செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் சம்பந்தப்பட்ட முக்கிய கல்வெட்டுகள்

0
1. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 7 வரிக் கல்வெட்டு.
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர / கேசரி பந்மற்கு யா / ண்டு 2 ஆவது சிங்க / ளாந்தக தெரிந்த கைய் / கோளரிற் முத்தி திருநா / [ரணன்] குடு[த்]த வாள் ஸ்ரீ க / ண்டம் கோத்த செ[ம்]முனை வாள்"  
 பொருள்:
  • தெரிந்த கைக்கோளர் – திறவாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கோளர், chosen or selected as skillful; ஸ்ரீகந்தம் – சந்தனம்; கோத்த – பதித்த; செம்முனை –செங்குறுதி தோய்ந்த முனை.
விளக்கம்:
  • முதற் பராந்தகன் மகன் அரிஞ்சயனின் 2 ஆம் ஆட்சி ஆண்டினதாக கருதப்படும் இக்கல்வெட்டில் பராந்தகனின் பெயரான சிங்களாந்தகன் என்ற பெயரினைத் தாங்கிய தேர்ந்தெடுத்த கைக்கோளப்படையைச் சேர்ந்த முத்தி திருநாரணன் என்பவன் சந்தனக் கைப்பிடியில் பதித்த குறுதிக்கறை படிந்த முனை உள்ள வாள் ஒன்றினை இறைவனுக்கு கொடுத்தார்.
  • சோழர்கள் முற்று முழுதாக கைக்கோள முதலியார்கலை மட்டுமே கொண்ட திறவாளராக பார்த்துத் தேர்வு செய்யப்பட்ட கைக்கோளப் படை ஒன்றை பேணினர் என்று இதனால் தெரிகின்றது.                                                 
ஆதாரம் (பார்வை நூல்):
தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 244 of 1907.


     2. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 6 வரிக் கல்வெட்டு.

     "ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர கேசரி பந்மற்கு யாண்டு 2 ஆவது திருவிடை மருதில்/
     ஸ்ரீமூலஸ்தாநத்தில் பெருமான்அடிகள் கோவிலில் பெரியமண்டபத்தில் முன்/
      பில் திருப்பலகணியும் திருக்கதவும் நிலையும் படியும் கைக்கோளப் பெரும்படை/
     யோமினால் சமைப்பித்து எங்கள் ஆச்சமார் திகைஆயிரத்தைஞ்ஞூற்றுவர் தம் /
      பேர் சாத்தினமையில் இந்த தர்மம் திகைஆயிரத்துஅஞ்ஞூற்றுவர் ரக்ஷை./
     இந்த தர்மத்தினை ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் எங்கள் ஸிரத்தின்."

பொருள்:

  • பெருமானடிகள் – வேந்தர், இறைவன்; பலகணி - சன்னல்; சமைப்பித்து – உருவாக்கி; ஆச்சமார் – ஆசான்கள், ஆசிரியர்கள்; சாத்தின - சூட்டிய          
விளக்கம்: 
  • முதலாம் இராசேந்திரச் சோழனின் 2 ஆம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1014) திருவிடைமருதூர் மூலவர் அமைந்த கருவறைப் பெரியமண்டபத்தின் முன்புறத்தில் சன்னலும், கதவும், வாயில் நிலையும், படியும் கைக்கோளப் படையினர் ஏற்படுத்தி அதற்கு தமது சண்டைப் பயிற்சி ஆசான்களான திசைஆயிரத்துஐநூற்றுவர் பெயரை வைத்து கொடுத்தனர். 
  • இதனால் இத்தருமத்தை திசை ஆயிரத்து ஐநூற்றுவர் தான் காத்திடவேண்டும். இத்தருமத்தை காத்தவர் பாதம் எங்கள் தலைமேல் படுவதாக என்று கல்வெட்டி உள்ளனர் செங்குந்தகைக்கோளர்.
  • திசைஆயிரத்து ஐநூற்றுவ வணிகர் தம் பாதுகாப்பிற்கென்று தனிப் படை வைத்திருந்தனர் போலும்.
  • அதில் இருந்த திறம்மிக்க பயிற்சியாளர்கள் இக் கைக்கோளப் படைக்கும் பயிற்சி தந்துள்ளனர் என்று தெரிகின்றது. ஆச்சமார் பன்மைச் சொல் என்பதை நோக்கி இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்.        ஆதாரம் (பார்வை நூல்): தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 253 of 1907.

Post a Comment

0Comments
Post a Comment (0)