரும் பாடியுள்ள பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்களில் தனிச் சிறப்புடையது காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் அருளிய சுப்ரமணியக் கடவுள் ÷க்ஷத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் எனும் இந்தப் பாமாலை இதில் நூறு பாடல்கள் உள்ளன. நூறு தலங்களில் அருள்பாலிக்கும் முருகனைத் துதித்துப் புதுமையாகப் பாடப்பட்ட பாடல்கள் அவை. இவரது பிள்ளைத்தமிழின் காப்புப் பருவத்தின் முதல் பாடல் கயிலாயத்துக்கு உரியது. இதில், அவர் விஷ்ணுவைப் போற்றுவது குறிப்பிடத்தக்கது. சிவசக்தியானவள். போக காலத்தில் பவானியாகவும், கோப காலத்தில் காளியாகவும், போர்க் காலத்தில் மகாதுர்கையாகவும் விளங்குகிறாள். இந்தச் சக்தியே யோக நித்திரை கொள்ளும் ஹரி என்று சிதம்பர முனிவர் பாடியுள்ளது சுவாரஸ்யமானது. இவ்வாறு கயிலாயத்தில் தொடங்கி கேதாரத்தில் நிறைவு செய்கிறார். அதோடு தலங்கள்தோறும் நாம் இன்று மறந்துபோன பழைய வரலாறுகளையும் பதிவு செய்துள்ளார். போக்குவரத்து வசதிகளும் தகவல் பரிமாற்றச் சாதனங்களும் வளர்ச்சியற்றிருந்த அக்காலத்தில் பல்வேறு கோணங்களில் இருந்து தல விசேஷங்கள், புராணச் செய்திகள், அந்தத் தலத்துக்குத் தொர்புடைய அருளாளர்கள், முருகப்பெருமான் தமது அடியார்களுக்கு அருளிய திறம்-இப்படி முருகப்பெருமானைப் பற்றிய கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறது ÷க்ஷத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ். இதில் திருமுறைத் தலங்கள் 55-ம் திருப்புகழ்த் தலங்கள். 65-ம் இடம்பெறுகின்றன. பத்தாவது பருவமாகிய சிறுதேர் பருவத்தில் உள்ள 10 தலங்கள், பிற மாநிலங்களைச் சேர்நதவை என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரத்தில் உள்ள முத்தி மண்டபத்தில் முருகப்பெருமான் இவரை ஆட்கொண்டு இவரது நோயை நீக்கி அருள்புரிந்ததை கதிர் காமப் (செங்கீரைப் பருவம்) பாடலின் வாயிலாக நாம் அறிய முடிகிறது. அந்தப் பாடல்.... ஆணிப்பொன் முத்திமண் டபமேவு கச்சியினுள்

அடியேனை ஆண்டு கொண்டு என்

ஆகத்தில் வந்தபிணி தீர்த்திடவு முன்னிற்கும்

ஆறுமுக மெய்த் தெய்வமே! முருகப்பெருமான் குரு வடிவில் தமது கனவில் தோன்றி கருணையுடன் திருவடி தீட்சை அளித்த அருள் அனுபவத்தை திருவாதவூர் பாடலில் பாடி இன்புறுகிறார் சிதம்பர முனிவர். குமரக் கோட்டம் பாடலில், தனது கண்ணின் நடுவிலும், தேவர்களின் முடியிலும், முருகன் திருவடியிலும் நிற்கும் மயில் காட்சியை அடி-நடு-முடி என்று காட்டுகிறார். இறுதியாக, தேகம் விட்டு உன் சன்னிதிக்கு அடியனேன் வர சிறுதேர் உருட்டியருளே என்று கேதாரம் முருகனிடம் வேண்டி, நூறாவது பாடலை நிறைவு செய்கிறார். காஞ்சியில் முத்தி மண்டபத்தில் காட்சி கொடுத்த முருகப்பெருமானிடம் கேதாரத்தில் முக்தியை வேண்டுவது பொருத்தம்தானே? மொத்தத்தில் சுப்ரமணியக் கடவுள் ÷க்ஷத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ், காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் முருகனடியார்களுக்கு வழங்கியுள்ள பக்திப் பஞ்சாமிர்தம் என்றே சொல்லலாம்.


