மா. இளஞ்செழியன் (21-Oct-1925 - 1-Feb-2009) பேராசியர், தமிழ் அறிஞர், மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், சமூக சேவையாளர், பகுத்தறிவாளர் என அறியப்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இளஞ்செழியன் முதலியார் 1925 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் நாள் காஞ்சிபுரம் அருகாமையில் உள்ள பெருநகர் என்னும் ஊரில் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் காஞ்சி மணிமொழியார்exMLA, தாயார் - அபிராமி அம்மையார். அவர்களுக்கு மா. இளஞ்செழியன் முதல் குழந்தை ஆவார். 12-9-1951 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த சுந்தராம்பாளுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு உடன்பிறந்தோர், இளவல் மா. நடராசன், மற்றும் தங்கை மா. தமிழ்செல்வி. மா. இளஞ்செழியனின் அசல் பெயர் குமாரசாமி ஆகும். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக இடங்களில் இவருடைய பெயர் மா. குமாரசாமி என்று இருக்கும். பொது வாழ்வுக்காக அவராக தேர்ந்தெடுத்துக்கொண்ட பெயர் இளஞ்செழியன் ஆகும்.
கல்வி, பணிகளும் பொறுப்பும்
சென்னை முத்தையாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி (11வது) வகுப்பு வரை படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி. ஏ. [B.A.(Hons)] பொருளியல் துறையில் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லுரியில் 1952 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் நாள், பொருளியல் துறையில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 1964 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுரியில் பொருளியல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் தொண்டாற்றினார். 1975 ஜூலை மாதம் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி முதல்வராகப் பதவி உயர்வு பெற்றார். 1977ஆம் ஆண்டு மீண்டும் சென்னை பச்சையப்பன் கல்லுரியில் பேராசிரியராக இடம் மாற்றம் பெற்று வந்தார். 1982-1984 வரை சென்னையில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லுரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இளஞ்செழியன் கல்லூரி ஆசிரியராக 32 ஆண்டுகள் பணிபுரிந்தார். பல்வேறு வகுப்புகளுக்கு பொருளாதாரம் சார்ந்த பாடங்களை திறம்பட நடத்திவந்தார். ஆங்கிலத்தில் அருமையான முறையில் பொருளாதார விரிவுரைகளை ஆற்றுவார். தேவையான இடங்களில் உவமானங்களையும் பழமொழிகளையும் குட்டி கதைகளையும் பொருத்தமான முறையில் கையாளும் திறமை ஆகியவற்றின் விளைவாக, பொருளாதாரம் பாடங்களைக்கூட எழிலும் சுவையும் மிகுந்ததாக மாற்றி அமைத்து மறுவடிவம் கொடுத்தார். பல சமயங்களில் பிற வகுப்பு மாணவர்கள் இவருடைய வகுப்பின் வெளியே நின்று பாடங்களை ஆர்வத்துடன் கேட்பார்கள். ிட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியின் தேவை, சிறப்பு ஆகியவை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சி உருவாக்க பல கருத்தரங்குகள் நடத்தினார். காஞ்சிபுரம் கைத்தறி பட்டு நெசவாளர்கள் பற்றிய சமூகப் பொருளியல் ஆய்வு நடத்தினார் (Socio-Economic Survey of Handloom Silk Weavers of Kanchipuram). 1970 இல் காஞ்சிபுரத்தின் பட்டு கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் சமூகப் பொருளியல் நிலமைகள் எவ்வாறு இருந்தன என்பதை துல்லியமாக படம் பிடித்துக் காட்டும் அருமையான ஆய்வு கட்டுரையாக இருந்தது.
பத்திரிகையாளர் தொகு
1947 ஆகஸ்டு 16 ஆம் நாள் தொடங்கப்பட்டு 'இன்பத் திராவிடமே நமது இலட்சியம்' - 'சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு' என்ற குறிக்கோள்களுடன் வெளிவந்த "போர்வாள்" வார இதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றினார் . 1947 ஆகஸ்டு 16 முதல் ஆகஸ்டு 8, 1954 வரை ஏழு ஆண்டுகளும், சிறிய இடைவெளிக்கு பிறகு, ஜனவரி 5, 1957 முதல் மே 3, 1958 வரை ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தில் போர்வாள் இதழ் வெளிவந்தது .
