புலவர் மாமணி.
திருஞான சம்பந்த முதலியார் அவர்கள்- வாழ்க்கை வரலாறு!* ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
செங்குந்த கைக்கோளர் குலத்தவரின் தலைநாடாகிய காஞ்சியின், தென்மேற்குப் பகுதியில் உள்ள பிள்ளையார் பாளையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சைவத்திற்கும் , தமிழிற்கும் , காலமெல்லாம் அருந்தொண்டு ஆற்றியவர் - பெருந்தகை , புலவர் மாமணி . திருஞான சம்பந்த முதலியார் அவர்கள் மட்டுமே !
சைவ நெறி, செங்குந்தர் குலம் ,செய்யாறு எனும் திருவோத்தூரில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியைக் குலதெய்வமாகக் கொண்டு -
வழி, வழியாக
சைவ நெறியை பின்பற்றும் குடும்பத்தில்
வீராசாமி முதலியார் ,அங்கமுத்து அம்மாள் தம்பதியருக்கு,
1899 - ம் ஆண்டு, திருஞான சம்பந்த முதலியார் அவர்கள் நன்மகனாகப் பிறந்தார்.
இளமையில் , திண்ணை பள்ளியில் கல்வியைத் தொடங்கி காலத்தில் தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றார்.
திருஞான சம்பந்த முதலியார், வடிவாம்பிகை அம்மையாரை மணந்து , முறையே , காமாட்சி அம்மாள் ,சரசுவதி அம்மாள் ,மெய்கண்டநாதன் ,
சிவகாமி அம்மாள்,திலகவதி அம்மாள் ,
அருள்நந்தி சிவம் ,உமாபதி சிவம் , தமிழரசி அம்மாள், தணிகைவேல் எனும் மறைஞான சம்பந்தர் ஆகியவர்களைப் பெற்று ,நன்முறையில் வளர்த்து , வாழச் செய்தார்கள்.
திருஞான சம்பந்தனார் அவர்கள் தன் ஆண் பிள்ளைகளுக்கு சந்தான குரவர்கள் பெயரையும் , பெண் பிள்ளைகளுக்கு இறைவி பெயரையும் சூட்டினார்.
பேரப் பிள்ளைகளுக்கும் இறைவன் , இறைவி பெயரையே சூட்டினார்.
தன் பேரப் பிள்ளைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் திருமுறை பதிகங்களை கற்றுக் கொடுப்பார்.
நாள்தொறும் சிவபூசை புரிந்த சிவ பக்தர்.
தினமும் , அதிகாலையில் சிவ பூசை முடித்த பின்னர்தான் பிற செயல்களைத் தொடங்குவார்.
வெளியூர் யாத்திரையின் போதும் சிவலிங்க திருமேனியை தன்னுடன் வைத்திருப்பார்.
யாத்திரையிலும் சிவ பூசை செய்வார்.
இவர் இளமையிலேயே சைவ பணியை தொடங்கினார்.செய்யாறு இல்லத்தில் 63 - நாயன்மார்களையும் சுவற்றில் ஓவியமாக வரைந்து, அவர்களின் குரு பூசையன்று திருமுறை விண்ணப்பம் செய்து, சிவனடியார்களுக்கு அன்னம் பாலிப்பு செய்வார்.மேலும் இல்லத்தில் வேல் வழிபாடு செய்தார்.
கானாடு காத்தானில் தேவார பாடசாலையில் திருமுறை கற்றார். பிறகு,தேவகோட்டையில் செட்டியார் குடும்பத்தினருக்கு தமிழாசிரியராகவும் , திருமுறை ஆசிரியராகவும் பணியாற்றினார். மேலும் , அவர்களுக்கு சமய தீட்சை அளித்து சிவ பூசை செய்யவும் கற்றுக் கொடுத்தார்.
அதன்பின் ,
காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியைத் தொடங்கி , தமிழ் மொழியுடன் சைவ கருத்துக்களையும் ,திருக்குறள் நெறியும் மாணவர்கட்கும் பயிற்றுவித்தார்.
மேலும் ,தலைமை தமிழ் ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
இந்த கால கட்டத்தில் பல தமிழ் புலவர்களையும் , அறிஞர் பெருமக்களையும் உருவாக்கினார்.
இவருடைய மாணவரில் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர்
அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் திரு.கா.ந.அண்ணாதுரை அவர்கள்.
திரு.அண்ணாதுரை அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் ,கட்சி மாநாட்டில் பங்கேற்க பிள்ளையார் பாளையம் வந்தபோது , தமிழாசிரியர் இல்லத்திற்கு வந்தார்.அப்போது , தமிழாசிரியரை முதலில் நாற்காலியில் அமரச்செய்து , பின்பு தான் அமர்ந்து உரையாடினார்.
திருஞானசம்பந்தர் அவர்கள் தன் மாணவர்களை நெற்றியில் திருநீறு அல்லது திருமண் அணிந்து கொண்டு பள்ளிக்கு வரச்செய்வார்.