இந்நூலாசிரியராகிய காஞ்சீபுரம் -ஸ்ரீசிதம்பரமுனிவர் திராவிடமாபாடியகாரராகிய ஸ்ரீமாதவச் சிவஞானயோகிகள் மாணவர் பன்னிருவருள் ஒருவர். ஸ்ரீசுப்பிரமணியக் கடவுளிடத்தும், சுப்பிரமணிய பக்தர்களிடத்தும் அளவில்லாத பேரன்புடையவர். தமிழறி வுடன் வடமொழியறிவும் வாய்ந்தவர். இவர் திருவாவடுதுறையாதீனத்தைச் சேர்ந்தவராயினும் தருமபுரம், திருப்பனந்தாள் முதலிய திருமடத்துத் தலைவர்களிடம் உண்மையான அன்புடையவர் என்பதும் அங்கங்கே விளங்கிக் கிடக்கக் காணலாம். தருமையாதீனத்து ஞானகுரவர்கள் செய்த அற்புதச்செயல்களைப் பாராட்டுகிறார். காசிவாழும் சிவானந்த குமரகுருபரமுனி என வாயாரப் புகழ்கின்றார். சிலபல காரணங்களால் இவர் செங்குந்த மரபினர் என எண்ணப்படுகிறார். தலவரலாறுகளை நன்கு அறிந்து ஏற்றபடி அமைத்திருப்பது மிகச்சிறந்ததாகும். தலபுராணச் செய்திகளால் அறியக்கிடப்பன சிலவற்றையும் அமைத்துள்ளார். இப்பிள்ளைத்தமிழையன்றி இவர் காஞ்சி-காமாட்சியம்மை பிள்ளைத்தமிழொன்றும் செய்துள்ளார் என வரலாறு கூறும்.


இனி, தலவரலாற்றுள் விரித்தெழுதிய சில செய்திகளை இங்கே குறிப்பிடவில்லை. தெரிந்தவரையில் சிலபல தலங்களுக்கு விவரம் குறிக்கப்பட்டுள்ளது. சில நன்றாகத்தெரிந்து கொள்ள இயலாமையால் எழுதாமல் விடுபட்டன. அன்பர்கட்கு உபயோகமாகும் எனக்கருதித் திருப்புகழ் பெற்ற தலங்களின் அகராதியும் தலவரலாற்றுக் குறிப்பும் செய்யுள் முதற்குறிப்பகராதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தில் கட்டளையிட்டருளியபடி இச்சிறு நூலையும் அச்சிட்டு இருபதாவது குருமகாசந்நிதானம் நான்காவது குருபூசை விழாவில் இன்று வெளியிடலானேன். இப்போது இவ்வாதீன ஞானபீடத்து எழுந்தருளி விளங்கும் இருபத்தொன்றாவது குருமகாசந்நிதானம் திருப்பெயரும் தமிழ்த்தெய்வமாக விளங்கும் இப்பிள்ளைத்தமிழ்க்கு உரிய கடவுட் பெயரும் ஒன்றாக அமைந்தது யாவர்க்கும் இன்பஞ்செய்வதாம்; எளியேன் அத்தெய்வத்தை வாழ்த்துவதும் எங்கள் ஞானாசிரியரை வாழ்த்தி வணங்குவதும் பொருத்தமுடையதென்றே துணிந்தேன். பிழையுளதாயின் பொறுத்தருள்க.

இவர் எழுதிய ஒரு நூலின் மின் வடிவம்👇

Pdf பதிவிறக்க இணைப்பு: கிளிக்  செய்யவும்
டெஸ்க்டாப் காட்சியில் வைத்து பயன்படுத்தவும்





Post a Comment

0Comments
Post a Comment (0)