எழுத்தாளர் அன்புப் பழம்நீயால் தொகுக்கப்பட்ட "கடிதக்கலை" என்னும் நூலில், 1947 இல் தந்தை பெரியார் இளஞ்செழியன் மற்றும் போர்வாள் பத்திரிகையை பாராட்டி எழுதிய நீண்ட கடிதமும், 1963 இல் சென்னை பச்சையப்பன் கல்லுரியில் பேராசிரியர் பணிக்கு இளஞ்செழியனுக்கு அறிஞர் அண்ணா எழுதிய பணிந்துரைக் கடிதமும் இடம் பெற்றுள்ளது. கடிதக் கலை பற்றி இளஞ்செழியன் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரையும் இந்த நூலில் உள்ளது.
இளஞ்செழியன், சிறு வயதிலிருந்தே இதழியல் துறையில் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார். ஏழாவது வகுப்பில் படிக்கும் போதே "மாணவர் மித்திரன்" என்னும் கையெழுத்து இதழை நடத்தி வந்தார்,. அவர் எழுதிய பல இலக்கிய கட்டுரைகள், 'செந்தமிழ் செல்வி', 'செங்குந்த மித்திரன்' முதலிய திங்கள் இதழ்களிலும், அரசியல் கட்டுரைகள் 'விடுதலை', 'பாரததேவி' முதலிய நாளிதழ்களிலும் வெளிவந்தன.
கல்லுரி மாணவராக பயிலும்போது இவர் எழுதிய கட்டுரைகள் "குடியரசு" மற்றும் "திராவிட நாடு" என்னும் இதழ்களில் இடம்பெற்றன. ஜூன் 25, 1944 அன்று "திராவிட நாடு" இதழில் இடம்பெற்ற "அவசரப்படுங்கள்-அவசரப்படுங்கள்" என்னும் கட்டுரை அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட ஒன்றாகும். இவரது "சேலத்து பாசறையில்" என்னும் அரசியல் கட்டுரை செப்டம்பர் 24, 1944 இல் திராவிட நாடு இதழில் வெளிவந்தது. இக்கட்டுரையில் அந்த ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற நீதிக் கட்சியின் மாநில மாநாட்டில், அக்கட்சியின் பெயர் "திராவிடர் கழகம்" என்று பெயர் மாற்றப்பட்டதும், திராவிடர் இயக்கத்தில் திருப்பு முனையாக அந்த மாநாடு அமைந்ததையும் அழுத்தந்திருத்தமாக எடுத்து விளக்கியது.
தந்தை காஞ்சி மணிமொழியார் அவருடன் இணைந்து "பகுத்தறிவு பாசறை" என்னும் பதிப்பகத்தை நடத்தினார். "குடி அரசு" இதழில் தந்தை பெரியார் "சித்திர புத்திரன்" என்னும் புனைபெயரில் எழுதிய உரையாடல்களையும், சிறு கதைகளையும் எழுதிவந்தார். அதிலிருந்து கட்டுரைகளைத் தொகுத்து தந்தை பெரியாரின் "சித்திர புத்திரன் எழுதுகிறார்" என்னும் நூல் இப்பதிப்பத்தால் வெளியிடப்பட்டது.
19-2-1948 அன்று சன்னாநல்லூர் என்னும் ஊரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை "புதியதோர் உலகு செய்வோம்" என்னும் பெயரில் பகுத்தறிவு பாசறை வாயிலாக வெளியிடப்பட்டது.
