சோழர்கள் போர் தெய்வமாக வணங்கிய 7 பேழை சக்தி பீடம் கோவில்கள் செங்குந்தர் கைக்கோள முதலியார் களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது
சோழ மண்டலத்தின் ஏழு பேழை சக்தி கோவில்கள்
2. வீரமாகாளியம்மன் வாழ்மங்களம்
3. பத்ரகாளியம்மன் திருக்களாச்சேரி
4. வனபத்ரகாளி கோவில், காட்டுச்சேரியில்
5. வீரமாகாளியாகவும், குடவாசலில்,
6. வீரமாகாளியாகவும், மாரியம்மன் கோயில் வளாகம், புன்னைநல்லூர்.
7. பத்ரகாளியம்மன் கோவில், வலங்கைமானில்
யாவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள் பராசக்தி. அவள் உருவமாகியும் நிற்பாள். அருவமாகியும் அருள்வாள். வேப்பிலை யிலையாகி வெம்மை தணிப்பாள். சூலத்தினை உயர்த்தி உக்கிரம் காட்டுவாள். ஊழிக் காலத்தில் அனைத்தையும் உண்டு கிடப்பாள். கிடப்பவள் மீண்டும் சிலிர்த்து பிரபஞ்சமாக விரிவாள். கருணையில் தெய்வத் தாயாகிறாள். பாலையான பாலா என்கிற சேயாகிறாள். கோபக் கனலாகிச் சிவக்கும்போது காளியாகிறாள். யாதுமாகி நிற்கும்போது பராசக்தியாகிறாள். விண்ணாகி மண்ணாகி நிறைவாள்.
தாய்மை அவளின் இயல்பு. கருணை அவளின் சுபாவம். இப்பேற்பட்ட தயாபூரணி பூவுலகில் தன் இருப்பாக சில தலங்களில் தம்மை இருத்திக் கொள்கிறாள். சக்தியின் பேரூற்றாக ஆங்காங்கு பொங்கி சகல ஜீவன்களையும் நனைக்கிறாள். அவளின் அருள் வழிந்து ஆறாகப் பெருகி ஓடுகின்றது. பிரதேசத்திலிருந்து பிரதேசத்திற்கு தாவுகிறது. தன் அருளைப் பெறும் பாக்கியமுள்ளோர்களை அதுவே தேர்ந்தெடுக்கிறது. அவர்கள் கரங்களில் தானாக சென்று அமர்கிறது. பரம்பரை பரம்பரையாக உயிருக்குள் உயிராக பயணிக்கிறது. அந்த அக்னியை அணையாமல் ஒரு மரபினர் காத்து வருகின்றனர். அவர்கள், செங்குந்த கைக்கோள முதலியார் அன்பர்கள். அப்படி இவர்களால் போற்றிக் கொண்டாடப்படும் பராசக்தி பல தலங்களில் பேழைக்குள்ளிருந்தவாறே அருள்பாலிக்கிறாள்.
ஆம், பேழைக்குள் பராசக்தியாக ஏழு தலங்களில் பேரருள் பெருக்கி வீற்றிருக்கிறாள் அன்னை. இந்த ஏழு தலங்களும் செங்குந்த மரபினராலேயே பராமரிக்கப்படுகின்றன. இவள் எங்கிருந்து இங்கு வந்தாள்? பேழையே அவளது புகலிடம், ஏன்? இந்த விவரம் அறியுமுன் அந்த ஏழு தலங்களை அறிந்து கொள்வோம். திருமலைராயன் பட்டினத்தில் ஆயிரங்காளி யம்மனாகவும், வாழ்மங்களத்தில் வீரமாகாளியம்மனாகவும், திருக்களாச்சேரியில் பத்ரகாளியாகவும், காட்டுச்சேரியில் வனபத்ரகாளியாகவும், குடவாசலில் வீரமாகாளியாகவும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் வீரமாகாளியாகவும்,
வலங்கைமானில் பத்ரகாளியாகவும் திருப்பேழை எனும் பெட்டிக் காளியம்மனாக அருள்பாலிக்கிறாள். ஒரே நூலில் தொடுத்த பூக்கள்போல ஒரே மாதிரியான சரிதமும், தொடர்பும் இக்கோயில்களுக்கிடையே காணலாம். இந்த ஏழு கோயில்களிலும் பேழைதான் காளி என்ற வழிபடு தெய்வம்.
மூடிய பேழையைத்தான் எல்லோரும் வணங்கி வருவர். ஒன்று, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பேழையைத் திறந்து காளிக்கு உருவம் அமைத்து மாபெரும் உற்சவமாக, விழாவாக கொண்டாடி மீண்டும் காளியை பேழைக்குள் வைத்து விடுவர். சக்திக்கு உருவம் உண்டா? ஆமாம், அருவமும் அவளே. இதுவே பெட்டிக்குள் வைத்து மறைத்தல். அருவமானவள் உருவமாகி மீண்டும் அருவுருவாக பேழைக்குள் இருத்தலே அவளுடைய காம்பீர்யம். பேழையே அவளின் பீடம்.
