பாண்டியர் இரண்டாம் மாறவர்மன் (திரிபுவன சக்கரவத்தி வீரபாண்டியன்) 10 ஆவது ஆட்சி ஆண்டு ( பொயு 1350 ) கிரந்தம் கலந்த தமிழ் கல்வெட்டு, ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து ஆற்றூர் நாட்டு ஆற்றூர் என்கிற இராஜராஜநல்லூர் ஊரில் உள்ள திருமுத்தீசுர முடைய நாயனார் கோயிலில் புரட்டாதி மாதத்தில் ஒன்பது கைக்கோளர்கள் 44 பணம் பெற்றுக்கொண்டு தங்கள் உபயமாக நடத்தி வந்தனர். திருக்காரொளி நாள் திருவிழாவினை எடுத்தான் என்கிற காலிங்கராயன் என்பவனும், இரண்டாம் திருநாள் சிற்றம்பலவன் என்பவனும், மூன்றாம் திருநாள் பெருமாள் என்கிற தொண்டைமண்டலக் காங்கேயன் என்பவனும், நான்காம் திருநாள் வத்தராயன் மகள் முதலிச்சி என்பவளும், ஐந்தாம் திருநாள் அறமளத்தான் என்கிற கண்டியதேவன் என்பவனும், ஆறாம் திருநாள் திருநட்டப்பெருமாள், ஏழாந் திருநாள் வல்லானை வென்றான் என்பவனும், எட்டாம் திருநாள் பாசன் என்பவனும், ஒன்பதாம் திருநாள் காவன் தொண்டைமான் என்பவனும் ஒன்பது திருநாள்களையும் நடத்தி வந்துள்ளனர். இக்கோயில் காணியுடைய சிவபிராமணர்கள் 175 பணம் பெற்றுக்கொண்டு, இந்த ஆண்டு புரட்டாசி மாதம் முதல் ஒன்பது நாள் திருவிழாவினைத் தாங்களே நடத்துவதாக உறுதியளித்துள்ளனர் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது. - காஞ்சிபுர மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி - 5 புத்தகத்தில் இது உள்ளது |