சமூக சேவை/சீர்திருத்தவாதி தொகு
நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய நான்கு இயக்கங்களின் கொள்கைகளில் முழு ஈடுபாடு கொண்டிருந்தார். சிறு வயதிலிருந்தே பொது தொண்டு புரியும் விருப்பம் இருந்தது. 1936 ஆம் ஆண்டில், ஏழாம் வகுப்பில் பயிலும் போது, "இளைஞர் ஒற்றுமை கழகம்" என்னும் அமைப்பை உட்படுத்தி, அதில் சென்னை முத்தையாலுப்பேட்டையில் இருந்த இளைஞர்களை திரட்டி, அவர்களிடம் தமிழ் ஆர்வத்தை வளரச் செய்தார். தமிழகத்தில் "மாணவர் மன்றம்" என்னும் அமைப்பை ஒரு இலக்கிய நிறுவனமாக வளர செய்த புலவர் மயிலை சிவமுத்து இளைஞர் ஒற்றுமை கழகதின் முதல் தலைவராக இருந்தார். வாரம்தோறும் தமிழ் பேராசிரியர் ஒருவரின் தலைமையில் இலக்கிய கூட்டம் நடைபெறும். அந்த பகுதி இளைஞர்களின் சொற்பொழிவு ஆற்றலும் வளர செய்தார். திரு. வி. க., பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார், டாக்டர். மா. இராசமாணிக்கனார் போன்ற அறிஞர்களை அழைத்து இலக்கிய சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது. "மாணவர் மித்ரன்" என்னும் கையெழுத்து பத்திரிகை ஒன்றை நடத்தி, அதன் வாயிலாக இவரும், மற்ற மாணவர்களும் பல கட்டுரைகளை வெளியிட்டனர். 1936-1942 வரையில் இந்த இயக்கத்தைச் நடத்திவந்தார். 1942 இல் இரண்டாம் உலகப் போர், இளைஞர் ஒற்றுமை கழகத்தைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.
1938 இல் சென்னையில், பெரியார் தலைமையில் நடை பெற்ற நீதிக் கட்சியின் மாநில மாநாட்டுக்கு சென்று வந்த பின், நீதிக் கட்சியை வளர்க்கும் பணியில் இறங்கினார். சென்னை பச்சையப்பன் கல்லூரி படிக்கும் போது "தமிழர் கழகம்" என்னும் கழகத்தைத் துவக்கி அதன் தலைவராக இருந்தார். அறிஞர்களை அழைத்து, கருத்தாழம் மிக்க சொற்பொழிவுகளை நிகழ்த்த வைத்தார்.
மா. இளஞ்செழியன், பேராசியர், தமிழ் அறிஞர், மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், சமூக சேவையாளர் என்ற பல திறனாளியாக இருந்தாலும், தன்னை சுயமரியாதைக்காரர் அல்லது பகுத்தறிவாளர் என்ற அடையாளம் வைத்துக்கொள்வதில் தான் மகிழ்ச்சி கொண்டார். பள்ளி மாணவனாக இருந்த போது, சென்னை பெத்தநாயக்கன் பேட்டையில் இயங்கிய சுயமரியாதை இளைஞர் மன்றக் (1934-1939) கூட்டங்களுக்கு சென்றார் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மதம், சாதி மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகராக வாழ்ந்தார். வடமொழி மந்திரங்களோ தேவையற்ற சடங்குகளோ இல்லாத பல சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். இவருடைய முதல் மேடைப்பேச்சு, திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற ஒரு சீர்திருத்தத் திருமணத்தில் நிகழ்ந்தது. ஒரு சுயமரியாதை திருமணம் பத்து சுயமரியாதைக் கூட்டங்களுக்குச் சமம் என்பது இவருடைய கருத்து. அவர் பேசிய பொதுக்கூட்டங்களில் பகுத்தறிவுக் கருத்துக்களை எடுத்து உரைத்தார்.
