செங்குந்தர் வண்டிமலைச்சி அம்மன் வரலாறு

0

தென்தமிழ்நாடு பாண்டியமன்டலம் (தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி) மாவட்டங்களில் செங்குந்த கைக்கோளர் சமூகத்தவர் பெண் தெய்வமாக வழிபடும் வண்டிமலைச்சி அம்மன் கோவில்கள்   குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.






வண்டிமலைச்சி அம்மன் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வழிபாட்டில் உள்ள நாட்டுப்புறத் தெய்வம். கைக்கோள முதலியார் இனத்தின் தெய்வமாகக் கருதப்படுகிறாள். படுத்த கோலத்தில் இருக்கும் சிலை பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். வண்டிமலைச்சி அம்மன் சாலை காவல் தெய்வமாக கருதப்படுகிறாள். பெரும்பாலும் முச்சந்திகள் உள்ள இடத்தில் வண்டிமலையச்சி, வண்டிமலையனுடன் படுத்த கோலத்தில் இருப்பாள்.

ஏழு அண்ணன் கதை

வண்டிமலைச்சி ஏழு சகோதரர்களுக்கு இளையவள். வண்டி மலையன் மீது காதல் கொண்டாள். ஏழு அண்ணன்களும் அவள் காதலுக்கு மறுப்பு சொல்லவே கோபம் கொண்ட வண்டிமலைச்சி வீட்டை விட்டுச் சென்றாள்.


வண்டிமலைச்சி வீட்டை விட்டுச் சென்றதும் வண்டிமலையனும் உடன் சேர்ந்து கொண்டான். இருவரும் சிறிது தூரம் சென்றதும் பசி பொறுக்க முடியாமல் தவித்தனர். இவர்கள் பசியைக் கண்ட நெசவு செய்யும் கைக்கோள முதலியார்கள் பசைக்கஞ்சி கொடுத்தனர். அவர்களிடம் பசியாறிச் சென்ற இருவரையும் ஏழு அண்ணன்மார்களும் தேடிக் கொன்றனர்.


பலியான இடத்தில் இருந்து வஞ்சினம் கொண்டு கிளம்பிச் சென்ற வண்டிமலைச்சி ஏழு அண்ணன்களையும் பழிவாங்கி, அவர்கள் குருதி குடித்து பின்னர் அடங்கினாள். அங்கிருந்து திரும்பி தன் பசியைப் போக்கிய முதலியார் வீட்டின் முன் காவல் தெய்வமாக அமர்ந்து அவர்கள் குறைகளைப் போக்கினாள்.


அண்ணன் தங்கை

வண்டி மலையனையும், வண்டி மலையச்சியையும் அண்ணன் தங்கை எனச் சொல்லும் கதையும் உண்டு. பஞ்ச காலத்தில் தாய், தந்தையை இழந்த அண்ணன் தங்கை உணவு தேடி சென்றனர். களைப்பில் நெசவாளர் குடியில் புகுந்து அங்கே நூலுக்குக் கஞ்சிபோட வைத்திருந்த கஞ்சி கண்டனர். பசியால் கஞ்சியை ஆளுக்கு ஒரு கலயத்தில் எடுத்துக் குடித்தனர்.


பாவுக்கஞ்சியை இழந்ததால் ஆத்திரமடைந்த நெசவாளர்கள் கோபம் கொண்டு பாவுக் கஞ்சிக் கலயத்தால் இருவரையும் அடித்தனர். வலுவிழந்திருந்த இருவரும் அடி தாங்க முடியாமல் அங்கேயே விழுந்து உயிர் இழந்தனர். இறந்தவர்கள் நெசவாளர்கள் துணி கொண்டுச் செல்லும் மாட்டு வண்டியை ஆவியாக வந்து மேலே செல்லவிடாது மறித்தனர்.


நெசவாளர்கள் ஆத்திரத்தில் தாங்கள் செய்த குற்றத்தை உணர்ந்து அவர்கள் இருவரிடமும் மன்னிப்புக் கேட்டு அவர்களுக்கு கோவில் கட்டி வழிபாடு செய்வதாக வாக்களித்தனர்.