அங்கிருந்தே பக்தர்களைக் காக்கிறாள். வளர்க்கிறாள். வளம் பெறவும் வைக்கிறாள். ‘‘தாயே மீண்டும் உருக்கொண்டு வா’’ என அழைக்கும்போது ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது ஒருசில ஆண்டுகளுக்கு ஒருமுறையோ காட்சி தருகிறாள். பிறகு, மீண்டும் பேழைக்குள் சென்று பக்தர்களுக்குப் பிரிவுத் துயர் தருகிறாள். தன் மீதான பக்தியை பெருக்க வேண்டி தாபத்தை கூட்டுகிறாள்; அதற்குப் பிறகு அருவ ஆட்சிதான். அவள் எப்படி வேண்டுமானாலும் இருப்பாள் என்ற தீர்மானமான பக்தியையே இதுபோன்ற வழிபாடுகள் வெளிப்படுத்துகின்றன.
இன்னொரு புறம் பார்த்தால் உடலுக்குள் உயிராக சக்தியான காளி திகழ்கிறாள். உடலே இங்கு பேழை. மாயை வயப்பட்டு இந்த உடல்தான் ஜீவனோ என்று நினைக்கும்போது உள்ளுக்குள்ளிருந்து பொங்கி எழுந்து ‘நானே உன்னை இயக்குகிறேன். நீயாக எதையும் செய்யவில்லை’ என்று குருவாகவும் போதிக்கிறாள். ‘உள்ளுக்குள் எது உடலை இயக்குகிறது என்பதைக் கவனி’ என்கிற வேதாந்தமும் உள்ளது. கடைசியில் ‘நீ என்னை புரிந்து கொள்ள முடியாது’. உடல், உயிர் அனைத்தும் நானே என அத்வைதமாகியும் நிற்கிறாள். மனதால் பிடிக்க முடியாத மகோன்னதமான சக்தி தான் என்று காட்டவே இப்படி விசித்திரக் கோலம் பூணுகிறாள். நமக்குப் பெரிதும் ஆச்சரியமூட்டும் தலங்கள் இவை. வாருங்கள் ஒவ்வொரு பேழைக் கோயிலாக தரிசிப்போம்.
திருமலைராயன்பட்டினம்
காவிரியின் கிளையாறே திருமலைராயன் ஆறு. மெல்ல நீண்டு நெளிந்து வங்கக் கடலருகே ஆடி அசைந்து சட்டென்று ஓடிச் சென்று ஒரே மூச்சில் கடலுடன் இணையும் தலமே திருமலைராயன்
பட்டினம். ‘அம்மையே’ என ஈசனால் அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் அவதரித்த காரைக்காலுக்கு அருகேயுள்ளது இந்தப் பட்டினம். திருமலைராயன் எனும் அரசன் முதலில் தஞ்சைப் பகுதியை ஆண்டு வந்தான். பின்னர், இந்தப் பட்டினத்திற்கு தன் தலைநகரை மாற்றிக் கொண்டான். அவன் உருவாக்கிய நகரமாதலால் திருமலைராயன்பட்டினம் என்றானது. இங்குதான் ஆயிரம் காளியம்மன் என்ற திருப்பெயரில் பேழைக்குள் பராசக்தி அருள்பாலிக்கிறாள்.
ஆயிரமாயிரம் புவனங்களை படைத்துக் காப்பவள் இத்தலத்திற்கு எப்படி எழுந்தருளினாள்?
பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில், வட நாட்டில் காளி வழிபாடு தழைத்தோங்கியிருந்த நேரமது. இன்றைய கொல்கத்தாவாக அது இருக்கலாம் என்பது அனுமானம். அங்கிருந்த அரசன் ஒருவன் காளியன்னையை நினைந்து தீவிர தவத்தில் ஆழ்ந்தான். காளியும் காட்சி கொடுத்தாள். ‘‘நான் ஒரு பெட்டியில் இருந்தபடி அருள்வேன். என்னை அனுதினமும் திறந்து அளவிலா நிவேதனங்களாக ஆயிரம் எண்ணிக்கையில் படைத்து வழிபட, மோட்சப்பேறு அளிப்பேன்’’ என்றாள்.