மேடைப்பேச்சாளர் தொகு
நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள் பலவற்றில் சொற்பொழிவாற்றியுள்ளார். இலக்கிய மன்றங்கள் பலவற்றின் பொங்கல் விழா, திருக்குறள் விழா, புத்தக வெளியீட்டு விழா, பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளின் ஆண்டு, தமிழ் மன்ற விழாக்களில் உரையாற்றியுள்ளார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் பல தலைவர்கள் பேசிய மேடையில், இவரும் சொற்பொழிவாற்றியுள்ளார்.
ழுதிய நூல்கள்
மா. இளஞ்செழியன் எழுதிய நூல்களின் பட்டியல் கீழ்வருமாறு:
தமிழ் நூல்கள் தொகு
"ஈரோட்டுப் பாதை", என்னும் நூல் தன்மான இயக்கம் பிறந்து வளர்ந்த கதையை சுருக்கமாக எடுத்துக்கூறும் நூல். 1947 இல் முதல் பதிப்பும், 1948இல் இரண்டாம் பதிப்புமாக வெளியிடப்பட்டது.
"தமிழன் தொடுத்த போர்", - 1938, 1939 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்கள் திரண்டெழுந்து கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக நடத்திய அறப் போராட்டத்தின் முழு வரலாறுதான் இந்த நூல். தந்தை பெரியார் இந்த புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
"அறிஞர் அண்ணாதுரை", என்னும் நூல் வேலூரில் உள்ள 'திராவிடன் பதிப்பகம்' என்னும் படிப்பகத்தில் 1949 இல் வெளியிடப்பட்டது.
"சரிந்த சாம்ராஜ்யம்", பகுத்தறிவு பாசறை பதிப்பகத்தில் 1950இல் முதல் பதிப்பாகவும், 1953இல் இரண்டாம் பதிப்பாகவும் வெளியிடப்பட்டது. மராட்டிய மன்னனாக திகழ்ந்த வீர சிவாஜி பற்றிய நூல்.
"இந்திய அரசியல் சட்டம்", மக்கள் மன்றம் என்னும் பதிப்பகத்தில் 1951இல் வெளியிடப்பட்டது.
"அஞ்சா நெஞ்சன் வால்டேர்", மக்கள் மன்றம் பதிப்பகம் 1956இல் வெளியிட்டது.
"தலையங்க இலக்கியம் ", வசந்தா பதிப்பகம் , முதல் பதிப்பு - 2009. போர்வாள் பத்திரிகையின் சிறப்பான 30 தலையங்கங்கள் அடங்கிய புத்தகம்.
"வாழ்க்கை பாதை", அலமு பதிப்பகம், 2004. தன் வரலாற்று நூல், இரண்டு தொகுதிகள்.
ஆங்கில நூல்கள் தொகு
O. Thanikachalam Chettiar - the Great Leader of Social Justice"- A Biography of O. Thanikachalam Chettiar who had served the Tamil people as a top ranking leader of the Justice Party) இது, அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்.
பேராசிரியர் நர்க்சால் (Professor Nurkse) இயற்றப்பட்ட நூலை ("Problems of Capital Formation in Under Developed Countries), "வளர்ச்சி குறைந்த நாடுகளின் முதலாக்கச் சிக்கல்கள்" என்னும் பெயர் படைத்த தமிழ் நூலாய் மொழியாக்கம் செய்தார்.
மா. இளஞ்செழியன் வாழ்க்கை சார்ந்து நூல்கள் வெளியிடப்பட்ட நூல்கள்
"ஒரு போர்வாளின் கதை" - நூல் ஆசிரியர் பேராசிரியர் இராம. வேணுகோபால்; பல்லவி பதிப்பகம், 2001
"இதழாளர் இளஞ்செழியன்" - நூல் ஆசிரியர் டாக்டர் தொ. சின்னபழனி; சௌபாக்கியம் பதிப்பகம், 2008
ஆய்வு தலைப்பு "திராவிட இயக்க வரலாற்றில் போர்வாள் இதழின் பங்கு". ஆராய்சியாளர் டாக்டர் தொ. சின்னபழனி, ஆய்வின் நெறியாளர் முனைவர் பேராசிரியர் பா. கந்தசாமி