தாருகன் வதை கதை

காளியால் கொல்லப்பட்ட தாருகன் மேலிருந்து கீழே பூலோகத்தில் விழுந்தான். அவன் உடம்பிலிருந்து வழிந்த குருதியை வாரி வண்டியில் இடவும் அக்குருதியில் இருந்து வண்டி மலையன் பிறந்தான். அவனுக்குத் துணையாக அருகில் வண்டிமலைச்சியும் பிறந்தாள்.


இவர்கள் இருவரும் முப்புராதிகளுடன் சேர்ந்து அவர்கள் இட்ட பணியைச் செய்து வந்தனர். (முப்புராதி )


வழிபட்டால் பயம் நீங்கும்" என்றார். இதனைக் கேட்டவர்கள் வண்டி மலைச்சிக்கு நாகலாபுரத்தில் கோவில் எழுப்பினர். அங்கிருந்து தாங்கள் இடம்பெயர்ந்த இடத்திலெல்லாம் வண்டி மலைச்சிக்கு கோவில் அமைத்து வழிபட்டனர்.


மாற்று கதை வடிவங்கள்

அம்பாசமுத்திரத்தில் பெற்றோரை இழந்து அகால மரணமடைந்த அண்ணன் தங்கை பேயாக வந்து வழிப் போவோரை வழிமறித்துத் துன்புறுத்தினர். அகத்திய முனிவர் அவர்களைச் சாந்தப்படுத்தி, ஊர் மக்களை அவர்களுக்குக் கோவில் எழுப்பும் படிச் சொன்னார் என்ற கதை உள்ளது.

செங்கோட்டையில் உள்ள கதைப்படி வண்டிமலைச்சி பிரம்மனால் தேவலோகத்திலிருந்து பூலோகத்திற்கு அனுப்பப்பட்ட பெண்.

ஆய்வாளர் முத்தலாங்குறிச்சி காமராசுவின் ஆய்வின் படி அம்பாசமுத்திரத்திலுள்ள கதையின் வேறொரு வடிவத்தில் பாகாசுரன் என்ற அரக்கனும் அவனது மனைவி பகாசுரவல்லியுமே வண்டி மலையனும், வண்டி மலைச்சியும்.

பெயர் காரணம்

வண்டிகளை செல்ல விடாமல் மறித்ததால் வண்டி மறிச்சி, வண்டி மறிச்சான் எனப் பெயர் பெற்றனர் என ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.


அம்மன் கதைப்பாடல்


வண்டிமலைச்சி கோவிலில் வண்டிமலையனுடன் கிடந்த நிலையில் (சயன நிலையில்) அமைத்திருப்பாள். வெட்ட வெளியில் தரையில் விழுந்து இறந்து போனதால் இருவரும் மேற்கூரையின்றி தரையில் படுத்த நிலையில் இருப்பர்.


வழிபாடு

வண்டிமலைச்சிக்கு ஆடி, ஆவணி மாதங்களில் செவ்வாய்கிழமை பொங்கல் வைத்து வழிபடுவர். திங்கட்கிழமை வன்னிகுளம் கருப்பசாமிக் கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வண்டிமலையனையும், மலைச்சியையும் அழைத்து வருவர். செவ்வாய் இரவு மாரியம்மன் கோவிலில் இருந்து கும்பம் கொண்டு வருவர். அன்று பொங்கல் வைத்து கோழி, சேவல் இறைச்சியுடன் படைப்பு வைப்பார்கள். மாவிளக்கு கொண்டு வருவார்கள். புதன் மாலை மஞ்சள் நீராட்டு முடிந்த பின் பள்ளயம் பிரித்துக் கொடுத்து வழிபடுவர்.


வழிபடும் ஊர்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம், அயன் பொம்மையாபுரம் போன்ற ஊர்களில் வண்டி மலைச்சியம்மனும், வண்டி மலையனும் கிடந்த கோலத்தில் மல்லாந்து படுத்தப்படி உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள வண்டி மலைச்சி, வண்டி மலையன் சிற்பம் அளவில் பெரியது. தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள நாட்டார்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலில் வண்டி மலையன் உருவம் உள்ளது.