அரசனின் எதிரே அழகிய பேழையொன்று தோன்றியது. அதற்குள்ளாக அன்னையின் திருவடிகளும் வேலனுக்கு வேல் வழங்கிய திருக்கரங்களும், கருணைபொங்கு திருமுகமும் காட்சியளித்தன. மன்னன் பேழையை பூக்களால் அர்ச்சித்தான். அவளுடைய திருநாமங்களை நெஞ்சு நிறைய சொன்னான். ஆயிரம் ஆயிரமாக நிவேதனங்களை அன்னையின் திருமுன்பு பரப்பினான். பொங்கல் பானை என்றால் அதில் ஆயிரம். மாம்பழம் எனில் அதிலும் ஆயிரம் என்று ஆயிரங்களில் படைத்தான். இப்படியாக பல ஆண்டுகள் விமரிசையாக பூஜித் தான். ஒரு நாள் அன்னையே, இனி நீ பூஜித்தது போதுமென்றாள். வழிபாடு பூர்த்தியாகி விட்டதை தெரிவித்தாள்.
அந்த அரசனை ஆயிரங்காளி ஆட்கொண்டாள். ஆனால், அதற்கு முன்பு, ‘‘என்னை இந்த பேழைக்குள் வைத்து கடலில் விட்டுவிடு’’ என்று அருளாணையிட்டாள். அரசனும் அன்னை சொல்லைத் தட்டாது பேழையை வங்கக்கடலில் மிதக்க விட்டான். கடலளவு கருணை கொண்ட நாயகி வங்கக் கடலில் மிதந்தாள். திருமலைராயன்பட்டினத்தின் கிழக்கில் அமைந்த வங்கக்கடலில் மிதந்து கொண்டிருந்தாள். மீனவர்கள் வலை வீசினார்கள். ஆனால், வீசிய வலைக்குள் அகப்படாமல் நகர்ந்தது அந்தப் பேழை. பெருஞ்சக்தியொன்று பேழைக்குள் நிலைகொண்டிருப்பதைத் தெளிவாக அறிந்தனர். மூன்று நாட்களுக்குப் பணிவோடு கடற்கரையில் கைகட்டி, தவமிருப்பதுபோல காத்துக் கிடந்தனர். மூன்றாம் நாள் இரவு சிவநெறிச் செல்வராம் செங்குந்த முதலியார் மரபினரின் தலைவர் கனவில் தோன்றினாள்.
‘‘நான் மூன்று நாட்கள் கடலிலேயே இருந்து விட்டேன். நாளை காலை வந்து என்னை ஊருக்குள் அழைத்துச் சென்று ஓரிடத்தில் நிலைப்படுத்தி வையுங்கள்’’ என்றாள். செங்குந்தருக்கு கனவு கலைந்தது. விடிந்ததும் ஊருக்குள் சென்று அன்னையின் ஆணையை எடுத்துரைத்தார். ‘வாருங்கள் கடலுக்கு’ என்று அலை அலையாக மக்கள் கூட்டத்தை அழைத்துச் சென்றார். இவர் கைக்கூப்பியபடியே கடலருகே செல்லச் செல்ல, காளி அலை மீதேறி குழந்தை சறுக்கி வருவதுபோல வேகமாக கரையை நோக்கி வந்தாள். தரை தொடுவதற்கு முன்பு சிவநெறிச் செல்வர் பெட்டியை வாரி அணைத்துக் கொண்டார். பக்தர்கள் ஒன்று கூடி பேழையை மகிழ்ச்சி பொங்க தோளில் சுமந்தனர்.
மேள தாள மத்தளங்களோடு, சங்கும் முழங்க, மலர்களை மழையைப்போல் பொழிந்தபடி ராஜசோழீஸ்வரமுடையார் கீழ வீதி ஈசானிய பாகத்திலுள்ள மடத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தனர். குல தலைவர், பெட்டியிலிருந்து அம்மனை பீடத்தினில் எழுந்தருளச் செய்தார். ஓர் ஓலை இருப்பதையும் கண்ணுற்றார். அதை எடுத்துப் படித்தார்.
அருள்மிகு ஆயிரங் காளி அம்மன்
இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள்
அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும்
எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்
ஆண்டுகள் ஐந்திற் கொருமுறை
திண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம் பெறுகவே!
- என்று இருந்தது. ஊர் மக்கள் காளியின்
அன்பான ஆணையையும், கருணையோடு இப்படி தலத்திற்கு எழுந்தருளிய அற்புதத்தையும் எண்ணி எண்ணி உவகை கொண்டனர். வருடக் கணக்கில் பழகியவள் போலல்லவா இவள் இருக்கிறாள்!
எத்தனையோ ஜென்ம சம்பந்தம் இந்த மூன்று
நாட்களில் இத்தனை நெருக்கமாக இப்போது
பிடித்துக் கொண்டதே என்று உணர்ச்சிப் பிழம்
பாயினர். எல்லோர் கண்களிலிருந்தும் ஆனந்தம் கண்ணீராக வழிந்தது. சிலர் கண்கள் மூடி நின்றபடியே தியானத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு என்றுமில்லாமல் அன்று தியானம் கைகூடியிருந்தது! அன்னை தியானத்தை அளித்து விட்டாள் என்றே தோன்றியது. இன்று முதல் இவள் பேரன்னை.
