சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டுபாண்டிய நாட்டில் அகத்தியருக்கு அம்பாசமுத்திரம்,கல்லிடைக் குறிச்சி, பாபநாசம், சிந்தாமணி முதலிய பல ஊர்களில்கோயில்கள் கட்டப்பெற்றுள்ளன. அகத்தியரைத் தவிர வேறு எந்த முனிவர்களுக்கும் சிறந்த கோயில்களைக் காண்பது தமிழகத்தில் அரிது. அவ்வாறுள்ள அகத்தியர் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அம்பாசமுத்திரத்தில் உள்ள கோயில் ஆகும்.
இந்நூலில் அகத்தியர் இமவானிடம் பெண் கேட்டல், சிவபிரான் திருமணம், வடபால் தாழ்ந்து தென்பால் உயரல், அகத்தியர் தென்பால் ஏகல், தாம்பிரவர்ணி,காவிரி நதிகளை அழைத்துவரல், விந்தம் அடக்கல், வில்வலன் வாதாபியை அழித்தல், காவிரி விடுத்தல், குற்றாலத்தைச் சிவத்தலமாக்கல், தாம்பிரவர்ணி விடுத்தல், சிவசைலம், பாபநாசத்தலங்களுக்குச் சென்றுபெருமானைத் தரிசித்தல், ஊர்க்காடு சென்று மணல் இலிங்கம் செய்து கோட்டி யப்பர்என வழிபடல், பின் திருச்செந்தூர் சென்று வழி பட்டு, தமிழ் முதலியன உபதேசம் பெறல், திருநெல்வேலி, திருப்புடைமருதூர், அத்தியாழ நல்லூர், தளச்சேரி முதலிய தலங்களைத் தரிசித்தல், பின்னர் அம்பாசமுத்திரம்வந்து காசிபேச்சுரரை வணங்கி பங்குனி மாதம் எட்டாம் திருநாள் அன்று திருமணக்கோலக் காட்சி காணல், திருமூல நாதரை வழிபடல், அம்பாசமுத்திரத்திலுள்ள செங்குந்தர் வீதியில் ஒரு புளியமரத்தினடியி லெழுந்தருளி பசிக்குணவு கேட்டல், உணவு கொண்டுவருவதற்கு முன் சுவடுபடாமல் மறைந்தருளல், பின் செங்குந்தர்கள் துதிக்க, ஆண்டுதோறும் பங்குனி 28- ஆம் நாளில் நடக்கும்எட்டாம் திருவிழாவில் அவர்கள் இடும் அன்னத்தில் பிரம்படியும் கால் சுவடும் காட்டி அருள்பாலிப்பதாகக் கூறுதல், பிரபோதன் என்னும் பிராமணனுக்குப் பொதியமலையில் ருள்பாலித்தல், பின்னர் அம்பையில் செங்குந்தர்களுக்கு அருள்பாலிக்கத் திருக்கோயில் கொண்டெழுந்தருளல், பங்குனித் திருவிழாவில் 21 திருமஞ்சனக்குடம் செங்குந்தர் கள் கொண்டுவரல்,அன்னம் சொரிதல், அவ்வன்னத்தில் அகத்தியரின் திருவிளையாட்டாய பிரம்படி, கால்சுவடு காட்டல், செங்குந்தர்களுக்கு அருள்பாலித்தல் முதலிய பல செய்திகள் காணப்படுகின் றன.
இச்செங்குந்தர்கள் புலிமதிராஜன் என்ற பாண்டியனால் வரவழைக்கப்பட்டு இவ்வூரிலுள்ள கோயில்களைக் கண் காணிக்க அமர்த்தப்பட்டார்கள் என்றும் தெரிகின்றது. முற்காலத்துப் பல கோயில் பரிபாலனங்களை நடத்திய அம்பைச் செங்குந்தர்கள் காலாகாலத்தில் ஒவ்வொன்றாய் நழுவ விட்டுவிட்டனர். தற்பொழுது இவ்வகத்தியர் கோயில், சங்சரன் கோயில் ஆகிய இரண்டினை மட்டும் பரிபாலித்து வருகின்றனர். இந்நூல் அகத்தியர் திருவிளை யாடல், தமிழ்ச்சிறப்பு, செங்குந்தர் பக்திப்பெருமை முதலியவைகளைத் தம்பால் கொண்டிலங்குகிறது.