பிரிட்டீஸ் காரர்களை மிரளவைத்த தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் 34 செங்குந்தர் கைக்கோள முதலியார்கள்
#வெள்ளையனே_வெளியேறு இயக்கத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் கிராமத்தின் செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் பங்கு மகத்தானது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தின் நினைவு தினம் (ஆக. 22) கடைபிடிக்கப்படும் நிலையில், கடலையூர் மக்களின் தியாகத்தை வெளியுலகம் அறிந்து கொள்ளும் வகையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய விடுதலை போராட் டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகவும் முக்கியமானது. 1942 ஜூலை மாதம் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான வழியைத் தொடங்கியது.
தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8-ம் தேதி மும்பையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பேசிய காந்தியடிகள் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகத்திலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பலர் தங்களை இணைத்துக் கொண்டு சிறை சென்றனர். கோவில்பட்டி அருகேயுள்ள கடலையூர் கிராமத் தில் 34 நெசவாளர்கள் #வெயிலுகந்த_முதலியார் தலைமையில் 1942 ஆகஸ்ட் 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் மீது ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் #சங்கரலிங்க_முதலியார் என்பவர் போராட்டக் களத்திலேயே பலியானார். ராமசாமி முதலியார், மாடசாமி முதலியார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பங்கேற்ற அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல் களுக்கு ஆளாக்கப்பட்டு சிறையில் கொலை செய்யப்பட்டனர்.
நினைவு ஸ்தூபி
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய கடலையூர் கிராமம் பெரிய அளவில் வெளி உலகத்துக்கு தெரியாமலே இருந்தது. தியாகி களின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் வழங்கியதோடு அரசும் நிறுத்திக் கொண்டது.
கிராம மக்களின் முயற்சி
இந்நிலையில் தங்கள் ஊர் மக்களின் தியாகத்தை போற்றும் வகையில் நினைவு ஸ்தூபி அமைக்க கடலையூர் மக்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கான நிதி அவர்களிடம் இல்லை. ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி தலைவர் ஜெ.சுத்தானந்தனை அணுகினர். அவரும் உதவ முன்வந்தார்.
இதையடுத்து கடலையூர் செங்குந்தர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நினைவு ஸ்தூபி கட்ட கடந்த 2007-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2008-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற 34 பேரின் பெயர்களும் அந்த ஸ்தூபியில் பொறிக்கப்பட்டன. போராட்டத்துக்கு தலைமை வகித்த வெயிலுகந்த முதலியார் திருவுருவப் படமும் வைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் அஞ்சலி
இந்த ஸ்தூபியை பராமரிக்கவும், ஆண்டுதோறும் நினைவு தினத்தை கடைபிடிக்கவும் கடலையூர் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இருப்பினும் தியாகிகள் நினைவு தினம் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை.
கடந்த ஆண்டு, முதல் முறையாக அரசு சார்பில் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவில்பட்டி சார் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இதன் மூலம் கடலையூர் மக்களின் தியாகம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியத் தொடங்கியது.
73-வது நினைவு தினம் (ஆக. 22) கடைபிடிக்கப்படுகிறது. இந்த வேளையில் கடலையூர் தியாகிகளை எதிர்கால தலை முறையினர் அறிந்து கொள்ளும் வகையில் கடலையூரில் அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பேரன் நெகிழ்ச்சி
கடலையூர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மாடசாமி முதலியாரின் மகன் வழி பேரனான சோ.வேல்முருகன் கூறும்போது, ‘எனது தாத்தா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. நான் சிறுவனாக இருக்கும்போது தாத்தா தனது அனுபவங்களை என்னிடம் நிறைய கூறியிருக்கிறார். 1983-ல் தான் அவர் இறந்தார். காயங்களோடு 3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் சாதி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். இதனால் ஊரை விட்டே அவரை விலக்கி வைத்திருந்தனர். கடலையூர் தியாகிகளை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் கடலையூரில் நினைவு மண்டபம் அமைத்தால் நன்றாக இருக்கும்’ என்றார் அவர்.
அரசு உதவுமா?
கடலையூர் சுதந்திர போராட்ட தியாகிகள் அறக்கட்டளையை தற்போது கவனித்து வரும் எம். ராமலிங்கம் கூறும்போது, ‘கடலையூரில் எங்கள் சொந்த ஏற்பாட்டில் நினைவு ஸ்தூபி அமைத்துள்ளோம். அவர்களது தியாகத்தை போற்றும் வகையிலும், எதிர்கால தலைமுறையினர் தியாகிகளின் வரலாற்றை தெரிந்து கொள்ளவும் அரசு சார்பில் கடலையூரில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். இக்கிராமத்தின் வளர்ச்சிக்கு அரசு உதவி செய்ய வேண்டும். நெசவு தொழில் நலிவடைந்ததால் பலர் ஊரை காலி செய்துவிட்டு வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். தியாகிகளின் வாரிசுகள் கூட சென்னை உள்ளிட்ட நகரங்களில் குடியேறிவிட்டனர். எனவே, கடலையூரின் மேம்பாட்டுக்கு அரசு சில திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்’ என்றார் அவர்.