இதோ இங்கிருக்கும் எல்லோரையும் பெற்ற அவளே பேழைக்குள் இருக்கிறாள் என்கிற மனோபாவம் வந்தது. அன்றே அன்னையை அலங்கரித்தனர். ஆயிரம் ஆயிரமாக பலவகைப் பழங்களையும்
பண்டங்களையும் நிவேதனமாகப் படைத்தனர். தொடர்ந்து பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்தபடி இருந்தனர். மீண்டும் பேழைக்குள் வைத்தனர். எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு என்று கணிக்க முடியாத இந்தக் கொண்டாட்டம் இன்று வரை தொடர்கிறது. ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வைகாசி மாதம் வளர்பிறை பட்சத்தில் திங்கட்கிழமை நல்ல ஹோரையில் இரவு பத்து மணிக்கு மேல் காளியம்மன் மடத்திற்கு அம்மனின் பெட்டியை திறப்பதற்காக அருளாளர் குழுவினர் செல்வார்கள். மக்கள் வெள்ளம்போல திரண்டு நிற்பர்.
அந்த அருளாளர் குழு ஒரு மண்டலம் இதற்காகவே விரதம் அனுஷ்டிப்பார்கள். கருவறைக்குள் புகும் முன்பு ஒரு வெள்ளிக் கடத்தினில் அன்னை ஆயிரங்காளியை எழுந்தருளச் செய்து பக்கத்திலுள்ள நடராஜர் சந்நதியில் அதனை வைத்திருப்பார்கள். காளியம்மன் பேழையிலிருந்து எழுந்தருளி தரிசனம் தரும்வரை அந்த கடத்திற்கு அடியவர்கள் வழிபாடு செய்வார்கள். விரதமிருக்கும் அருளாளர்கள் கர்ப்பக் கிரகத்திற்குள் பயபக்தியோடு நுழைவார்கள். அதற்குப் பிறகு அந்தச் சந்நதியின் சாந்நித்தியத்தில் தங்களையே மறப்பார்கள். ஏதோவொரு பெருஞ்சக்தி அவர்களை ஆட்கொள்ளும். இடையறது
சக்தியின் துடிப்பு எல்லோரையும் பிணைத்துக் கட்டும். வெளியிலிருந்து பார்க்க முடியாத வண்ணம் ஏழு திரைகள் போட்டு மறைத்திருப்பார்கள்.
உள்ளுக்குள் பேழையைத் திறக்கும்போது ‘கலீர்’ என்று அம்மனின் பாதச் சிலம்பொலி கேட்கும். அப்போது அவர்கள் விருட்டென்று சிலிர்த்துப் போவார்கள். பெட்டியைத் திறக்கும்போது வெளியில் அதிர் வேட்டுகள் வானத்தை அதிரச் செய்யும். பெட்டி யின் உள்ளே அன்னையைச் சுற்றிலும் சந்தனம் குவிந்திருக்கும். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்டிருந்த எலுமிச்சம் பழங்கள் வதங்காது பொன்னிறத்தில் தகதகக்கும் ஆச்சரியமும் நடக்கும். பேழையிலிருக்கும் அன்னையை வெளியில் எடுத்து பல மணி நேரம் அலங்கரிப்பார்கள்.
திருமுடி முதல் திருவடிவரை திரிபுரநாயகியாம் ஆயிரங்காளி நம்மீதுள்ள கருணையினால் தன்னுடைய பேருருவம் மறைத்து நம்மைப்போல் சிற்றுருவம் கொள்கிறாள். மலர்ப் பாதங்களில் சிலம்பும், வளைக்கரங்களும், பட்டாடையும் நெற்றியில் திலகமோடு அழகுத் திருமுகத்துடன் காளியன்னை வீர வடிவம் கொள்கிறாள். மாதுளம்பூ மேனி கொண்ட அம்மனின் கம்பீரமான தோற்றத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.
வீரகோலம் பூணுவதாலேயே வீரமாகாளி என்றழைக்கப்படுகிறாள். அன்னையின் அலங்காரம் நிறைவு பெற்றதும் ஆறு திரைகளை அகற்றி விடுவார்கள். இப்போது இருப்பது ஒரே ஒரு திரைதான்.