எட்டையாபுரத்தில் வாழும் நெசவாளர்கள் குடியிருப்பு பகுதியில் முன்பு ஒரு வண்டிமலைச்சியம்மன் கோவில் இருந்தது அதிலிருந்த வண்டி மலைச்சியம்மனை இப்போது நின்ற கோலத்திற்கு மாற்றியுள்ளனர். எட்டையாபுரத்தில் மொத்தம் நான்கு வண்டி மலைச்சியம்மன் கோவில் உள்ளது. தூத்துக்குடி விட்டிலாபுரத்தில் ஒரு கோவில் உள்ளது.


குமரி மாவட்டத்தில் வேளாளர்குடியினர் இவர்கள் இருவருக்கும் பூசை செய்கின்றனர். இங்கே கார்த்திகை மாதத்தில் திருவிழா நடைபெறும். சுசீந்திரம், தாழக்குடி கோவில்களிலும் இதுவே நடைமுறை.


நின்ற கோல வண்டிமலைச்சி

எட்டையாபுரத்தில் நெசவாளர்கள் குடியிருப்பு பகுதியில் மொத்தம் நான்கு கோவில்கள் உள்ளன. அதில் இரண்டில் அம்மன் நின்ற கோலத்திலும், ஒன்றில் அமர்ந்த கோலத்திலும் இருந்தது. வண்டி மலைச்சி அம்மன் மட்டும் அனந்த சயனத்தில் இருப்பதைக் கண்ட கோவில் நிர்வாகியான செல்வந்தர் அதனை நின்ற கோலத்தில் மாற்ற எண்ணினார். அவர் எண்ணத்திற்கு ஊரிலிருந்து எதிர்ப்பு வரவே காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குச் சென்று அம்மன் உருவம் நிறுவுவது பற்றிச் சொன்னார். சங்கராச்சாரியார் ஆலோசனை படி பழைய அம்மனை குழி தோண்டிப் புதைக்கும் போது அவர் கொடுத்த எந்திரத்தையும் உடன் புதைத்து புதிய சிலையை நிறுவினார். இதன் பின் வண்டி மலைச்சி அம்மன் தோற்றக் கதையும் மாற்றம் அடைந்தது. உயிர்பலி கொடுப்பது நிறுத்தப்பட்டு அம்மன் தேவலோகத்துப் பெண்ணாக புராணத்தில் உருபெற்றாள்.


பின் சில ஆண்டுகள் கழித்து கோவில் திருவிழாவின் போது சாமியாடியின் மேல் அம்மன் இறங்கி உயிர்ப்பலி கேட்டாள். நிறுத்திவைக்கப்பட்ட பலியை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா என்ற குழப்பத்திற்கு தீர்வாக கோவிலுக்குத் தொலைவில் உள்ள நந்தவனத்தில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டது. இதன் தாக்கத்தால் எட்டையாபுரத்தில் உள்ள சண்முக முதலியார் தெருவில் உள்ள வண்டி மலைச்சி அம்மன் கோவிலையும் நின்ற நிலைக்கு மாற்றியுள்ளனர். மேலத்தெரு மேகலிங்கபுரம் பகுதியில் உள்ள வண்டி மலைச்சிக்கு இம்மாறுதல் இன்னும் நிகழவில்லை


