P.V.நடராஜ முதலியார்

0




 தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் முதல் தலைவர் திரு. பி.வி.நடராஜ முதலியார், பி.ஏ., பி,எல்.,

சென்னை இந்து மத அறநிலையத்துறை ஆணையர்.

ண்ணக்களஞ்சியம் காஞ்சிபுரம் நாகலிங்க முதலியார் அவர்கள் மயிலாப்பூரில் அக்கவுண்டண்ட் ஆபீஸில் கண்காணிப்பாளராக இருந்த கா.வேலு முதலியார் உதவியுடன் 1912ஆம் ஆண்டு டிசம்பர் 30ல் காஞ்சிபுரம் கச்சபேசர் ஆலய மண்டபத்தில் செங்குந்தர்கள் கூட்டம் ஒன்றை கூட்டினார். அக்கூட்டத்தில் செங்குந்தர் சங்கம் ஒன்று நிறுவப்பட்டு, அதற்கு காஞ்சிபுரம் உயர்திரு. ம.த.சாமிநாத முதலியார் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காஞ்சி நாகலிங்க முதலியார் 1921ல் ஆரம்பித்து நடத்தி வந்த "செங்குந்தன்" எனும் வார இதழிலும், 1927ல் "செங்குந்தமித்திரன்” மாத இதழிலும் அவரும் திருவாளர்கள் தி.நா.சபாபதி முதலியாரும், எஸ்.பி.சிங்காரவேலு முதலியார் பி.ஏ.,எல்.டி., அவர்களும் எழுதிய கட்டுரைகளின் பயனாகவும், மேலும் அவர்களின் பெருமுயற்சியாலும், காஞ்சிபுரம், திருவாரூர், மஞ்சக்கொல்லை முதலிய ஊர்களைச் சேர்ந்த செங்குந்தர்கள் பலரின் சிறப்பு ஏற்பாட்டின் பேரிலும் 29.4.1927ல் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சென்னை கோவிந்தப்ப நாயக்கன் வீதியில் உள்ள "சௌந்தர்ய மஹால்" என்னும் மண்டபத்தில் தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த சுமார் 200 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் “தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்" தோன்றியது.

அக்கூட்டத்திற்கு மயிலாப்பூர் பிங்கர் பிரிண்ட் மேனேஜர் திரு. எஸ்.குழந்தைவேலு அவர்கள் தலைமை பூண்டார்கள். திரு, தி.நா.சபாபதி முதலியார் அவர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், கிளைச் சங்கங்கள் தொடங்குவது பற்றியும், பத்திரிக்கைகள், பிரசாரங்கள் என்னும் சாதனங்கள் மூலம் முன்னேறுவதற்கான வழிமுறைகளை இனிது எடுத்து விளக்கினார். திரு. ம.சண்முகசுந்தர முதலியார் அவர்கள் செங்குந்த மக்கள் முன்னேறுவதற்கான வழிகளை விளக்கி அரியதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் பின்னர் சங்க அலுவல் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தில்லை சிதம்பர ரகசியம் என்னுமிடத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலையை நெடு நாட்களாக நெய்து கொடுத்து வந்த குடும்பத்தின் குலமகன்தான் நம் குலச்சங்கத்தின் முதல் தலைவர் திரு. P.V.நடராஜ முதலியார் அவர்கள் ஆவார்.

திரு. P.V.நடராஜ முதலியார் அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரி டிரஸ்ட் போர்டில் ஒரு உறுப்பினர். சென்னை கார்ப்பரேஷனில் ஒரு கவுன்சிலராகவும் இருந்துள்ளார். அதன் மூலம் சிறந்த கல்வித் தொண்டும், மக்கட் தொண்டும் செய்துள்ளார். கிண்டியில் உள்ள ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் செலக்ஷன் கமிட்டியில் ஒரு உறுப்பினர் ஆக இருந்துள்ளார். அந்தக்காலத்தில் இராயபுரம் மணியகார் சத்திரத்தின் டிரஸ்டியாக இருந்துள்ளார். ஜஸ்டிஸ் பார்ட்டியில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார். கட்சி தேர்தல், மாநகராட்சி தேர்தல் வந்தால் அவர் வீடு ஒரு சத்திரம் போல் ஆகிவிடும். அவற்றிற்கான செலவுகள் எல்லாம் அவரது சொந்த செலவே, கல்விக்காக அவர் சிறந்த சேவை செய்துள்ளார். 29-4-1927 முதல் 19-1-1929 வரை தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவராக இருந்த போது அரசு அலுவலர்களை எல்லாம் சந்தித்து, பெரும்பணி ஆற்றியுள்ளார். இவர் 1938ல் இறைவனடி சேர்ந்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)