ஒவ்வொரு செங்குந்த குடும்பப் பெண்டிரும் காளியம்மன் மடத்திலிருந்து புதுப்பானையைப் பெற்று தங்கள் இல்லத்திலிருந்து பொங்கல் பொங்குவதற்குண்டான பொருட்களைக் கொண்டுவந்து மடத்தினில் பொங்கல் வைப்பார்கள். இதனிடையே அன்று மாலை ஆறு மணிக்கு அபிராமி உடனுறை ராஜசோளீஸ்வரர் திருக்கோயிலிலிருந்து காளியம்மனுக்கு வரும் சீர்வரிசையை பார்க்கக் காண கண்கோடி வேண்டும். அடுத்ததாக மாலைகள் ஆயிரம், கனிகள் ஆயிரம். தின்பண்டங்கள் ஆயிரம்.
வரிசைப் பொருட்களை சுமந்து வரும் ஊர்திகள் அலங்கரிக்கப்பட்டு நகர்ந்து கொண்டிருக்கும். வானத்திலிருந்து பார்க்க நீண்ட நெடிய ஆற்றில் நிவேதனங்கள் மிதந்து செல்வது போலிருக்கும். காளியம்மன் கோயிலை அடைந்ததும் சித்ரான்னங்கள் உள்ளிட்ட அனைத்தும் தேவியின் முன்பு சமர்ப்பிக்கப்படும். காளியன்னைக்கு படையல் போட்டு முடித்ததும் நடராஜரின் சந்நதியில் தரிசனத்திற்கு வைத்திருந்த வெள்ளிக் கடத்திலிருக்கும் தீர்த்தத்தால் அம்மனின் திருவடிக்கு அபிஷேகம் செய்வார்கள். சட்டென்று ஏழாவதாக மறைத்திருந்த திரையும் நீங்கும்.
திருமலைராயன்பட்டினமே வங்கக்கடலை அதிரச் செய்யும் அளவுக்கு பக்தி ஆரவாரம் செய்யும் ‘தாயே... மகாசக்தி... ஆதி சக்தி... பராசக்தி... ஓம் சக்தி’ என்று கண்களில் நீர் பொங்க அலறுவர். ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்த அம்மையின் பிரிவுத் துயர், அந்தத் தாபம் அழுகையாகவும், ஆனந்தமாகவும், வியந்தும் பக்தர்களிட மிருந்து வெளிப்படும். தீபாராதனை காட்டும்போது ஞானபூரணியின் முகம் கருணையால் ஒளிரும். பக்தர்கள் மெய்மறந்து கிடப்பர். அம்மையின் பூரண சாந்நித்தியத்தில் லயித்து விடுவர். இந்த ஜென்மம் பெற்றதின் காரணத்தை அந்தக் கணத்தில் உணராத பக்தர் அங்கே ஒருவரும் இருக்க மாட்டார்.
திங்கட்கிழமை தொடங்கும் நிகழ்ச்சி புதன், வியாழன் இரண்டு நாட்களும் தொடரும். இரவு பகலாக தொடர்ந்து லட்சக் கணக்கில் பக்தர்கள் அம்மையை தரிசித்தபடி இருப்பர். பிரசாதங்கள் நிவேதிக்கப்பட்டும்; தொடர்ந்து விநியோகமும் செய்யப்படும். அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்க்கும் அதிசயமும் அங்கே நிகழும். வெள்ளிக் கிழமை விடியற்காலையில் விரதமிருந்த அருளாளர்கள் மீண்டும் பேழைக்குள் அம்மனை வைத்து விடும்போது பக்தர்கள் பிரிவைத் தாங்காது கலங்குவார்கள். இன்னும் ஓர் ஐந்தாண்டா காத்திருக்க வேண்டும்! எங்களால் முடியாது தாயே என்று ஆற்றாமையோடு அழுவார்கள். சிலர் மூர்ச்சையடைவார்கள். ஆனால், அந்த ஐந்து நாட்களும் தமக்குள் என்ன நடந்தது என்று தெரியாதபடி பரவசத்துடனேயே இருப்பார்கள்.
இத்தனை வைபவமிக்க அன்னை ஆயிரமாயிரம் அற்புதங்களை இன்றளவும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள். தாய்-தந்தையர் கூட பார்த்துப் பார்த்து செய்வார்களோ இல்லையோ இத்தலத்திலுள்ள அன்னையின் திருவடி நிழலுக்கு அருகே வந்து விட்டாலே போதும். வேண்டுவனவற்றை வேண்டாமலேயே வாரியிறைத்து விடுகிறாள். ஊரின் மையத்திலேயே ஆலயத்தின் நுழைவாயில் வரவேற்கிறது. கோயிலைத் திருமடம் என்றே அழைக்கிறார்கள்.
குங்குமத்தின் சுகந்தம் நெஞ்சை நிறைக்கிறது. காளியன்னையின் பெருஞ்சக்தி, பேழைப் பீடத்திலிருந்து வெளிப்படுவதை உணரலாம். தன் முயற்சியற்று மனம் குவிந்து பேரமைதி நம்மை ஆட்கொள்கிறது. சக்தியின் பாய்ச்சல் அருவமாக நம்மைத் துளைத்தெடுத்துச் செல்வதை கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தால் புரிந்து கொள்ளலாம். வெள்ளிப் பேழையைப் பார்த்தால் அம்பாளின் தர்பார் போலுள்ளது.