 நாகர்தம்பதிக்கு வரம்

 நாகலோகத்தில் மாணிக்கப்பற்று ஒன்றில் நாகராஜன் - நாகக்கன்னிகை தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. அவர்கள் இருவரும் தங்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி, சிவபெருமானை நினைத்துத் தவமியற்றி வந்தனர். இந்தத் தவத்தின் வலிமையால் கயிலாய மலை இருளடையத் தொடங்கியது. சிவபெருமான் அவர்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்கக் கயிலாயதிலிருந்து கிளம்பினார். இதைக் கண்ட பார்வதி தானும் உடன் வருவதாகச் சொன்னார். அதற்குச் சிவபெருமான் 'இது போன்ற இருள் சூழந்த நிலையில் கயிலாயத்தில் சிவம், சக்தி என்று இரண்டில் ஒன்று இருக்க வேண்டும். இல்லையென்றால், கயிலாயம் முழுக்க இருள் சூழ்ந்து விடும். எனவே நீ இங்கேயே இரு. நான் மட்டும் சென்று அவர்களுக்கு வரமளித்துத்திரும்புகிறேன் என்றார். இதைக் கேட்ட பார்வதி சிவபெருமானிடம் எதிர்வாதம் செய்யத் தொடங்கினார் இதனால் கோபமடைந்த சிவபெருமான் நெற்றிக்கண் திறக்க, அதிலிருந்து வந்த ஒளிபட்டு பார்வதி எட்டுத் தீப்பொறிகளாகச் சிதறினார். சிவபெருமான் அந்த தீப்பொறிகளையும், எட்டு முட்டைகளாக மாற்றித்தன்னுடன் எடுத்துச்சென்றார். நாகத் தம்பதியர் முன்பு தோன்றிய சிவபெருமான் அவர்களிடம், அந்த எட்டு முட்டைகளையும் கொடுத்து, 'இந்த எட்டு முட்டைகளையும் 41 நாட்கள் அடைகாத்து வந்தால், உங்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும்' என்று அருளினார்.

 அஷ்டக்கன்னிகள் 

இதைத் தொடர்ந்து நாகக்கன்னிகைக்கு முதல் முட்டையிலிருந்து வண்டிமலைச்சி, இரண்டாவது முட்டையிலிருந்து முத்தாரம்மாள், மூன்றாவது முட்டையிலிருந்து முப்பிடாதி நான்காவது முட்டையிலிருந்து சந்தனமாரி, இந்தாவது முட்டையிலிருந்து அக்னி மாரி, ஆறாவது முட்டையிலிருந்து கருங்காளி, ஏழாவது முட்டையிலிருந்து பத்திரகாளி, எட்டாவது முடடையிலிருந்து உச்சினி மாகாளி என எட்டுப் பெண் குழந்தைகள் பிறந்தனர். நாகத் தம்பதியர்களும் தங்களுக்குப் பிறந்த எட்டுப்பெண்குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்துவந்தனர். பருவமடைந்த கன்னிகை மனதில், நம் பெற்றோர் நாகப்பிறவிகளாக இருக்க நாம் மட்டும் எப்படி மனிதப் பிறவிகளாகப் பிறந்தோம்?" என்கிற சந்தேகம் எழுந்தது. தங்களின் பிறப்பு குறித்த உண்மையைத் தெரிந்து கொள்ள வரும்பிய அவர்கள், தனித்தனியாக எட்டு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டு வரத் தொடங்கினர். 