மதுரை ஆதீனம் திருஞானசம்பந்தர் அவர்களுக்கு "புலவர் மாமணி " பட்டம் வழங்கினார்.
1926 - ஆம் ஆண்டு, காஞ்சிபுரத்தில் "மெய்கண்டார் கழகம் " தொடங்கி , செயலராக பணி வகித்தார்.
தமிழையும் , சைவ நெறியையும் தழைக்க வைப்பதை தன் கொள்கையாகக் கொண்டார். அமைப்புகள் தோன்றாத காலத்தில் , தனியொருவராக நின்று , தமிழையும் , சைவ நெறியையும் தழைக்க வைத்தார்.
திருஞானசம்பந்தருக்கு சிவஞான போதம் முழுமையும் மனப்பாடம் ஆகியிருந்தது.
அதனால் மெய்கண்டார் கழக வார வழிபாட்டில் தன் உடன் வரும் சிவனாடியார்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களைப் பாராயணம் செய்ய வைத்து , மனப்பாடம் செய்ய வைப்பார்.
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயத்திற்கும் , ஞாயிற்றுக் கிழமைகளில் , வாரம் ஒரு கோயிலாக , உழவாரப் பணி செய்து, சிவஞான போதம் பாராயணம் செய்வார்.
பின் வாரம் ஒரு தலைப்பில் , கோயில் தல வரலாறு சொற்பொழிவு செய்வார்கள்.
வருகை தந்த புலவரை சொற்பொழிவு ஆற்றச் செய்வார்.
நாயன்மார்கள் வரலாறு ,
சந்தானம் குரவர் வரலாறு ,
சிவஞான போத விளக்க உரை, சர்வதீர்த்த படலம் ,வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவவீரர்கள் வரலாறு ,
அருணகிரிநாதர்,மாதவ சிவஞான சுவாமிகள் , கச்சியப்ப முனிவர் வரலாறு முதலிய பல சமய அருளாளர்களின் வரலாற்றை சொற்பொழிவு ஆற்றுவார்.
திருக்குறளை மேற்கோள் காட்டி,அதில் உள்ள சைவ சித்தாந்த கருத்துக்களை எடுத்துரைப்பார்.
ஆண்டிற்கு ஒரு முறை ஓதுவாமூர்த்திகள் , அடியார் பெருமக்களுடன் திருமுறை விண்ணப்பம் செய்தவாறு ,
சர்வதீர்த்தக் குளக்கரையில் புறப்பட்டு, காஞ்சி மாநகரை வலம் வந்து இறுதியாக, அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வந்து நகர்வலத்தை நிறைவு செய்வார்.
1930- லிருந்து , காஞ்சிபுரத்தில் திருமுறை விண்ணப்பம் செய்து ,திருமணம் , 60 -ஆம் ஆண்டு திருமணம் ,( சஷ்டியர்த்த பூர்த்தி ), 80-ஆம் ஆண்டு திருமணம் ( சதாபிஷேகம் ), புதுமனை புகுவிழா ஆகியவற்றை நடத்தினார்.
அடியார் பெருமக்களுடன் வட நாட்டு புனித யாத்திரை மேற்கொண்டார்.இதில் காசி யாத்திரை , 12-சோதிர் லிங்க வழிபாடு உள்ளடங்கும். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் போது ,2- அல்லது 3- நாட்கள் சொற்பொழிவு செய்வார்.
வள்ளல்- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.இருவரும் ஒன்றாக வழிபாடு செய்து சொற்பொழிவு ஆற்றுவார்கள்.அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் சொற்பொழிவு செய்வார்.திருவிழா நிறைவடைந்த மறுதினம் கோயில் யானை மீது, பன்னிரு திருமுறை நூல்களை வைத்து பூசை செய்து , திருமுறை நூல்களுக்கு வெண்சாமரம் வீசியபடி நான்கு ராசவீதிகளில் திருமுறை பாராயணம் செய்து கொண்டு அடியார்களுடன் வலம் வருவார்கள்.
கார்த்திகை மாதம் அனைத்து சோமவாரமும் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலய 1008 -லிங்கத்திற்கு ( சகஸ்ர லிங்கம் ), மெய்கண்டார் கழகம் சார்பாக திருமஞ்சனம் செய்வார்கள்.
மேலும் ,63 -நாயன்மார்களுக்கும் , சந்தான குரவர்களுக்கும் அவரவர் குருபூசையன்று திருமஞ்சனம் செய்து வழிபட்டனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தை , இவர் காலம் உள்ளவரை நிர்வகித்தார். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரம் அன்று மெய்கண்டாருக்கு திருமஞ்சனம் செய்து,சிவஞான போதம் பாராயணம் செய்வார்.ஐப்பசி சுவாதியன்று சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்து,சிவஞான போதம் பாராயணம் மற்றும் அதற்கு விளக்க உரையும் அளிப்பார்.மார்கழி திருவாதிரை திருநாளன்று மடத்தில் உள்ள மெய்கண்டார் , ஏகாம்பரநாதர் , மாதவ சிவஞான முனிவர்,கச்சியப்ப முனிவர் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து ,திருமுறை விண்ணப்பம் , சொற்பொழிவு செய்து , திருவமுதாக திருவாதிரை களி வழங்குவார்.