அகிலத்தையே இப்படித்தான் ஆட்சி செய்வாளோ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. தேவார வைப்புத் தலத்தில் இத்தலம் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். இத்தலம் காரைக்காலுக்கு மிக அருகேயே உள்ள திருமலைராயன்பட்டினம் செல்வோம். காளியின் திருவடி பணிவோம். ஆலயத் தொடர்புக்கு: 9941245465, 9489856108.
வாழ்மங்கலம்
திருமலைராயன்பட்டினத்திற்கு அருகேயுள்ள கிராமங்களில் ஒன்று. பசுமை போர்த்திய கிராமத்தின் மையத்தில் வீரமாகாளியம்மனின் அழகிய சிற்றாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயமும் செங்குந்த மரபினராலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏழு தலங்களிலுமே ஆற்றோட்டமாகவோ அல்லது கடலில் மிதந்து வந்து செங்குந்த மரபினருக்கு கிடைக்கப்பெற்றோ அதையே
அவர்கள் கோயில்களில் அமைத்து பிரதிஷ்டை செய்ததாகவோதான் புராணம் சொல்லப்படுகிறது.
ஒரு மன்னன் ஏழு பேழைகளை காளியின் ஆணையினால் நீரோட்டத்தில் மிதக்க விட்டு அது வெவ்வேறு இடங்களில் கிடைத்தது என்றும், அவை பதினெட்டுப்பட்டி செங்குந்த மரபினரால் வழிபடப்பட்டு ஆங்காங்கு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றார்கள். சிறு கோயிலானாலும் நேர்த்தி யாக் கட்டப்பட்டிருக்கிறது கோயில். பொதுவாக பேழைக் கோயில்களில் ஓரிரு சந்நதிகள்தான் இருக்கும். வெள்ளிக் கவசத்தாலான பேழையை அலங்கரித்து வைத்து பூஜிக்கின்றனர்.
கோயிலுக்குள் நுழையும்போது அதுவரை பேரிரைச்சலாக இருந்த மனம் சட்டென்று அடங்கு கிறது. அம்மையின் அருளமுதம் நம்மை ஆதரவுடன் அரவணைக்கிறது. இந்த ஏழு தலத்திற்குள் வாழ்மங்கலத்தில் மட்டும் தான் வருடா வருடம் பேழையைத் திறந்து காளியன்னையை எடுத்து பூஜிக்கின்றனர். ஒவ்வொரு ஊருக்குமான செங்குந்தர் சமூகத்தைச் சார்ந்த நாட்டாமைக்காரர் இருப்பார்கள்.
இவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு தலத்திலும் நடைபெறும் பூஜையின்போது அழைப்பு விடப்படுகிறது. அதுதவிர பதினெட்டுப்பட்டி ஊர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது. அந்தந்த ஊர் நாட்டாமைக்காரர்களை வரவேற்று மரியாதை செய்து அன்னையை தரிசிக்கச் செய்து பிரசாதங்களோடு அனுப்புகின்றனர். இந்த நடைமுறை ஏழு ஆலயங்களிலுமே உண்டு. 2015ம் ஆண்டு தை மாதம் மூன்றாவது செவ்வாயன்று அடுத்த பூஜை நடைபெறுகிறது. திருமலைராயன்பட்டினத்திற்கு அருகேயே 4 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. திருமலைராயன் பட்டினத்தை
தரிசித்துவிட்டு, பிறகு இத்தலத்தை தரிசிக்கலாம்.ஆலயத் தொடர்புக்கு: 9942022320, 9442234772 .
காட்டுச்சேரி
திருமலைராயன்பட்டினத்திலிருந்து ஆரம்பித்து அடுத்தடுத்து இந்த ஏழு கோயில்களையும் தரிசிக்கலாம். வாழ்மங்கலத்துக்குப் பிறகு இப்போது காட்டுச்சேரி. காரைக்கால் வழியாக பொறையாரை அடைந்து அருகில் காட்டுச்சேரிக்குப் போகலாம். முன்னரே தொடர்பு கொண்டுவிட்டு (தொலைபேசி எண்: 9443193205) இக்கோயிலுக்குச் செல்வது நல்லது. வனபத்ரகாளியம்மன் கோயில் அல்லது பெட்டி காளியம்மன் கோயில் என்று கேட்டுச் செல்ல வேண்டும். கருவறையில் அழகிய பேழைக்குள் வனபத்ரகாளி அருள்பாலிக்கிறாள்.