மகிடாகரவதம்

இதற்கிடையில், பூலோகத்தில் மச்சரிசி வனத்தில் எருமைத்தலையும், மனித உடலும் கொண்ட மகிடாகரன் எனும் அரக்கன் ஆட்சி செய்து வந்தான். அவன் சிவபெருமானிடம், தனக்குத் தேவர்கள், ஆண்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகளால் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரம் சாகா வரம் என நினைத்து ஆணவமடைந்த அவன் தேவர்கள், மனிதர்கள் என்று அனைவரையும் தனக்கு அடிமைப்படுத்திக்கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். இதனால் வருத்தமடைந்த தேவர்கள் சிவபெருமானிடம், மகிடாசுரனை அதன் பிறகு, சிவபெருமான் தன்னை நினைத்துத் தவமியற்றிய எட்டு கன்னிகைகள் முன்பாகத் தோன்றி, முன்பு கயிலாயத்தில் நடந்ததைக் கூறி, பார்வதிக்குத் தான் அளித்த எட்டு சாபங்களின் மூலம் பிறந்த உங்களால் பூலோகத்தில் இருக்கும் மகிடாசுரன் எனும் அரக்கன் அழிக்கப்படுவான் என்றும் தெரிவித்தார். இதைக் கேட்டு மகிழ்ந்த அவர்கள், 'தாங்கள் விரைவில் மகிபாசுரனை அழிப்பதாகவும், அதன் பிறகு தங்களை சிவபெருமான் மணந்து கொள்ள வேண்டும் என்றும் சிவபெருமானிடம் வேண்டுகோள் வைத்தனர். சிவபெருமானும் அதற்குச் சம்மதித்து அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களை அளித்தார். சிவபெருமான் கொடுத்த ஆயுதங்களுடன் மூத்தவளான வண்டிமலைச்சி தலைமையில் சென்ற எட்டு பெண்களும்மகிடாசுரனை அழித்தனர். அதன் பிறகு அவர்கள், சிவபெருமான் தங்களுக்குக் கொடுத்த வாக்குப்படி தங்களை மணந்து கொள்வார் என்று நினைத்துக் கயிலாயம் நோக்கிச் சென்றார். இதையறிந்த சிவபெருமான், பிரம்மாவை அழைத்து, 'அந்தப் பெண்கள் வரும் வழியினுள்ள வண்டுமலைக்குச் சென்று எட்டு வண்டுகளைப் பிடித்து எட்டுக் குழந்தைகளாக மாற்றி, அவர்கள் கண்பார்வையில் படும்படி போட்டு விடுங்கள்' என்றார். பிரம்மனும் அப்படியே செய்தார். வரும் வழியில் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட எட்டுக் கன்னிகைகளும் தாய்மையுணர்வுடன், ஆளுக்கொரு குழந்தையைக் கையிலெடுத்துக் கொண்டு கயிலாயம் சென்றனர். குழந்தைகளுடன் வந்தகன்னிகைகளைத் தான் மணம் புரிய முடியாது என்று சிவபெருமான் மறுத்தார். இதனால் ஏமாற்றமடைந்த எட்டு கன்னிகைகளும் தாங்களும் பூலோகத்திற்குத் திரும்பிச் செல்வதாகச் சொல்கின்றனர். அப்போது சிவபெருமான் கயிலாயத்திலுள்ள வேள்வித் தீயில் இருந்து தர்ப்பை ஒன்றை எடுத்துப் போடுகிறார். அதிலிருந்து வண்டிமலையான் சுவாமி, வைரவன், அரசமகன் இருளப்பன், சட்டநாதன், சடுகநாதன், சங்கிலிவாய்ப் பூதத்தான், எண்ணிறந்த பேய்ப்படை, இருபத்தியொரு வாதைகள் தோன்றின. அவர்களை வண்டிமலைச்சியம்மனுக்கும் அவரது சகோதரிகளுக்கும் துணையாக அனுப்பிவைக்கிறார். பூலோகம் வந்த அவர்கள் தாங்கள் வந்ததை மக்களுக்குத் தெரிவிக்கும் எண்ணத்துடன், மக்கள் அச்சம் படும்படியாக பல்வேறு செயல்களைச் செய்கின்றனர். அச்சமடைந்த மக்கள் ஜோதிடரை அழைத்துக் காரணம் கேட்டனர். அவர், 'கயிலாயத்திலிருந்து வண்டி மலைச்சி, வண்டிமலையான், உச்சிமாகாளி, வைரவர் போன்றவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களுக்குக் கோவிலமைந்து வழிபட்டு வந்தால் நம் வாழ்வுவளமடையும் என்றார். இதனைக் கேட்ட மக்கள் அந்தப் பகுதியில் வண்டி மலைச்சியம்மன், வண்டி மலையான் ஆகியோருக்குக் கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர். அங்கிருந்து வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்ந்த மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலெல்லாம் வண்டி மலைச்சி அம்மனுக்குக் கோவில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். 

வழிபாடு 

இந்த அம்ன் கோவில்களில், வண்டி மலையான் சுவாமியும் சேர்ந்து இருப்பது போன்ற சிலைகள் மிகப் பெரியதாகக் கிடந்த நிலையில் (சயன நிலையில்) அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட பல்வேறு கோவில்களில் நாகர்கோவில், வடசேரியில் அமைந்திருக்கும் வண்டி மலைச்சியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடை விழா எனும் பெரியல் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.




இந்த வண்டிமலைச்சி அம்மன் பற்றிய வேறு தகவல்கள், கோவில் போட்டோ, கல்வெட்டுகள் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's app எண்ணுக்கு அனுப்பவும் 78269 80901

 

Post a Comment

0Comments
Post a Comment (0)