அன்று இல்லத்தில் நடராசர், சிவகாமியம்மைக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தியன்று , இவரே இல்லத்தில் களிமண்ணால் விநாயகரை செய்து , சிறப்பு பூசை செய்வார்.
கந்த சஷ்டியன்று திருப்புகழ் பாராயணம் செய்து , சிறப்பு வழிபாடு செய்வார்.
ஐப்பசி மாதம் முதல் நாள் பாலாற்றில் நீராடி ,ஆற்று மணலில் சிவலிங்கம் செய்து பூசை செய்வார்.இதற்கு முதல் முழுக்கு என்று பெயர்.இதே போல் , ஐப்பசி 30- ஆம் நாள் கடை முழுக்கு பூசை செய்வார்.இப்பூசைக்கு பிறகு , பாலாற்றின் கரையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் சொற்பொழிவு செய்வார்.
காமாட்சி அம்மன் ஆலயத்திலும் , வரதராச பெருமாள் ஆலயத்தில் உள்ள விநாயகர் சன்னதியிலும் , மெய்கண்டார் கழகம் சார்பாக வழிபாடு மற்றும் சொற்பொழிவு நடைபெறும்.
மேலும் , தொண்டை நாட்டில் உள்ள பல சிவன் ஆலயங்களில் அடியார்களுடன் வழிபாடு செய்தார்.வாரம் ஒரு புலவர் அறிமுகம் செய்து அப்புலவரைக் கொண்டு,
அக்கோயில் வரலாற்றைப் பேச வைப்பார்.
சைவ சித்தாந்திலும்,
காஞ்சி சிவாலயத்தின் வரலாற்றிலும் அடியவர்கள் தங்களுக்கு எழும் சந்தேகத்தை காஞ்சி மகா பெரியவரிடம் கேட்பார்கள்.
அவர், திருஞானசம்பந்தர் அவர்களிடம் தங்கள் சந்தேகத்திற்கு விளக்கம் பெற அனுப்பி வைப்பார். திருஞானசம்பந்தர் அவர்கள் அடியார்களின் சந்தேகத்தை தீர்த்து வைப்பார்.
கீழ்கதிர்பூரில் ஒரு சிவனடியார் தன் வீட்டில் , பசுவின் சாணத்தால் திருநீறு தயார் செய்வார்.திருஞானசம்பந்தர் அவர்கள் அந்த திருநீற்றை வாங்கி ஆலயங்களுக்கு வழங்குவார்.
மெய்கண்டார் கழகம் சார்பாக திருமுறை சாத்திரங்கள், திருஞானசம்பந்தர் திருநாட்சிறப்பு ,காஞ்சிப் புராணம் , திருத்தொண்டர் திருநட்சத்திரம் , திருப்பள்ளியெழுச்சி ,திருவெம்பாவை ,சைவசந்தானாசாரியர் புராணம் ,
சிவஞானபோதம் ,கச்சியேகம்பர் ஆனந்தகளிப்பு ,
சேக்கிழார் தோத்திரதிரட்டு ,பாராயணச் சிவஞானபோதம்,
ஏகாம்பரநாதர் தோத்திரம், திருமண நூல் ,
உண்மைநெறி விளக்க ஆராய்ச்சியுரை ,
சிவநெறி விளக்கம்,
திருவக்கரைத் தேவாரம்,
சித்தாந்தவுந்தியார் ,
கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம் ,சிவபரத்துவிளக்கம் , திரு அச்சிறுபாக்கத் தேவாரம் ,வசிட்டேசர் வழிபாடு மலர் என 46 -வார வழிபாட்டுத் தோத்திர, சாத்திரங்கள் முதலிய நூல்களை வெளியிட்டனர் .
திருஞானசம்பந்தர் அவர்கள் 1977 -ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் இறைவன் திருவடியை அடைந்தார்.
"தேவாரம் ,உழவாரம் இதுவே நம் வாழ்வின் ஆதாரம் " என்பதை பின்பற்றி திருமுறை ,
திருநெறி பாராயணம் ,
ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பேச்சுப்பணி, திருமுறை ,
திருநெறி விளக்க உரை உள்ளிட்ட எழுத்துப்பணி, உழவாரப்பணி முதலியவற்றை தானும் செய்து மற்ற அடியார் பெருமக்களையும் செய்ய வைத்தார்.
"தமிழ்ச் சைவ நெறிகளின் தலைமைச் தொண்டர்"-
என்ற சிறப்பு பெயர் பெற்றவர் ! சைவமும் தமிழும் தழைத்தினி தோங்குக ! -திருச்சிற்றம்பலம் - ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கட்டுரை ஆக்கம் :-புலவர் மாமணி.
திருஞானசம்பந்த முதலியார் - குடும்பத்தினர்.