காட்டுச்சேரி என ஊர் பெயராலேயே வனபத்ரகாளியாக அருள்கிறாளோ என்று தோன்றுகிறது. 2015ம் ஆண்டு வைகாசி மாதத்தில் பேழையிலிருந்து காளி எழுந்தருள்வாள். இந்த குறிப்பிட்ட நாளன்று நிகழும் பூஜை முறைகளும், சடங்குகளும், பிற பேழை பராசக்தி கோயில்களைப் போலதான்இருக்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பூஜையினாலேயே மிகவும் பிரபலமாக இந்தக் கோயில் விளங்குகிறது.
இந்த மாவட்டத்திலுள்ள அனைவருமே தரிசிக்கப் பேராவல் கொண்டுள்ளனர் என்பது அச்சமயம் (கடந்த 2010ம் ஆண்டு) குழுமும் பக்தர் வெள்ளத்திலிருந்து புரிகிறது. கோயிலுக்குள்ளேயே அஷ்டபுஜ காளி சிலையொன்றை காணலாம். தீச்சுடர்போன்ற கேசங்களும் கைகளில் ஆயுதங்க ளோடும் முகத்தில் சாந்தமும், கருணை யும் பூண்டு இந்தச் சிலை அமைந்துள்ளது. காட்டுச்சேரி வனபத்ரகாளியை தரிசித்து வற்றாத வளம் பெறுவோம்.
திருக்களாச்சேரி
ஈசன் அருளாட்சி பொழியும் தலங்களில் ஒன்று திருக்களாச்சேரி. கயிலையில் ஈசனின் சாபம் பெற்ற அம்பிகை திருக்குராமரமாக வடிவெடுத்து இத்தலத்திலுள்ள நாகநாதர் ஆலயத்தில் சிவபிரானை நினைந்து தவமிருந்து சாபவிமோசனம் பெற்றாள். திருக்குராச்சேரி என்பதே பின்னர் திருக்களாச்சேரி என்றானது. இத்தலம் காட்டுச்சேரிக்கு அருகேயே அமைந்துள்ளது. காவிரியின் கிளை நதியான வீரசோழன் தயவால் பச்சைப்பசேலென காட்சிதரும் அழகு கிராமத்தில் பத்ரகாளியம்மனாக அருள்கிறாள் அம்பிகை. கருவறையில் பித்தளைத் திருவாட்சியின் நடுவில் திருப்பேழையினுள் காளி கொலுவிருக்கிறாள். கருவறைக் கதவுகள் மற்றும் படிகளுக்கு அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட பித்தளைத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு முன்னே சிறிய அர்த்த மண்டபமும், அதனை
யொட்டிய பெரிய மகாமண்டபமும் உள்ளன.
கோயிலைச் சுற்றி மதிலுடன் கூடிய சுற்றுப் பிராகாரம் அழகூட்டுகிறது. துயரம் என்று வருவோரின் கண்ணீரைத் துடைக்கிறாள் அன்னை. வேண்டுவதை ஈடேற்றித் தருவதில் அசகாய வேகம்
கொண்டவள். அதனாலேயே வேண்டிச் சென்றவர்கள் உடனேயே வேண்டுதல் நிறைவேற்றப்பட்டுவிட, விரைவிலேயே அம்மன் சந்நதிக்கு வந்து நன்றிக் கண்ணீர் பெருக்குவதைக் காண முடிகிறது. இக்கோயிலில் அடுத்த பூஜை 2016ம் ஆண்டு நடைபெறும். கோயில் தொடர்பு தொலைபேசி எண்: 8056853416.
குடவாசல்
கும்பகோணம்-திருவாரூர் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது. கோயில் நாயகி, வீரமாகாளியம்மன். அழகிய வளைவோடு கோயில் வரவேற்கிறது. கோயிலின் வாயிலில், ஏழு தலங்களிலும் அருளும் காளியன்னையின் உருவங்களை ஓவியங்களாக வரைந்திருக்கின்றனர். 2013ம் வருடம் முந்தைய பூஜை நடைபெற்றது. அடுத்தது 2018ம் ஆண்டுதான். கருவறைக்குள் திருப்பேழைக்குள் காளியன்னை கம்பீரமாக அருள்பாலிக்கிறாள்.
சந்நதிக்குள் மக்களின் சிறந்த பிரார்த்தனை தலமாக இது விளங்குகிறது. இந்த ஏழு தலங்களிலும் ஒரேமாதிரியான பேழைதானே என்று நினைத்து விடக் கூடாது. வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் ஜீவன்களை உயர்த்துவதுதான் இந்த ஏழு ஆலயங்களின் ரகசியம் ஆகும். நமக்குள் இருக்கும் ரகசிய ஆன்மிக விழிப்புணர்வு ஒவ்வொரு தலமாகச் செல்லும்போது தானாக திறந்து கொள்ளும். இதை காளியின் ஏழு முக்கிய ஸ்தானங்கள் என்பதாகவே கொள்ள வேண்டும். இந்த ஏழு தலங்களிலுமே பக்தர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. மழலை வரம் முதல் மகத்தான சாதனைகள் புரிவது வரை அனைத்தையும் காளி அருள்கிறாள். கூடவே அகங்காரத்தையும் சேர்த்து அழிக்கிறாள். ஞானத் தாபத்தை கூட்டுகிறாள். கோயில் தொடர்புக்கு: 9789745160.
வலங்கைமான்
வலங்கைமான் என்றவுடன் பாடைகட்டி மாரியம்மன் ஆலயம்தான் நினைவுக்கு வரும். பொதுவாகவே ஈசன் இடக்கையில் மானும், வலக்கையில் மழுவையும் ஏந்தி காட்சி தருவார். ஆனால், இத்தலத்திலுள்ள சிவாலய உற்சவமூர்த்தியின் வலக்கையில் மான் இருப்பதாலேயே இவ்வூருக்கு வலங்கைமான் என்கிற பெயர் ஏற்பட்டது. கும்பகோணம்-மன்னார்குடி பாதையில் அமைந்துள்ளது. அருகேயே ஆலங்குடி குருத்தலம் உள்ளது. குடவாசல் காளியை தரிசித்து விட்டு இக்கோயிலை அடையலாம். நகரத்தின் மையத்தில் பேழைக் கோயிலில் பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறாள். குங்கும சந்தனத்தின் சுகந்தம் கோயிலை நிறைக்க அன்னையின் சாந்நித்தியம் நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது. கடும் வெயிலில் நடந்தவருக்கு குவளை நிறைய நீரும், குளிர் நிழலும் கிடைத்ததுபோன்று இந்தச்
சந்நதி ஆற்றுப்படுத்துகிறது.
சோழர் காலத்தில் கட்டப்பட்டது. புலிக் கொடி சின்னத்தை ஆலயத்திற்குள் காணலாம். செங்குந்த மரபினர் வீட்டிலேயே வைத்து பூஜித்து வந்து, பிறகு ஆலயம் அமைத்து காளியை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். சந்தன மரத்தாலான பெட்டிக்குள் அம்மன் எழுந்தருளியிருக்கிறாள். 2016ம் ஆண்டு வைகாசி இறுதி அல்லது ஆனி முதல் வாரத்தில் ஒரு
நன்னாளில் அடுத்த பூஜை நடைபெறும். பத்ரகாளியம்மனை பக்தியோடு வழிபட்டால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். கோயில் தொடர்புக்கு: 9884618806
மாரியம்மன்கோயில் (புன்னைநல்லூர்)
தஞ்சையிலிருந்து 9 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் செங்குந்தர் தெருவில், வீரமாகாளியம்மனின் கோயில்
அமைந்துள்ளது. 30.5.2014 அன்று காளிக்கு பூஜை நடைபெற்றது. ஆகவே அடுத்த பூஜை 2019ம் ஆண்டுதான். இந்த தலத்தின் இரு கண்கள்போல காளியன்னை ஆலயமும், மாரியம்மன்
ஆலயமும் திகழ்கின்றன. இரட்டிப்புச் சக்தியோடு இத்தலம் திகழ்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் என்றாலும், என்னென்ன கிரியைகள், சடங்குகள், பூஜை முறைகள் உள்ளனவோ அவை அனைத்தையும் அழகாக குறித்து வைத்துக் கொண்டு, சிறிதும் வழுவாது செய்கின்றனர்.
சமீபத்தில்தான் பூஜை முடிந்தது என்று தகவல் தந்த பக்தர்கள் கண்களில் நீர் கொப்பளிக்கிறது. அவர்களுக்கு இன்னும் அந்த பிரிவுத் தாபம் அடங்கவில்லை. வீரத்தையும் விவேகத்தையும் செல்வத்தையும் அளிக்கவல்ல தெய்வம் இவள் என்கின்றனர். ஏனெனில், செங்குந்தர்களே முருகப் பெருமானின் படைத்தளபதியான வீரவாகுவின் வழித்தோன்றல்கள்தான். வீரமாகாளியை பணிவோம். வேண்டும் வரங்களைப் பெறுவோம். கோயில் தொடர்புக்கு: 8056503101.
இந்த ஏழு தலங்களையும் பக்தர்கள் ஆடி மாதத்தில் வெறும் பேழை உருவாகவே தரிசித்தால் அதனுள்ளிருக்கும் அன்னை தன் அருள்வீச்சைப் பொழியத் தயங்கவே மாட்டாள். என்ன, நமக்கு தான், அன்னையை முழுமையாக தரிசிக்க இயலவில்லையே, இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே என்ற ஏக்கம்